Saturday, August 29, 2020

 தளர் நடை போடும் சிங்க ராஜாக்கள்





பல கானுயிர் ஆர்வலர்களும் ,வன ஆராய்ச்சியாளர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க ,மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் திரு. ஜெய்ராம் ரமேஷ் ,குஜராத் மாநில முதல்வரிடம் ஒரு கோரிக்கை விடுத்தார். அம்மாநில கிர் காட்டில் வசிக்கும் சில சிங்கங்களை பிடித்து வேறு மாநில காடுகளில் வளர்த்து பெருக்குவது என்பது அவரது கோரிக்கையின் சாரம். கோரிக்கையை கண்டவுடன் கடும் கோபம் கொண்டார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. "என் மாநிலத்தின் தனித்தன்மையை பிறரிடம் அடகு வைக்கக் கூறுகிறீர்களா ? இது குஜராத்தின் சொத்து. இந்துத்துவத்தின் அடையாளச் சின்னம்." என ஏதேதோ, பொறுந்தாத விளக்கங்களைக் கூறி, ஒரு சிங்கத்தை கூட ,தன்னால் அனுப்ப இயலாது என திட்டவட்டமாகக் கூறிவிட்டார். பிரதமர், இறுதியில் தெளிவான காரணங்களைக் கூறி கேட்டுக் கொண்ட போதும் "முடியவே முடியாது" என ஒற்றைக்காலில் நின்று விட்டார்! நரேந்திர மோடியின் செயல்குறித்து மிகச் சிறந்த வன உயிரி மற்றும் சுற்றுச் சூழல் எழுத்தாளரான வால்மீக் தாபர் " எந்த அரசியல் வாதிக்கும் ,சுற்றுச் சூழல் குறித்தோ, வன உயிரிகள் குறித்தோ போதுமான அறிவு கிடையாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அவற்றை அழித்து தங்கள் பர்சை எப்படி நிரப்பிக் கொள்ளலாம் என்பது தான். இந்த சந்தர்ப்பத்தில் மோடியைப் பற்றி கூற ஒன்றுமில்லை. அவரும் அரசியல் வாதிதானே! மேலும் அறியாமை என்ற தகுதியும் கூடவே பொறுந்தப் பெற்றவர்." என விமர்சிக்கின்றார்.
உண்மையில் கிர் காட்டில் சிங்கங்கள் உள் குடும்ப உறவுகளுக்குள்ளேயே ஜோடி சேர்வதால் மரபணு சிதைவுக்கு உட்பட்டு ,உடல் குறையுடைய ,சத்து குறைவான சந்ததியை உருவாக்குகின்றன. அவை வெகு வேகமாக தங்கள் உயிரை இழக்கவும் செய்கின்றன. இதை மனதில் கொண்ட ஆய்வறிஞர்கள் ,பிற மாநிலத்தில் உள்ள சிங்கங்களோடும் ,அல்லது மிருக காப்பகங்களில் வளர்க்கப்படும் சிங்கங்களோடும் உறவு கொள்ள வைக்கும் போது, வேற்று குடும்ப உறவாகிப் போவதால் நல்ல சத்தான குட்டிகள் பிறக்க வாய்ப்பு உண்டு. எண்ணிக்கையும் பெருகும் சாத்தியம் அதிகம் உள்ளது என கூறினர். இதை வனத்துறை அமைச்சரும் ,பிரதமரும் ஏற்றுக் கொண்டாலும் ,மோடி "கெளரவம்" பார்த்து ஏற்க மறுத்து விட்டார்.
2010 கணக்குப்படி கிர் காட்டில் 411 சிங்கங்கள் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ஆசிய சிங்கங்களின் பாரம்பரியம் ,ஆப்பிரிக்காவில் இருந்து துவங்குகிறது. ஆசிய சிங்கங்கள் ஆப்பிரிக்க சிங்கங்களைக் காட்டிலும் நிறத்திலும் ,உருவத்திலும் சற்று வேறுபடுகிறது. ஆப்பிரிக்க சிங்கங்களில் ஆண் சற்று பெரியதாகவும், பிடரி மயிர் அதிகமாகவும் ,சற்று கறுப்பு நிறம் கூடுதலாகவும் இருக்கும். ஆசிய சிங்கத்தின் ஆண் ,சற்று உருவில் சிறியதாகவும், பிடரி மயிர் வெளுத்து, கறுப்பு நிறம் குறைவாகவும் காணப்படும். ஆண் 190--210 கிலோ எடையும், பெண் 120--150 கிலோ எடையும் கொண்டதாக இருக்கும். இவை குழுவாக வாழும். ஆங்கிலத்தில் இதை "pride" என அழைக்கிறார்கள். ஒரு குழுவில் குறைந்தது 6 சிங்கங்கள் இடம் பெற்றிருக்கும். அதில் 2 ஆணாக இருக்கும். சில ஆசிய சிங்கக் குழுவில் ஆணின் பங்களிப்பு என்பது மிகக் குறைவாகவும் ,சில சமயம் இல்லாமலேயே கூட இருக்கும் . ஆசிய பெண் சிங்கங்கள், ஆண்களை கலவியில் ஈடுபடும் காலத்தின் போதோ ,அல்லது பெரும் இரையை வீழ்த்தும் பொருட்டு  மட்டுமே அனுமதிக்கிறது. இவ்வாறான குணம் இரையின் பற்றாக்குறையால் ஏற்பட்ட குணமாறுதல் என சிங்கத்தின் மனநிலையை ஆராய்ந்த டாக்டர். புரூக் கூறுகிறார். சிங்கங்கள் தங்கள் விருப்ப உணவாக மான், கலைமான், காட்டுப் பன்றி மற்றும் மேய்ச்சலில் உள்ள ஆடு, மாடுகளை அடித்துண்ணும்.
