Friday, September 16, 2011

மால் பூவா


தேவையான பொருட்கள்

பால்---1 லி

ரவை--கால் கப்
மைதா--கால் கப்
சர்க்கரை---2கப்




1லி பாலை அரை லிட்டர் ஆகும் வரை சுண்ட காய்ச்சி தனியாக வைக்கவும். சிவக்க வறுத்த ரவை கால் கப் ,மைதா கால் கப் ,இரண்டையும் பாலில் விட்டு கட்டி இல்லாமல் கிளறவும். தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். கடாயில் நெய், அல்லது எண்ணை பொரிக்க தேவையான அளவிற்கு வைத்து மிதமான தீயில் பொன்னிறமாக பொரிக்கவும். பின் 2 கப் சர்க்கரையை , ஒரு கம்பிப் பதம் வைத்து,பாகு காய்ச்சவும்.ஏலப்பொடி சேர்க்கவும்.   அதில் பொரித்த பூவாக்களை ஊறவிட்டு எடுக்கவும்.முந்திரி பாதாம் சன்னமாக சீவி அலங்கரிக்கவும். ஸ்வீட் தயார்.

Tuesday, June 14, 2011

பச்சை பட்டாணி குருமா.

தேவையான பொருட்கள்

 பச்சை பட்டாணி---1கப்
உருளைக்கிழங்கு நறுக்கியது--1கப்
தேங்காய்ப்பால்---1கப்
வெங்காயம் நறுக்கியது--1கப்
தக்காளி--4
பச்சைமிளகாய்---4
மிளகாய் தூள் --அரைஸ்பூன்
கரம் மசாலா தூள் --1 ஸ்பூன்
இஞ்சி-சிறு துண்டு
பூண்டு--5 பல்
கொத்தமல்லி---1கட்டு
உப்பு ருசிக்கேற்ப

தாளிக்க

பட்டை சோம்பு லவங்கம்


உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி தனித்தனியாக வேகவைக்கவும்.

கொத்தமல்லி, பச்சைமிளகாய்,இஞ்சி அரைக்கவும்.

2 தக்காளியை அரைத்து சாறு எடுக்கவும்.

கடாயில் 2 ஸ்பூன் எண்ணை விட்டு பட்டை சோம்பு லவங்கம் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும். பூண்டு சேர்க்கவும். வதங்கியதும், தக்காளி ,தக்காளி சாறு சேர்க்கவும்.

அரைத்த விழுதை சேர்த்து லேசாக கொதிக்கவிடவும்.

உருளைக்கிழங்கு,பச்சைபட்டாணி சேர்க்கவும்.

உப்பு , கரம் மசாலா சேர்த்து கொதிக்கவிடவும்.

இறுதியாக தேங்காய்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

பூரி, சப்பாத்தி, பிரியாணிக்கு தொட்டுக் கொள்ள ஏற்றது.



Thursday, June 9, 2011

புதினா புலாவ்




  புலாவ் வகைகள் வடநாட்டில் புகழ் பெற்றது. புதினா புலாவ் குழந்தைகளுக்கு ஏற்ற ,விரும்பி உண்ணக் கூடிய சத்தான உணவு.
தேவையானபொருட்கள்                                             

புதினா 1கட்டு
பச்சை மிளகாய்---4
அரிசி---250 கிராம்
தேங்காய் பால் ---200 மி.லி
இஞ்சி, பூண்டு விழுது ---1 ஸ்பூன்
வெங்காயம் -2 நீளவாக்கில் நறுக்கவும்.
உப்பு --1 ஸ்பூன்
எண்ணை ---2 ஸ்பூன்
 
பட்டை சோம்பு சிறிதளவு தாளிப்பதற்கு


புதினா, பச்சை மிளகாயை அரைக்கவும். அரிசியை களைந்து 5 நிமிடம் ஊறவைக்கவும்.
குக்கரில் எண்ணை விட்டு வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அரைத்த புதினா விழுது, தேங்காய்பால், 1 டம்ளர் தண்ணீர் போட்டு கொதிக்க விடவும்.
அரிசியை சேர்த்து கிளறிவிட்டு உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை விடவும்.
புதினா புலாவ் தயார்.
செய்வதற்கு 15 நிமிடம் ஆகும். 4 பேருக்கு பரிமாறலாம்.
தயிர் வெங்காயம், கோபி மஞ்சூரியன் தொட்டுக் கொள்ள ஏற்றது.


Wednesday, June 8, 2011

கர்நாடகா ஸ்டைல் வாழைப்பூ பருப்புசிலி

பருப்புசிலி என்பது கர்நாடகா மாநிலத்தில் அனைவராலும் செய்யப்படும் சத்தான கறி வகை. பருப்புகள்,காய்கள் சேர்த்து செய்யும் போது சத்தும், சுவையும் கிடைக்கும்.


தேவையானவை

வாழை பூ --சிறியது சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலைப்பருப்பு-- 100 கிராம்
துவரம் பருப்பு ---50 கிராம்
மிளகாய் வத்தல்--- 4
உப்பு ----ருசிக்கேற்ப
தேங்காய் துருவல்--- கால் கப்
எண்ணை ---3 குழிக் கரண்டி

தாளிக்க
பெருங்காயம், கறிவேப்பிலை.மிளகாய்

பருப்புகளை ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
பருப்பு ,மிளகாய் வத்தல், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
நறுக்கிய வாழை பூவை குக்கரில் வேகவைத்து கொள்ளவும்.