சிங்கங்களின் பால் அதிக ஆர்வம் கொண்ட ஜூனாகத் நவாப், கிர் காட்டை உருவாக்கினார். அப்போது அக்காட்டில் வெறும் 13 சிங்கங்கள் இருந்தன.தற்போது   ,புலி, சிறுத்தை, கழுதைப்புலி, போன்றவையும் சேர்ந்து வாழ்வதால், அதிக உணவுப் பஞ்சம் ஏற்படுகிறது. இதன் பொருட்டு சிங்கங்கள் ஊருக்குள் நுழைந்து கால்நடைகளை தாக்குகின்றன. தவிர காடுகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருவதும், ஆக்கிரமிப்பாளர்கள் சட்ட விரோதமாக அமைத்த மின்சார வேலிகள், தாங்கள் பயிரிட்ட பயிர்களை மான்கள் அழிக்காமல் பாதுகாக்க என கூறப்பட்டாலும், அதில் மான்களைவிட சிங்கங்களே அதிகம் சிக்கி இறந்து போகின்றன. இது தவிர சுற்றுச் சுவர் இல்லாமல் தோண்டப்பட்ட கிணறுகளில் தவறி விழுந்தும் இறந்து போகின்றன. சிங்கங்களை போன்று,இன்று அழிவின் விளிம்பில் உள்ள கலைமான், சிறுத்தை, போன்றவைகளும் கிணறுகளில் விழுந்து விடுகின்றன. சென்ற 2010 ஆண்டு மட்டும் 20 கலைமான், 4 காட்டுப் பன்றி, 2 சிறுத்தை, 1 புலி, 3 சிங்கங்கள் இறந்து கிடந்தன.
கிர் காடுகளில் "மால்டு ஹாரில்" நாடோடிகள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எப்போதும் 5 அல்லது 10 பேர் கொண்ட குழுக்களாகவே வசிப்பர். ஒவ்வொரு குழுவும் 50 முதல் 100 கால்நடைகளை தங்கள் வசம் வைத்து வளர்க்கின்றனர். மேய்ச்சலுக்காக காடுகளுக்குள் செல்லும் இவை புற்கள், சிறு கிழங்குகளை அதிக அளவில் உண்பதால் காடுகளில் வாழும் பிற புல் தின்னும் ஜீவராசிகள், கடும் உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றன. இதனால், இவை இறந்து போகும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இதை மட்டுமே நம்பி வாழும் ,சிங்கம், புலி ,சிறுத்தை போன்றவை, நிர்பந்தத்தின் காரணமாக நாடோடிகளின் கால்நடைகளை தாக்குகின்றன. கோபம் கொண்ட அவர்கள் புலால் உண்ணிகளுக்கு மாமிசத்தில் நஞ்சு கலந்து கொன்று விடுகின்றனர். இதில் ஒரு வினோதம் என்ன வென்றால், இந் நாடோடிகள் சிங்கங்களை தெய்வமாக கருதுகின்றனர். தவிர புலால் உண்பதும் இல்லை. வனத்துறை தனிப்படை அமைத்து அவர்களிடம் பேசி சமாதானம் செய்துதனி இடம் ஒதுக்கித் தந்து காடுகளிலிருந்து வெளியேர கட்டாயப்படுத்தினாலும் முழுமையாக வெளியேற மறுக்கின்றனர். சிலர் சட்ட விரோதமாக காடுகளுக்குள் புகுந்து சொந்தம் கொண்டாடுகின்றனர். எதிர் கட்சிகள் இதை அரசியல் ஆக்கிவிடுமோ என மாநில அரசு அஞ்சுகிறது. தர்ம சங்கடத்தோடு இப்பிரச்சினையை தீர்வை நோக்கி செலுத்தாமல், ஏனோ தானோ வென்று கையாள்வது சிங்கங்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குகிறது.


பிரிட்டிஷ் ஆட்சிகாலம் ,பின் மகாராஜாக்களின் காலத்தில் சிங்க வேட்டை என்பது பொழுது போக்கு அம்சம். இதனால் சிங்கங்களின் எண்ணிக்கை வெகு வேகமாக குறைக்கப்பட்டு , அவை தங்கள் இனத்துக்குள் கலவி புரிந்து சத்து குறைவான இனத்தை உருவாக்க 14 வருடம் வாழும் ஒரு ஆண்சிங்கம் 5 வருடத்தில் நோயால் இறந்து போனது. பொதுவாக சிங்கங்கள் 10--12 வருடங்கள் உயிர் வாழும். ஆணை விட பெண் சற்று சிறியதாக இருக்கும். மணிக்கு 81 கி. மீ வேகத்தோடு ஓடும் சிங்கங்களால் சில மீ தொலைவே இந்த வேகத்தை கடைபிடிக்க முடியும். எல்லா மிருகத்தையும் உணவாக உட்கொள்ளும் சிங்கங்கள் ,பற்றாக்குறை காலத்தில் பறவை பூச்சி இனங்களை கூட உட்கொள்ளும். கடும் பஞ்சம் நிலவும் போது ,யானை குட்டி, ஒட்டகக் குட்டி ,நீர் யானை போன்றவற்றையும் தாக்கும். இவை உண்பதைக் காட்டிலும் , ஹைனா என அழைக்கப்படும் கழுதைப்புலி ,பிணந்தின்னிக் கழுகுகள் போன்றவைகளின் வரம்பு மீறிய தலையீட்டின் காரணமாக இரையை விட்டுக் கொடுத்து விட்டு செல்லும் பரிதாப நிலையே அதிகம் நேரும். அப்போது கடும் கோபம் கொள்ளும் ஆண் சிங்கங்கள் கர்ஜிக்கும் குரலின் ஒலி யின் அலைவரிசை 5 கி.மீ தொலைவு வரை கேட்கும். சற்று கட்டை குரலோடு இடைவெளி இருக்கும். பெண்ணோ ஓரிரு முறை மட்டுமே இவ்வாறு கர்ஜிக்கும். அப்போது எதிர்படும் எதையும் கண்மூடித்தனமாக தாக்கத் தயங்காது.
பூனை குடும்பத்தை சேர்ந்த சிங்கங்கள் நல்ல குடும்ப அமைப்பை பேணுபவை. உறுப்பினர்களிடையே ஆரோக்கியமான நட்பு இருக்கும். மகிழ்ச்சிகரமான தருணங்களில் உடலோடு உடல் ஒட்டி உரசுதல் ,நக்குதல், செல்லமாக கடித்தல், முன் கால்களால் வலிக்காமல் அறைதல் ,தலைகீழாக படுத்து கால்களை விரித்தல், என பல மொழிகளில் அன்பையும், உணர்வையும் வெளிப்படுத்தும். வருடம் முழுவதும், கலவியில் ஈடுபடும் சிங்கங்களில் "ரொமான்ஸ்" தன்மை மிகவும் குறைவு. பெண் தயாரான நிலையில் மட்டுமே ஆணை உடலுறவுக்கு அனுமதிக்கும். அந்நிகழ்வும் நம் பார்வைக்கு சற்று முரட்டுத் தனமாகவே இருக்கும். பெண் கீழே அமர ,ஆண் மேலமர்ந்து பெண்ணின் பிடரியை கடித்தவாறு உறவு கொள்ளும். உறவு நிகழ்வு   சில மணித்துளிகளே நிகழும். பல முறை இவ்வாறான நிகழ்வுகள் அரங்கேறும். பல சமயம் "உறவு வலி" தாளாமல் ஆணை தாக்க முற்படும்.சரியான ஒத்திசைவு இல்லாத போது ஆணும் பெண்ணை தாக்கும். பெண்ணின் கர்ப்ப காலம் 110 நாட்கள். 3--4 குட்டிகளை ஈனும் பெண், அவைகளுக்கு 2 வயதாகும் வரை தனது பராமரிப்பிலேயே வைத்திருக்கும். ஆண் உணவை தேடுவதைக் காட்டிலும், தன் எல்லையை பாதுகாப்பதிலும், பெருக்குவதிலும் அதிகம் கவனம் செலுத்தும். சிறு நீரை ஆங்காங்கே பீய்ச்சி " குறியீடு" செய்யும். பெரும்பாலும் பெண்ணே அதிகம் வேட்டையில் ஈடுபடும். புல், புதர், முட்புதர், குற்று மரங்கள், பெரும் மேடாக காட்சி தரும் கரையான் புற்றுகள், பாறைகள் நிரம்பிய தனித்த பகுதி போன்றவைகளை தன் வாழ்விடமாக இவை தேர்வு செய்கின்றன. 11 மாதத்தில் தன் முதல் வேட்டையை துவங்கும் குட்டிகளுக்கு ,சிறுத்தைகள், கழுதைப்புலி, நரி, மாற்று குழுவைச் சேர்ந்த ஆண் சிங்கங்களின் வடிவில் பெரும் ஆபத்துக்கள் ஏற்படுகின்றது. பல சமயம் குட்டிகளின் உயிரிழப்பில் இவை முடிவடைகிறது.