கடாயில் 2 கரண்டி எண்ணை விட்டு அரைத்த பருப்பை போட்டு நன்கு கிளறவும். மொறு மொறுவென உதிரியாக வர வேண்டும். இதை தனியாக வைத்துக் கொள்ளவும்.
கடாயில் சிறிதளவு எண்ணை விட்டு கறிவேப்பிலை, மிளகாய், பெருங்காயம் தாளித்து வாழைப்பூவைபோட்டு சிறிதளவு உப்பு போட்டு கிளறவும். அதோடு வறுத்து வைத்த பருப்புகள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து விடவும் சுவையான பருப்புசிலி தயார்.
மோர்க்குழம்பு, ரசம் சாதத்திற்கு ஏற்றது.


Monday, June 6, 2011

நன்மை தரும் எளிய விரதங்கள்

மகா லட்சுமி இல்லாத இடம் "இல்லம்" என்று அழைக்கப்படமாட்டாது. அந்த தேவியை மகா சக்தியை மிக எளிதாக வழிபடலாம். மிகுந்த பிரயாசை எல்லாம் தேவையில்லை.கடினமான மந்திர தந்திரங்களும் தேவையில்லை.



 கன்று ஈன்ற பசுவின் சாணத்தை கொண்டுவந்து அதில் அகல் போல் செய்து உடைந்து விடாமல், நிழலில் காய வைக்கவும். வழிபாடு தொடங்கும் முன், பூஜை அறையை சுத்தம் செய்து , கோலமிட்டு ,மகாலட்சுமி படத்திற்கு பூமாலை சூட்டி குத்து விளக்கேற்றவும்.பின்  சாண அகலில்  நெய் விட்டு ,பஞ்சுத் திரி, வாழை தண்டு திரி, தாமரை திரி போன்ற எதாவது ஒன்றை பயன்படுத்தி வௌ்ளிக் கிழமை அன்று விளக்கேற்றி தேவியை வழிபட வேண்டும். தெரிந்த மகாலட்சுமி மந்திரம் கூறினாலே போதும் .அல்லது கீழ் உள்ள மகாலட்சுமி மந்திரம் 11 முறை கூறவும்.


 ஓம் மகா தேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்யை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்


பாயசம், எலுமிச்சை சாதம் அல்லது ஏதாவது பழம் ,வெற்றிலை பாக்கு நிவேதனம் செய்யவும். இவ்வாறு 5,7, 9 வாரங்கள் என முடிந்த அளவு  விளக்கேற்ற அன்னையின் அருள் நிச்சயம் கிட்டும்.
ஒவ்வொரு வாரமும் புது அகல் செய்து தீபம் ஏற்ற வேண்டும் .பழைய அகல் தீபத்தை தண்ணீரில் கரைத்து துளசி மாடம், அல்லது ஏதாவது செடியில் கால்படாத இடத்தில் சேர்க்கவும்.

உருளைக்கிழங்கு அல்வா

உருளைக்கிழங்கை பொடிமாஸ், பொரியல், மசாலா மட்டும் செய்யாமல் வித்தியாசமாய் அல்வா செய்யலாமா



தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு --கால் கிலோ
சர்க்கரை----300 கிராம்
சர்க்கரை சேர்க்காத கோவா---100 கிராம்
பால் ---1கப்
நெய்-- -150 கிராம்
ஏலப் பொடி ---சிறிது
பாதாம், முந்திரி ,கிஸ்மிஸ்---அலங்கரிக்க


உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசிக்கவும். கடாயில் 3ஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
கடாயில் பால், சர்க்கரை ,வறுத்த உருளைக்கிழங்கு சேர்த்து கொதிக்கவிடவும்.
கெட்டியாக வரும் போது, கோவா ,மீதமுள்ள நெய் விட்டு கிளறவும். சுருண்டு வரும் போது ஏலப் பொடி சேர்க்கவும். பாதாம், முந்திரி், கிஸ்மிஸால் அலங்கரிக்கவும். சுவையான உருளைக்கிழங்கு அல்வா தயார்.

Friday, May 27, 2011

சுவை மிகு ராகி அதிரசம்

அதிரசம் பொதுவாக அரிசி மாவில் தான்   செய்வார்கள். ஒரு மாறுதலுக்காக கேழ்வரகு மாவில் அதிரசம் செய்யலாமே

தேவையானவை
கேழ்வரகு மாவு--- 1கப்
வெல்லம் ---1 12 கப்
நெய் ---2 ஸ்பூன்
ஏலப்பொடி சிறிது
எண்ணெய் பொரிப்பதற்கு


step--1வெல்லத்தை தூளாக்கி, தண்ணீரில் கரைத்து மண் இல்லாமல் வடிகட்டவும்.
step --2 அதை பாகு போல் காய்ச்சவும். உருட்டினால் உருண்டு வர வேண்டும் .அது தான் பாகிற்கான பதம்.

step---3  அடுப்பை அணைத்து விட்டு .அதோடு, கேழ்வரகு மாவை போட்டு
கிளறவும். ஏலப்பொடி சேர்க்கவும்.
step--4  மாவு இளஞ்சூடாக இருக்கும் போது நெய் சேர்த்து நன்கு பிசைந்து ,சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி எண்ணையில் பொரிக்கவும்.
step --5  சுவையான, சத்தான கேழ்வரகு அதிரசம் சாப்பிட தயார்.


Thursday, May 26, 2011

பீர்க்கன் காய் தோல் சட்னி

நாம் வீடுகளில் பீர்க்கன் காய் சமைக்கும் போது , சதைப்பகுதியை மட்டும் சமையலில் பயன்படுத்தி விட்டு தொலியை தூக்கி எறிந்து விடுவோம். தொலியில் தான் அதிகளவு மினரல்களும் விட்டமின்களும் உள்ளன. அந்த தொலியை வைத்து சுவையான சட்னி செய்யலாம். சாதத்தில் பிசைந்தும், தோசைக்கு தொட்டுக் கொள்ளவும் மிகவும் சுவையானதாக இருக்கும்.

தேவையானவை
பீர்க்கன் காய் தொலி ---1கப்
கடலைப்பருப்பு--- 2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 3 ஸ்பூன்
மிளகாய் வத்தல்---3
புளி --சிறு கோலி அளவு
உப்பு ---தேவையான அளவு


கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வத்தலை சிறிதளவு எண்ணை விட்டு சிவக்க வறுக்கவும்.
பீர்க்கன் தொலியை சிறியதாக நறுக்கி, சிறிதளவு எண்ணை விட்டு அதையும் மிருதுவாகும் வரை வதக்கவும்.
எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து உப்பு ,புளியுடன் மிக்ஸியில் அரைக்கவும்.
கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.


பிரட் டோஸ்ட் இன் நட் சாஸ்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பும் ஒரு உணவு பொருள் பிரட் டோஸ்ட். சம்பிரதாயமாக வெண்ணையில் வாட்டி ஜாம் வைத்து சாப்பிடுவதை விட சற்று வித்தியாசமாய், சுலபமாய்  டோஸ்ட் செய்யலாமே.

தேவையானவை

பிரட் சைல்ஸ்---4
கன்டன்ஸ்டு மில்க் (மில்க் மெய்ட்)--  5 டேபிள் ஸ்பூன்
ஆப்பிள் ---நறுக்கியது 1கப்
கிஸ்மிஸ்---10
முந்திரி, பாதாம் பொடியாக சீவியது  ---சிறிது
சர்க்கரை---1கப்
வெண்ணை---- 4 ஸ்பூன்


பிரட்டில் வெண்ணை தடவி ,தோசைக்கல்லில் தீய்ந்துவிடாமல் பொன்நிறமாக டோஸ்ட் செய்யவும்.
கடாயில் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதித்து வரும் போது , ஆப்பிள் துண்டுகள், முந்திரி பாதாம், கிஸ்மிஸ் போட்டு கிளறவும். கெட்டியாக வரும் போது வாசனைக்கு சிறிது ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.
தட்டில் ஒரு பிரட் ஸ்லைஸ் வைத்து அதன் மீது 1 ஸ்பூன் மில்க் மெய்ட் போட்டு அதன் மீது சாஸை சிறிதளவு ஊற்றி சாப்பிடவும். சுவையான,சத்தான  பிரெஞ்ச்  பிரட் டோஸ்ட் தயார்.


Wednesday, May 25, 2011

பாகற்காய் புளியோதரை

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் ....இது பழைய பழமொழி.
பாகற்காய் என்றால் வீடே நடுங்கும்....இது புது மொழி.

கசப்பான பாகற்காயையும் சுவையானதாக்க முடியும்
பாகற்காய் புளியோதரை செய்ய தேவையானவை


பாகற்காய் --கால் கிலோ
புளி ---நெல்லிக்காய் அளவு
உப்பு தேவையான அளவு

வறுத்து அரைக்க
கடலைப்பருப்பு --2ஸ்பூன்
மல்லி விதை---4 ஸ்பூன்
மிளகாய் வத்தல்--5
கடுகு--1ஸ்பூன்
வெந்தயம்---அரை ஸ்பூன்

தாளிக்க

கடுகு--1 ஸ்பூன், கடலைப்பருப்பு---2ஸ்பூன், மிளகாய் வத்தல் --2, வறுத்த வேர்கடலை ---2 ஸ்பூன்,கறிவேப்பிலை,

பருப்பு ,மல்லிவிதை, மிளகாயை தனியாகவும், கடுகு வெந்தயத்தை தனியாகவும் வறுத்து பொடி செய்யவும்.
புளியை கெட்டியாக கரைக்கவும்.
பாகற்காயை சுத்தம் செய்து விதை நீக்கி ,நறுக்கி, எண்ணையில் பொரித்து கொள்ளவும்.
கடாயில் தாளிதம் செய்துக் கொண்டு ,கெட்டியாக கரைத்த புளி கரைசலை ஊற்றி ,சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதிக்கும் போது, அரைத்த பொடியை போட்டு கட்டி இல்லாமல் கிளறவும், பொரித்த பாகற்காயை சேர்க்கவும்.  உப்பு சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறவும். 2 குழிக் கரண்டி நல்லெண்ணை சேர்த்து கிளறி இறக்கவும்.


சூடான சாதத்தில் இந்த பேஸ்டிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து கலந்து சாப்பிடவும். 