தட்ப வெப்ப மாறுதல், சுற்றுச் சூழல் சீரழிவு போன்றவை எண்ணிக்கையை வெகுவாக குறைக்கின்றன. வறட்சி காலத்தில், சிங்கங்கள் அதிக தொற்று நோய்களுக்கு ஆளாகும். 1990---2001 வரை ஆப்பிரிக்காவில் அதிக சிங்கங்கள் இறந்து போயின. வறட்சி காலத்தில் பிறக்கும் குட்டிகள் அதிக சத்து குறைபாடு கொண்டதாகவும், தொற்று நோய் வைரஸ்களை தனது மரபணுவில் சுமந்தும் வருவதால் உடனடி இறப்போ ,அங்கஹீனமோ ஏற்படுகிறது. இது மனிதன் எய்ட்ஸ் நோயால் இறந்து போவதற்கு ஒப்பானது என்கிறார் வால்மீக் தாபர். சிங்கங்கள் 90% மனிதக் கொல்லி அல்ல. வயதானவை, பற்கள் தேயுற்றவை, கிட்டத்தட்ட வேட்டையாடும் திறனை இழந்து, பார்வைக்குறைவு ஏற்பட்டு குடும்பத்திலிருந்து அன்னியப்படுத்தப்பட்டவை, மனநிலை பிறழ்வுற்றவை போன்றவையே மனிதனை தாக்கி உண்பதாய் ஆராய்ச்சியாளர் ஜெஃப் கார்வின் கூறுகிறார்.
சிங்கங்கள் பெரும்பாலும் தங்கள் நாட்களை ஓய்வு எடுப்பதில் கழிக்கின்றன. ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தூங்கும். அதே சமயம் தேவைக்கேற்ப ஒரு நாள் முழுதும் வேட்டையிலும் களமிறங்கும். சுமாராக, ஒரு ஆய்வுப்படி ,ஒரு நாளில் 2 மணி நேரத்தை நடையிலும், 50 நிமிடங்களை உணவு உண்பதிலும் செலவிடுகிறது. சிங்கங்களின் அழிவை ஆராய்ந்த விஞ்ஞானிகள் சோதனைச் சாலையில் சில சிங்க வகைகளை உருவாக்கினர். அவை "Barbary Lion","Cave Lion" என அழைக்கப்படுகின்றன. இத்திட்டம் பெரும் தோல்வியில் முடிவடைந்தது. இச்சிங்கங்கள் காப்பகங்களில் மட்டுமே வைத்து வளர்க்கப்படுபவையாகவும், காட்டு சிங்கங்களில் இருந்து மாறுபட்ட உருவ அமைப்பு ,குணம், நிறம், பாலுணர்வு தன்மை கொண்டவையாகவும் இருக்கிறது. கென்யா, டான்சானியா போன்ற நாடுகளில் காப்பகங்களில் இவ்வகையினம் காப்பாற்றப்படுகிறது. இங்கு ஆண் சிங்கத்தையும், பெண் புலியையும் இணை சேர்த்து புதிய இனத்தையும் உருவாக்கி, "லைகர்" என பெயரிட்டனர். இவையும் தோல்வியான ஒரு முயற்சியே!
தற்போது ஆப்பிரிக்கா ,ஆசியாவில் மட்டுமே காணப்படும் சிங்கங்கள் வட அமெரிக்கா, கீழ்திசை கிழக்கு நாடுகள் ,மத்திய கிழக்கு நாடுகள் ,யுரேசியா, வடக்கு ஐரோப்பா ,பெரு என விரிந்து பரந்த சாம்ராஜ்ஜியத்தில் உலா வந்தவை. தற்போது முற்றிலும் அழிக்கப்பட்டு ,ஒரு குறுகிய நிலப்பரப்பில் ,குறைந்த எண்ணிக்கையில் உலாவந்து, வரலாற்றுப் பதிவாக மட்டுமே இடம் பெற்றுள்ளன.