Monday, May 23, 2011

காலை இளங்கதிர்

மென் தென்றல் குழலும்
பாடும் குயில்கள் கானமும்,       
புள்ளினங்கள் நடனமும்
அற்புதமாய் பங்களிக்க
அன்புடன், அரவணைக்க
மென் நடை பழக வருகிறாள்
சூரியத் தாய்...
காலை இளங்கதிராய்...

கண்டன...மலர்ந்தன
சிற்றிளம் பெண் கொங்கையென.....
தாமரை மொட்டுக்கள்.

அல்லி பூத்ததென
மலர்ந்தது
வளை கர நங்கைகளின்
வண்ணக் கோலங்கள்.....

கண் விழி திறப்பதற்காய்,,,
நான் காத்திருக்க
மென் நகை பூத்தது
மாடியில் நான் வைத்த
ஒற்றை ரோஜா.....





நினைத்தது நடந்திட ......

நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாகும் வேரியங்கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே-----(1)

ராமனாய் வந்து தோன்றி ராவணன் தன்னை வீட்டித்
தராதலம் முழுதும் காத்துத் தம்பியும் தானுமாகப்
பராபரமாகி நின்ற பண்பிளை பகருவார்கள்
நராபதியாகிப் பின்னும் நமனையும் வெல்லுவாரே-----(2)

மேற்குறிப்பிட்ட இரண்டு பாடல்களையும் தினமும் கூறினால் நினைத்து நிச்சயம் நடக்கும். இது என் அனுபவமும் கூட.


சுகப்பிரசவம் உண்டாக

சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும்
வித்தக முனிவரும், விண்ணோர்களும்
நித்தமும் முறை முறை நெருங்கி ஆர்ப்புற
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே
ஒரு பகல் உலகெலாம் உதரத்துள் பொதிந்து
அருமறைக்கு உணர்வு அரும் அவனை அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை
திரு உற பயந்தனள் திறம் கொள் கோசலை.

கர்ப்பிணிப் பெண்கள் இந்த பாடலை கூறினாலும், பிறர் கூறக் கேட்டாலும்
நிச்சயம் சுகப்பிரசவம் உண்டாகும் என்பது ஆன்றோர் வாக்கு.


Saturday, May 21, 2011

பாதாம் கத்லி

வட இந்திய உணவுகளில் தவறாமல் இடம் பிடிப்பவை இனிப்புகள். காஜூ கத்லி, பாதாம் கத்லி போன்றவை குறிப்பிட்டு சொல்லக்  கூடிய சுவை கொண்டவை.


 தேவையான பொருட்கள்

பாதாம்---200 கிராம்
பால் ---1கப்
சர்க்கரை--- 200கிராம்
ஏலப்பொடி,குங்குமப்பூ சிறிது


பாதாம் பருப்பை ஊற வைத்து , பால் சேர்த்து மைய அரைக்கவும்.
கடாயில், அரைத்த விழுது, மீதமுள்ள பால், சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். குங்குமப்பூ, ஏலப்பொடி போட்டு கிளறி  நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிது ஆறியதும் துண்டுகள் போடவும். பாதாம் கத்லி சுவைக்கத் தயார்.


முந்திரி பக்கோடா

சும்மா சும்மா வெங்காய பக்கோடா சாப்பிட்டு போரடிக்குது .இன்னிக்கு வேறு ஏதாவது செய்யலாமா?
முந்திரி பக்கோடா செய்யலாம்


தேவையானவை

கடலை மாவு---200 கிராம்
அரிசி மாவு---50 கிராம்
பச்சை மிளகாய் ---4 பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி ,கறிவேப்பிலை நறுக்கியது சிறிது.
முந்திரி ---100 கிராம்
மிளகாய் தூள் ---2 ஸ்பூன்
எண்ணை பொரிக்க தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

மாவு, பச்சை மிளகாய் ,மிளகாய் தூள், உப்பு ,முந்திரி ,கறிவேப்பிலை, கொத்தமல்லி எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும் .அதோடு சூடான எண்ணை சிறிது விட்டு கலக்கவும். லேசாக தண்ணீர் தெளித்து பிசிறவும். சிறு சிறு உருண்டைகளாக எண்ணையில் பொரிக்கவும்.


Friday, May 20, 2011

ஆலு ,பீஸ் ஸ்ட்யூ

இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவற்றிர்க்கு வித்தியாசமான சைட் டிஷ் இந்த ஸ்ட்யூ வகைகள். எந்த காய்கறி இருந்தாலும் செய்யலாம். அசைவ பிரியர்கள் இதில் காய்களுக்கு பதிலாக சிக்கன், மட்டன் சேர்த்துக் கொள்ளலாம். மிகவும் சுவையாக இருக்கும்.


ஆலு பீஸ் ஸ்ட்யூ

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு ---கால் கிலோ
பச்சை பட்டாணி --1கப்
நறுக்கிய கேரட் --1கப்
 தேங்காய் பெரியது ஒன்று
இஞ்சி சிறு துண்டு,
பச்சைமிளகாய்---4
மிளகு  தூள் 1ஸ்பூன்
உப்பு தேவையானது

உருளைக்கிழங்கை சிறு சதுர துண்டுகளாக வெட்டவும். பட்டாணியை வேகவைக்கவும்.
தேங்காயை அரைத்து பால் எடுக்கவும்.  முதல் பாலை தனியாகவும், 2, 3 ,பாலை தனியாக வைக்கவும்.
2,3 தேங்காய் பாலில் உருளைக்கிழங்கை நன்கு வேகவைக்கவும். பட்டாணி சேர்த்து மசிக்கவும்.காரட் சேர்க்கவும்.
இஞ்சி ,பச்சை மிளகாய், மிளகு தூள் சேர்க்கவும்.
உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
இறுதியில் முதல் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.



Tuesday, May 17, 2011

ஹெல்தியான ப்ரூட் சாலட்

சாலட்    வகைகளில் காய்கறி சாலட், ப்ரூட் சாலட் போன்றவற்றில் தினமும் ஏதாவது ஒன்றை உண்பது மிகவும் நன்று. இது உடலில் கொலஸ்ட்ராலை குறைத்து, சுறுசுறுப்பாக இருக்கச் செய்யும். பச்சையாக உண்பதால் அனைத்துவித மினரல்களும் கிடைக்கும்.

ப்ரூட் சாலட் செய்ய தேவையான பொருட்கள்









வாழை பழம்--1
கறுப்பு திராட்சை---1கப்
 ஆரஞ்சு பழம்--1
பப்பாளி பழ துண்டுகள்--1கப்
மாதுளை முத்துக்கள்---1கப்
தேன் 3 ஸ்பூன்
சாட் மசாலா தூள்--- 2ஸ்பூன்
சிறிதளவு எலுமிச்சை சாறு

பெரிய வாயகன்ற கிண்ணத்தில் எல்லா பழங்களையும் ஒன்றாக கலந்து அதோடு தேன், சாட் மசாலா சேர்த்து கிளறி விடவும். பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக சாப்பிடவும். கூல் செய்ய வேண்டாம் என்றால் அப்படியே கலந்த உடனேயே சாப்பிடலாம்.









Banana Smoothie

இந்த வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும் ,ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் தரும் பழச்சாறுகளை அருந்துவதே சாலச் சிறந்தது.வெயிலி்ல் சென்று வருவதால் ஏற்படும் நீர்ச்சத்து பற்றாக்குறையை(Dehydration) போக்க எளிய வழி பழச்சாறுகள் குடிப்பது. அதற்காக கார்பன் ஏற்றப்பட்ட குளிர்பானங்களை அருந்துவது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும்.

Banana Smoothie/வாழை பழக் கூழ் செய்ய தேவையானவை


வாழை பழம்-2
ஆரஞ்சு சாறு--1கப்
தயிர் ---1கப்
வெனிலா எசன்ஸ் சிறிது
ஐஸ் துண்டுகள் சிறிது
தேன் சிறிது

எல்லா பொருட்களையும், மிக்ஸி அல்லது பிளெண்டரில் 2 நிமிடம் வரை நன்கு அடித்து கலக்கவும். உயரமான கண்ணாடி டம்ளரில் போட்டு , சிறிதளவு புதினா தழையை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு
தயிருக்கு பதிலாக ரெடிமேடாக கிடைக்கும் யோகர்ட் கூட பயன்படுத்தலாம்.



pani puri// பானி பூரி

சாட் வகைகளில் இதுவும் ஒன்று. நம் ஊரிலேயே இப்போதெல்லாம் தெருவோர கடைகளில் கூட பானி பூரி விற்கிறார்கள். வட இந்தியாவில் இதை "கோல் கப்பா " என்று ஆசையோடு அழைத்து வெளுத்து கட்டுவாங்க பாருங்க அதை பார்க்கும் போது , நமக்கே எச்சில் ஊறும். இதை செய்வதும் ரொம்ப ஈஸி

பானி பூரி


பூரி செய்ய தேவையானவை

ரவை---1கப்
மைதா--2 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு சிட்டிகை
உப்பு தேவையான அளவு
பொரிக்க தேவையான அளவு எண்ணை

ரவை,மைதா, சோடாஉப்பு, உப்பு சேர்த்து நன்கு மிருதுவான சப்பாத்தி மாவு போல் பிசைந்து ,ஈரத்துணியால் மூடி 30 நிமிடம் ஊறவிடவும்.
பிறகு சிறு சிறு பூரிகளாக திரட்டி, (ஒரு பூரி ஒரே வாயில் உள்ளே சென்றுவிட வேண்டும் ) அதற்கு ஏற்ப சைஸ் சிறியதாகஇருக்கட்டும்) .எண்ணையில் நன்கு அழுத்தி விட்டு உப்பி வரும் படி பொரித்து எடுத்து சூடு ஆறிய உடன் காற்று புகாத டப்பாவில் வைக்கவும்.

அதன் உள்ளே வைக்க பூரணம்

வேகவைத்த உருளைக்கிழங்கு---3
மிளகாய்தூள் 2ஸ்பூன்
சீரகத்தூள் --1 ஸ்பூன்
கரம் மசாலா--1 ஸ்பூன்(விரும்பினால் மட்டும் சேர்க்கவும்)
உப்பு தேவையானது

உருளைக்கிழங்கை மசித்து ,அதில் மிளகாய் தூள், சீரகத்தூள், உப்பு ,கரம் மசாலா நன்கு சேர்த்து கலந்து வைக்கவும். உருளைக்கிழங்கிற்கு பதிலாக கொண்டைக்கடலை கூட பயன்படுத்தலாம்.