மனித வாழ்வோடு அதிகம் இணைத்து பேசப்படும் ஒரு மிருகமாய் ஆண் சிங்கங்கள் திகழ்கின்றன. அவனது இலக்கியம், ஓவியம், நாட்டுச் சின்னம், பொழுதுபோக்கு அம்சங்கள், தன் குணம், தன் வாரிசின் குணம், பிறப்பு, நடை, என அனைத்திலும் சிங்கத்தை ஒப்பிட்டு பார்க்கும் மரபை நாம் அனைவரும் அறிவோம். இவ்வாறான ஒப்பீட்டுத் தன்மை உலக நாடுகள் அனைத்திலும் காணப்படுகிறது. சிங்கத்திற்கு அடுத்து யானை அதிகம் ஒப்பீட்டுக்கு உள்ளாகி வருகிறது. பறவைகளில் மயிலும், கிளியும், மலர்களில் தாமரையும், அல்லியும் அதிகம் இடம் பெறுகின்றன.இந்தியாவில் பரதத்தின் உச்சக் கட்ட திறன் ஆடிக் கொண்டே ,தன் கால்களால் வண்ணப் பொடி கொண்டு சிங்கத்தை ஓவியமாய் தீட்டிக் காண்பிப்பது தான்!
kannan233@gmail.com       எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா

படங்கள் உதவி இணையம்

 கொண்டலாத்திப் பறவைகள்




                           ஒரு மழை கால இரவில்  சரவணன் இறந்து விட்டதாக என் அண்ணன் கூறினார். நானும் என் ஆத்ம நண்பன் சரவணனும் மூன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தோம். அப்போதே கவிதைகள் எழுதுவதில் வல்லவன். புத்தகப் பிரியன். அதே வேகத்தில் செல்வியின் மீது காதல் கொண்டான். அவளும் எங்களோடு ஏழாம் வகுப்பு படித்த சக மாணவி. அவளின் கடைக்கண் பார்வைக்கு அவன் ஏங்க, நண்பனாகிப் போனதால் அவன் காதலுக்கு உதவுவதில் நானும் பல உத்திகளை கையாள்வதை எனது தலையாய கடமையாக கொண்டிருந்த தருணங்கள் அது. ஒரு நாள்  நோட்டு பேப்பரை கிழித்து கடகடவென்று கவிதை ஒன்றை எழுதினான்.....
         கொண்டலாத்தி பறவை போல
வளஞ்சி ,நெளிஞ்சி ஆடுதடி
உன் இடுப்பும், என் மனசும் .........என்று

அந்த கவிதை வரிகளில் மயங்கிய நான் ஒரு தூதுவனாகிப் போனேன். அந்த பேப்பரை அவளிடம் கொண்டு கொடுக்க ரொம்பவும் யோக்கியமாய் என் தமிழ் ஐயா சுப்பையாவிடம் கொடுத்துவிட, எங்கள் இருவரது பெண்ட்டையும் நிமிர்த்தி விட்டார். மாலை பள்ளி விட்டவும் எங்களை அழைத்து ,பிரமாதம்டா வார்த்தை கோர்வை இந்த வயசிலேயே நல்லா வந்திருக்கு அதை சல்லித்தனமான மேட்டருக்கு பயன்படுத்தாதே....முயற்சி பண்ணு....பெரிய ஆளா வருவே  என்று தோளில் தட்டிக் கொடுத்தார். ஆனால் அன்றோடு அவனது கவிதையும், காதலும் ஏனோ அற்றுப் போனது.... ஒரு வாரத்தில் கிணற்றில் குளிக்கச் சென்றவன் நீரில் மூழ்கி இறந்தே போனான்.....இத்தனை வருடங்களானாலும் அவனையும், அவனது கவிதையையும் நான் மறக்கவே இல்லை. கொண்டலாத்தி பறவையை எப்படி உதாரணப்படுத்தினான் என்பதும் இன்று வரை புரியவில்லை. !
                  பொதுவாக என் பிரயாணங்களை காலை நேரம் தான் வைத்துக் கொள்வேன் அப்போதுதான் பல பழமையான ,வித்தியாசமான கோவில்கள், இயற்கை அழகு ,பறவைகள் என வேடிக்கை பார்த்து செல்ல முடியும். சென்ற மே மாதம் எனது சென்னை பயணத்தின் போது மணப்பாறை அருகே அமைந்துள்ள மலைமேல் அகத்தீசுவரர் கோவிலுக்கு சென்றேன். தன்னந்தனியாக அமையப்பெற்ற பழமையான, சாஸ்த்திரப்படி அமைக்கப்பட்ட கோவில் என்னை மிகவும் கவர்ந்தது. அழகிய சிற்பங்கள், ஏகாந்தமாய் வழிபட ஏற்ற சந்நிதி, ஆள் நடமாட்டமே இல்லாமல் இருப்பதால் இன்னும் புனிதத்துவம் மலினப்படுத்தப்படாமல் உள்ளது. கோவிலின் மதிற் சுவரெங்கும் சிறு துளைகள் , அதில் ஏராளமான கொண்டலாத்திப் பறவைகள்......!