பானி செய்ய தேவையான சட்னி

இதற்கு மூன்று வகை சட்னி செய்வார்கள். புளி சட்னி, கிரீன் சட்னி, ஸ்வீட் சட்னி.
மூன்றையும் கூறுகிறேன் உங்களுக்கு எது விருப்பமோ அதை செய்து கொள்ளவும்.

1 புளி சட்னி
 புளி எலுமிச்சை சைஸ்
கொத்தமல்லி தழை--1கட்டு
புதினா --1கட்டு
பச்சை மிளகாய்---காரத்திற்கேற்ப
 மிளகுதூள்-1ஸ்பூன்
சீரகத்தூள்--1ஸ்பூன்
இஞ்சி சிறு துண்டு
உப்பு தேவையான அளவு

புளியை கெட்டியாக கரைக்கவும். கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பச்சைமிளகாயை அரைக்கவும். புளித்தண்ணீரை கொதிக்கவைத்து அதில் அரைத்த விழுதை போட்டு , தேவையான உப்பு போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

2 கிரீன் சட்னி

கொத்தமல்லி தழை--1கட்டு
தேங்காய் துருவல் --1கப்
பச்சைமிளகாய்--3
உப்பு தேவையான அளவு

எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ,நீர்க்க கரைத்து வைக்கவும்.

3 ஸ்வீட் சட்னி
பேரீச்சம் பழம் கொட்டை நீக்கியது ---கால் கப்
கெட்டியாக கரைத்த புளித்தண்ணீர் சிறிது
வெல்லம் ---1சிறிய கரண்டி
சீரகத்தூள் --1ஸ்பூன்
மிளகாய் தூள் --அரை ஸ்பூன்
உப்பு சிட்டிகை

எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து கரைத்து வைக்கவும்.


பானி பூரி பரிமாறும் முறை

5--6 பூரிகளை தட்டில் வைத்து நடுவில் துளை செய்து பூரணம் வைத்து அதன் மீது நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை, தூவி பானி ( சட்னியை 1 ஸ்பூன் ஊற்றி ) உடன் பரிமாறவும். சட்னி  நீர்க்க இருக்கவேண்டும்.







Monday, May 16, 2011

Glass painting நீங்களே செய்யலாம்

இப்போதெல்லாம் வீட்டை அழகு படுத்திப் பார்க்கவே அனைவரும் விரும்புகிறார்கள். இதற்காக நிறைய பணம் செலவு செய்து கடைகளில் வாங்கி வந்து அழகு செய்கிறார்கள். நாமே எளிதாக கிளாஸ் பெயிண்டிங் செய்யலாம் செய்வது மிகவும் சுலபம். நாமே செய்தது என்ற பெயரும், நன்றாக உள்ளது என்ற பாராட்டும் நிச்சயம் கிடைக்கும். இதற்கு பெயிண்டிங் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பொறுமை இருந்தால் போதும்.


தேவையானவை

கண்ணாடி தேவையான அளவு
விரும்பும் டிசைன்
கிளாஸ் லைனர்
கிளாஸ் கலர்கள் விருப்பமான நிறங்கள்
அலுமினியம் ஃபாயில் கண்ணாடிக்கேற்ப



விருப்பமான டிசைனை கண்ணாடியின் பின்புறம் வைத்து நகராமல் இருக்க  செல்லோ டேப் கொண்டு ஒட்டவும்.
கிளாஸ் லைனரால் டிசைனின் மீது கோடுகள் போல் வரையவும்.
நன்கு காய விடவும்.
கிளாஸ் கலர்களை டிசைனிற்கேற்ப பிரஷ்ஷால் தீட்டவும் அல்லது பாட்டிலுடனே அப்ளை செய்யவும்.
நன்கு காய்வதற்கு முன்பே அலுமினியம் ஃபாயிலை கசக்கி அதன் பின்புறம் ஒட்டவும். பெயிண்ட்டின் ஈரத்திலேயே ஒட்டிக் கொள்ளும்.


விரும்பியவாறு பிரேம் செய்து கொள்ளவும்.


குறிப்பு
கிளாஸ் லைனரில் கோடுகள் திக்காக விழும். மெல்லியதாக வேண்டும் என்று நினைப்பவர்கள், சிறிது பெவிகாலை எடுத்துக் கொண்டு அதில் கறுப்பு நிற பேப்ரிக் கலரை கலந்தால் கெட்டியாகும் .அதை மெஹந்தி டிசைன் போடுவது போல் கோன் தயார் செய்து இந்த கலவையை போட்டு லைனராக உபயோகிக்கவும். தவறு ஏற்பட்டாலும் பிளேட் அல்லது கத்தியால் சுரண்டி எடுத்துவிடலாம்.





Aloo tikki/ஆலு டிக்கி

சாட் வகை உணவுகள் வட இந்தியாவில் பிரசித்தி பெற்றது. பானி பூரி, பேல் பூரி, பாவ் பாஜி ......இப்படி நிறைய உண்டு .அவர்கள் இப்படியான உணவுகளை மிகவும் விரும்பி உண்பர். அதில் ஒரு வகை தான் இந்த
           ஆலு டிக்கி.


தேவையான பொருட்கள்

வேகவைத்த உருளைக்கிழங்கு-- 3
வேகவைத்த பச்சை பட்டாணி--- கால் கப்
கொத்தமல்லி தழை---கால் கப்
இஞ்சி சிறு துண்டு
சீரகம்---கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் விருப்பத்திற்கேற்ப
மிளகாய் தூள்--- 1ஸ்பூன்
கரம் மசாலா தூள்--1 ஸ்பூன்
மிளகு தூள்---கால் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு

அலங்கரிக்க

பொடியாக நறுக்கிய வெங்காயம், வௌ்ளரிக்காய், தயிர், சாட் மசாலா, புளி சட்னி அல்லது சாஸ்

இவை இருந்தால் செய்வது சுலபம்

வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி , நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய் தூள், கரம் மசாலா தூள்,  வறுத்து பொடியாக்கிய மிளகு தூள், சீரகத் தூள் , கொத்தமல்லி தழையில் பாதி,  உப்பு சேர்த்து மசிக்கவும்.

சிறு சிறு உருண்டை போல் செய்து தேவையான வடிவில் தட்டிக் கொள்ளவும்.
 கடாயில் எண்ணை காய வைத்து ,மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

பரிமாறும் முன்
பொரித்த ஆலு டிக்கியின் மீது கொஞ்சம் தயிர், சாட் மசாலா, வெங்காயம், வௌ்ளரிக்காய், கொத்தமல்லி தழை தூவி மீண்டும் சிறிது தயிர் மேலாக ஊற்றி , சாஸ் அல்லது புளிச்சட்னியுடன் பரிமாறவும்.



Instant பீட்ரூட் அல்வா

திடீரென வீட்டிற்கு விருந்தாளிகள் வந்துவிட்டார்கள். கொடுப்பதற்கு எந்த ஸ்வீட்டும் இல்லை. என்ன செய்வது? ரொம்ப குழப்பிக் கொள்ள வேண்டாம். சுலபமாக நிமிடத்தில் அல்வா செய்து நிலைமையை சமாளிப்பதோடு ,சூப்பரா இருக்கு என்ற பாராட்டு மழையும் கிடைக்கும்.

பீட்ரூட் அல்வா செய்ய தேவையானது

பீட்ரூட் பெரியது----1
கோதுமை மாவு ---1 பெரிய கரண்டி அளவு.
சர்க்கரை---1கப் (200 கிராம்)
நெய்---- 100 கிராம்
 கெட்டியான பால் --1கப்

அலங்கரிக்க
ஏலப்பொடி,வறுத்த முந்திரி,பாதாம் ,பிஸ்தா  நறுக்கியது


பீட்ரூட்டை தோல் சீவி ,மிக்ஸியில் ஜூஸ் எடுக்கவும். அதில் கோதுமை மாவை போட்டு கட்டி இல்லாமல் கரைக்கவும். பால் சேர்த்து  கலக்கவும். கடாயில் நெய் ஊற்றி கரைத்து வைத்துள்ள மாவு ,ஜூஸ் கலவையை போட்டு கிளறவும். கொஞ்சம் திக்காகும் போது, சர்க்கரை சேர்க்கவும். நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறவும் கெட்டியாகி சுருண்டு வரும் போது ,ஏலப்பொடி சேர்க்கவும். இறக்கிய பின் பாதாம், முந்திரி, பிஸ்தாவால் அலங்கரிக்கவும்.

குறிப்பு

பாலிற்கு பதில் சர்க்கரை சேர்க்காத கோவாவும் பயன்படுத்தலாம் .அவ்வாறு செய்வதானால் இறுதியில் சுருண்டு வரும் போது கோவா சேர்க்கவும். சுவை கூடும் .


Saturday, May 14, 2011

Spanish மொழி கற்கலாம்

இந்த பதிவில் prepositions தொடர்ச்சியை தந்துள்ளேன்.


The letter is under  your book.-------La carta está en tu libro.(லா கார்தா எஸ்தா என் து லீப்ரோ.)
I am staying at home.------Me quedo en casa.(மி கெதோ என் காசா.)
The driver is in front of the door.----- El conductor se encuentra en frente a la puerta.(எல் கன்துக்தர் சே என்குவந்த்ரே என் பிரன்தே அ லா புஅர்தா.)


I will be there around 3 pm------Yo estaré allí a las 3 pm  ( யோ எஸ்தாரே அயி அ லாஸ் திரேஸ்(3)  பிஎம்மே)
I wasn't there for the past 2 year-------------Yo no estaba allí durante los últimos dos años.( யோ நோ எஸ்தாபா அயி துரந்தே லோஸ் அல்திமோஸ் தோஸ் அன்யோஸ்.)
Within this week I'll finish my work.-------  Dentro de esta semana voy a terminar mi trabajo.(தேன்த்ரோ தே எஸ்தா செமானா வோய் அ தெர்மினார் மி திரபாஹோ)
During the class I can't see you.---Durante la clase no te puedo ver.(துராந்தே லா கிளாசே நோ தே புயதோ வெர்)
I usually go to school by bus.---- Yo suelo ir a la escuela en autobús.(யோ சுயலோ இர் அ லா எஸ்குஅலா என் ஆட்டோ பூஸ்)