                     ஐநாவின் பறவைகள் ஆய்வு நிறுவனம் ஆசிய அளவில் இது அழிந்து வரும் பறவையினம் என்ற போதிலும், அப்படியெல்லாம் இல்லை இங்கு ஏராளமாக உள்ளது என்கிறது இந்திய அரசு. பஞ்சாப் தனது மாநிலப்பறவை அந்தஸ்தை இப்பறவைக்கு தந்து கௌரவித்துள்ளது. மற்ற பறவைகளைப் போல் இதை மிகச் சாதாரணமாக காண முடியாது. மரங்கொத்தி இனத்தை சேர்ந்த இவைகளை கும்பலாக கோவிலில் காண நேர்ந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.
                    பறவைகளைப்பற்றிய ஆய்வும் குறிப்பு சேகரித்தலும் சுமேரிய நாகரீக காலத்தில் கி.மு 3500----2400 ல் துவங்கியது என்கிறார் சார்ஜன்ட் ஜோனாதன் டிரஷன் டிரண்ட். இவர் அமெரிக்க ராணுவ வீரர். சதாம் உசேனுக்கு எதிரான அமெரிக்க போரில் ஈராக்கிற்கு சென்றவர். போர்க்காலத்திலும் அரேபிய பறவைகளைப்பற்றிய குறிப்புகளை சேகரித்து கட்டுரைகள் எழுதி தன் மன பதட்டத்தைக் குறைத்துக் கொண்டதாக கூறுகிறார்.  சதாம் உசேனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு, அங்குள்ள ஈச்ச மரங்களும், மற்ற மரங்களும் அழிக்கப்பட்ட போது அங்கிருந்த 40,000க்கும் மேற்பட்ட 42 வகை பறவைகள் இடம் பெயர்ந்தன. தவிர அங்கு பறவைகளை நாட்டு மருத்துவர்கள் எவ்வாறு மருந்து தயாரிக்க பயன்படுத்துவர் என்பதையும் சுவைபடக் விவரிக்கிறார். அங்கு கொண்டலாத்தி பறவைகளை பிடித்து அதன் தசை, எலும்புகளிலிருந்து ஆண்மை விருத்தி லேகியம் ,ஆண் உறுப்பின் நீடித்த விரைப்பு தன்மைக்கு எண்ணெய் போன்றவை தயாரிக்கப்படுவதை தான் பார்த்ததாகவும், அதற்காக பல பறவைகள் கொல்லப்படுவதாகவும் வருத்தத்தோடு கூறுகிறார்.


              கொண்டலாத்திகள் , மண் கொத்திகள் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு நடுத்தர அளவிலானது. இது 25---35 செ.மீ , இறகுகளை விரிக்கும் போது 45---50 செ.மீ நீளமும் கொண்டது. நன்கு வளர்ச்சியடைந்த பறவையின்  எடை அரைக் கிலோ மட்டுமே.  இவை மிகுந்த கூச்ச சுபாவமும், படபடப்பு தன்மையும் கொண்டவை. கும்பலாக வாழ்ந்தாலும் ஒற்றுமையாக வாழாது. அடர்ந்த மரங்கள் ,குளம், ஓடை அல்லது நீர் வரத்து உள்ள இடங்களையே தனது இருப்பிடமாக தேர்ந்தெடுக்கும். இதன் தலையில் அமையப்பெற்ற அழகிய கொண்டையாலேயே இவற்றுக்கு இப்பெயர் வந்ததோ என் வியக்கும் அளவிலான கொண்டைகள் உண்டு. தன் வலிய வளைந்த அலகுகளைக் கொண்டு மண்ணைப் பிளந்து நண்டு, புழு, பூச்சியினங்களை பிடித்து உண்ணும். அப்போது கொத்துவதற்கு ஏதுவாக இக்கொண்டைகள் பயன்படுகின்றன. வயல்வெளிகள், தோட்டங்களில் உள்ள பூச்சிகள், கூட்டுப்புழுக்கள், முட்டைகளை அழித்து விடுவதால் இவை விவசாயிகளின் உற்ற நண்பன் என்று அழைக்கப்படுகிறது.
               வண்ண கலப்பும், இறகு அமைப்புகளும், பார்ப்பதற்கு ஏதோ ஒரு வெளிநாட்டுப்பறவை போல காட்சியளிக்கும்.  பிற பறவைகளைப் போலவே இதன் காதல் லீலைகள் இருக்கும். காதல் காலங்களில் மட்டுமே ஆண்--பெண் இணைந்திருக்கும். இது தற்காலிக உடன்படிக்கையே. மரப்பொந்து, சுவற்றில் காணப்படும் ஓட்டைகள், அல்லது பிற பறவைகளின் கூடுகளை ஆக்கிரமித்து ,அதில் வெளிர் நீல நிற முட்டைகளை இடும். 4 அல்லது 5 என்ற எண்ணிக்கையிலேயே இருக்கும். 18 நாளில் பொரிந்துவிடும். குஞ்சுகள் ஒரு மாதத்தில் தாங்களாகவே இரை தேட துவங்கும். அது வரை அவை தாய், தந்தையரின் பராமரிப்பில் இருக்கும்.