The flower is in the garden -  La flor está en el jardín ( லா ஃப்ளோர் எஸ்தா என் எல் ஹார்தின் )
             in the morning--------por la mañana( போர் லா மன்யானா)
             in the afternoon------por la tarde(போர் லா தார்தே)
             in the evening -------por la noche(போர் லா நோச்சே)
             in a box -  en una caja( என் உன காஹா)
             in   India-  en la India(என் லா இந்தியா)
             in Germany -  en Alemania(என் அல்மேனியா)

in my shirt pocket -  en mi bolsillo de la camisa( என் மி போல்சீயோ தே லா கமிசா)
in the wallet -  en la cartera -( என் லா கர்தேரா)
in a building -  en un edificio(என் உன் எடிஃபீசியோ)
He is in the aeroplane-  Él está en el avión .(எல் எஸ்தா என் எல் அவியோன்)


 


இடங்களை குறிக்க, நேரத்தை குறிக்க,  இன்னும் பல இடைச் சொற்கள் பயன்படுத்தப்படுகிறது. வரும் பதிவில் அவற்றை காணலாம்.



 

காட்டன் சாரீஸிற்கு சூப்பராக கஞ்சி போடலாமா?

காட்டன் சாரீஸ்களை கட்டாத, விரும்பாத பெண்கள் இருக்க முடியாது. அழகாக கஞ்சி போட்டு அயர்ன் செய்த சாரீஸ் கட்டிய பெண்களை பார்க்கவே சூப்பராக இருக்கும். இந்த வெயில் காலத்திற்கு காட்டன் சாரிகளே ஏற்றது. நாமே வீட்டில் கஞ்சி போட்டு , அழகாக உடுத்தும்போது  , எல்லோரையும்  புதுப் புடவையா என்று கேட்க தூண்டும்.


 STEP -1

மைதா மாவு அல்லது ஜவ்வரிசி மாவிலேயே கஞ்சி தயார் செய்யலாம்.இதற்காக காஸ்ட்லி ஸ்டார்ச் பவுடர் வாங்க வேண்டாம். 1 டேபிள் ஸ்பூன் ஜவ்வரிசி அல்லது மைதா மாவினை நீரில் கரைத்து, கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் இறக்கவும்.

STEP---2

கட்டிகள் இல்லாமல் வடிகட்டவும். நன்கு உலர்ந்த புடவையை மட்டுமே கஞ்சியில் நனைக்கவும். மிகவும் இறுக்கமாக கசக்கி பிழியக் கூடாது.

STEP---3
டார்க் கலர் புடவைக்கு கொஞ்சம் சொட்டு நீலம் கூட கஞ்சியில் சேர்க்கலாம். கஞ்சியில் நனைத்த பின் , நன்கு உதரி, மடிப்புகளின்றி வெயிலில் உலர்த்தவும்.


STEP---4
 உங்களுக்கு பிடித்த  வாசனை திரவியத்தை(perfumes) கஞ்சியில் சில சொட்டு விடும் போது கஞ்சியின் அழுக்கு வாடை அடிக்காமல் நல்ல நறுமணத்துடன் இருக்கும்.

STEP ---5
நன்கு நீவி அயர்ன் செய்யவும்.


 இளசுகள்   ,""தேரடி வீதியில் தேவதை வந்தா"".....என்று பாடுகிறார்களா ? உங்களை பார்த்து தாங்க.


rajma மசாலா கறி



ராஜ்மா, லெக்யூம்ஸ் என்று சொல்லும் சோயா பீன்ஸ் வகையை சேர்ந்தது. இதில் அதிகளவு புரதம், நார்சத்து, ஃபோலிக் ஆசிட், கால்சியம் ,விட்டமின் பி6 ,மெக்னீசியம், மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இது ,ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்கும், குளுக்கோஸ் அளவை குறைத்து நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கும் ,வந்தவர்களுக்கு அந்த அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது.
          ஹார்ட் அடாக் தடுப்பானாக, சில வகை கேன்சர் தடுப்பானாகவும் இது  செயல்படுகிறது. 1 கப் ராஜ்மா ,45.3 % நார்ச்சத்து கொண்டது. 620 கலோரிகள் தரும்.

ராஜ்மா மசாலா கறி செய்ய தேவையானவை

ராஜ்மா 1கப்
வெங்காயம் நறுக்கியது --1கப்
தக்காளி நறுக்கியது---அரை கப்
இஞ்சி --பூண்டு விழுது ---1 ஸ்பூன்
பச்சை மிளகாய்--2
தனியா தூள்---1 ஸ்பூன்
மிளகாய் தூள் ---1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் ---1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு

தாளிக்க
பட்டை சோம்பு கிராம்பு

அலங்கரிக்க 
கொத்தமல்லி தழை, பிரஷ் கிரீம்


ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைத்து, குக்கரில் வேகவைக்கவும்.
கடாயில் எண்ணை விட்டு தாளித்து ,வெங்காயம் ,வதக்கவும். லேசான பொன்னிறம் வந்தவுடன், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
வதங்கியதும், தக்காளி சேர்க்கவும். நன்கு சுருள வதங்கியதும், வேகவைத்த ராஜ்மா ,
தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, உப்பு போட்டு தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
கொத்தமல்லி தழை, பிரஷ் கிரீமால் அலங்கரிக்கவும்.
சப்பாத்தி, பூரி, புலாவ் போன்றவற்றிர்க்கு தொட்டுக் கொள்ள ஏற்றது.