                 குஞ்சுகள் உள்ள கூடுகள் துர் வாடை கொண்டிருக்கும். பெண் குருவியின் கழுத்தருகே உள்ள ஒரு சுரப்பியிலிருந்து வெளிவரும் திரவமே இந்த அழுகிய அறுவறுப்பான வாடைக்கு காரணம். இது எதிரிகளிடமிருந்து தன்னையும், குஞ்சுகளையும் காத்துக் கொள்ளும் ஒரு உத்தியே. தவிர பல துர்நாற்றமடிக்கும் பொருட்களையும் கொணர்ந்து கூட்டுக்குள் அடைத்து வைக்கும். இதனால் குஞ்சுகளுக்கோ பறவைகளுக்கோ எந்த வித தொற்று வியாதியும் ஏற்படுவதில்லை. இதையும் மீறி எதிரிகள் நுழைய முற்படும் போது குஞ்சுகளே சுமார் 18 விதமான குரலோசைகளை எழுப்புகின்றன. இவை கேட்பதற்கு நாராசமாகவும், பயமாகவும் இருக்கும். செர்ரி, பிளம்ஸ் போன்ற இனிப்பும் புளிப்பும் பலந்த பழங்களை விரும்பி உண்ணும். ஆணே தலைமை தாங்கும். பெண்ணை அடையும் முயற்சியில் இரு ஆணிற்கிடையே ஏற்படும் தகறாரில் ஏதாவது ஒன்று மடியும். அலகால் ஒன்றையொன்று குத்திக் கொள்வதால் இவ்வாறு நிகழ்கிறது. பெண்கள், பிற குஞ்சுகளை கொல்வதும் உண்டு. இதுவே இதன் இனப்பெருக்க குறைவுக்கு காரணம். மேலும் கூட்டில் சேமித்து வைக்கப்படும் உணவினை எடுப்பதற்கு வரும் இவ்வினத்தின் பிற பறவைகளாலேயே குஞ்சுகளும், தாயும் கொலை செய்யப்படுவதும் உண்டு
                     பல்வேறு குரல் பாவங்களை உருவாக்கும் இவை, எப்படியாயினும் மூன்று முறை என்ற அளவீட்டிலேயே இருக்கும். குரலிசை மாறுபாடு, தான் சந்திக்கும் சூழலின் தன்மையை பிரதிபலிப்பதாக இருக்கும். உதாரணமாக கூட்டில் அடைகாத்துக் கொண்டிருக்கும் பெண்ணை பிற ஆண் சந்திக்கும் போது ,பெண் தகரம் தேய்க்கப்படம் போது எழும் ஒலி போல க்ரீச் ...க்ரீச்...க்ரீச் என தனது இறகுகளை படபடவென அடித்து ஒலி எழுப்பும்.


                    தனது உடலை சூரிய ஒளியில் சூடேற்றிக் கொள்ளும் போது முழு இறகுகளையும் விரித்து படுத்து கிடக்கும். இது பிற பறவைகளுக்கு உதாரணமாக கொக்கு, காக்கை, போன்றவற்றிர்க்கு விநோதமாக தெரிவதால் அவை, இவற்றின் அருகில் வர அஞ்சுகின்றன. விருட்டென்று அதிக வேகத்துடன் பறக்கும் கொண்டலாத்திகள் பருவ நிலை மாற்றத்தின் போது கண்டம் விட்டு கண்டம் கூட செல்லும் என உறுதியாக கூற முடியாவிட்டாலும் மிக அதிக உயரத்தில் பறக்கும் இயல்பு கொண்டவை என்கிறார் டிரண்ட். அப்போது வல்லூறுகள் போல் இறகுகளை அசைக்காமல் விரித்தவாறே சில நிமிடங்கள் ஓய்வெடுப்பதும் ,பறக்கும் போதே தூங்கிக் கொள்வதும் உண்டு.
                 அரிய, அழகிய இப்பறவை பண்டைய எகிப்திய இலக்கியங்களில் ஒரு கதாபாத்திரமாகவே சித்தரிக்கப்படுகிறது. இஸ்ரேல் நாடு ,சமீபத்தில் தன் நாட்டின் தேசிய பறவையாக அங்கீகரித்து கௌரவித்துள்ளது. நம் சிற்றிலக்கியத்தில் ஒன்றான குற்றாலக் குறவஞ்சியில் வேட்டைக்காரனான சிங்கனும், சிங்கியும் இப்பறவை  குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள். இன்னும் பல பண்டைய உலக இலக்கியங்களிலும் இவை வேறு பெயர்களில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று ....?

எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா          kannan233@gmail.com     

படங்கள் உதவி இணையம்  

 ராஜ நாகம் --------ஆசிய அழகு






                  மனித பரிணாம வளர்ச்சி,அவன் உருவாக்கிய சமுதாய தோற்றம் அதில் இடம் பெறும் பல்வேறு நிகழ்வுகள் என பல கோணங்களில் சுவைபட ஆராய்ந்த என் மதிப்புக்குரிய ஆய்வாளர் டெஸ்மாண்ட் மாரீஸ் உயிரினங்களின் பங்கீடு அவை மனிதனுக்குள் உருவாக்கிய தாக்கம் குறித்தும் மிக நீண்ட கட்டுரை எழுதியுள்ளார் .அதில் அவர் கூறும் ஒரு தகவல் என்னை மிகவும் ஆச்சரியத்திற்கு உட்படுத்தியது .மூன்று நான்கு வயது குழந்தை யானையை பார்த்தவுடன் ஆச்சரியம் தோய விரிந்த கண்களுடன் அதன் துதிக்கையை பிடிக்க முயன்றதாம். அதே சமயம் நாகப் பாம்பை பார்த்தவுடன் ,அதை நெருங்க தயக்கம் காட்டியது. சில நிமிடங்களுக்குப்பின் தன் அருகில் இருந்த குச்சியை அதன் மீது வீசி எறிந்தது. அதாவது யானையோடு நேசத்தையும் பாம்போடு துவேசத்தையும் காட்டும் அக்குழந்தையின் பண்பு அதன் குரோமோசோம்களோடு பதிந்து வந்துள்ளது என்பதை நிரூபிக்க முயல்கிறார் மாரீஸ்.
            ஒக்கலஹாமா பல்கலைக்கழக, ஊர்வன குறித்த ஆய்வு மாணவனான டேரில் மாண்ட் ,பாம்பின் குட்டிகள் சாலைகளை கடப்பதில்லை என தீர்மானமாக எழுதிய கட்டுரையை நான் படித்தேன். சற்று யோசித்து பார்க்கும் போது ஓரிரு நிகழ்வுகள் அன்றி பெரும்பாலும் பாம்பின் குட்டிகளை சாலையில் நாம் பார்ப்பது அரிது . நகர்மயமாக்கப்பட்ட நம் சூழல் பாம்பினத்தையே அப்புறப்படுத்திவிட்டது என்பது மற்றுமொரு நிதர்சனம். பாம்பினத்திற்கு மனிதனைக் கண்டவுடன் ஒதுங்கிப் போகும் எண்ணமே பிரதானமாக தலைத் தூக்கும். கட்டாயச் சூழலில் மட்டுமே அவை தன்னை காத்துக் கொள்ளும் பொருட்டு கடிக்க முயல்கிறது.


              பாம்பினத்தின் மிகவும் கம்பீரமான, அழகும் ,ஆச்சரியமும் பயமும் ஒருசேர ஊட்டக் கூடிய ராஜநாகத்தை சென்ற வருடம் முட்டுக்காடு முதலைகள் சரணாலயத்தில் பிடிபட்டு கூண்டில் அடைக்கப்பட்டிருந்தை காண நேர்ந்தது. அதன் அனைத்து தன்மைகளையும் இழந்து மிகவும் சோர்வான நிலையில் பார்த்தது இன்றளவும் மிகுந்த வேதனை தருகிறது.
              உலகில் மிகவும் வீரியமான விஷமுடைய பாம்பு வகைகளில் ராஜநாகம் முதலிடம் பிடிக்கிறது. ஆப்பிரிக்காவின் பிளாக் மாம்பா வகையை விட ஒன்றரை மடங்கு அதிக வீரியம் கொண்ட இவ்வகை பாம்புகள் இன்று அழியும் நிலையில் உள்ளது. இதை ஐநாவின் உயிரின காப்பக அமைப்பு அழியும் நிலையிலுள்ள உயிரினம் என அறிவித்துள்ளது. "ஆசியாவின் அழகுப்பாம்பு " என நான் அழைக்கும் இவ்வகை கேரள கர்நாடக காடுகளில் வாழ்கின்றன. தமிழகத்தில் இவை அங்கொன்றும் இங்கொன்றுமாய் தென்பட்டாலும் கிட்டத்தட்ட முற்றிலும் அழிந்தே போய்விட்டது எனலாம். சுமார் 18 அடி நீளமும் ,6--9 கிலோ எடையும் கொண்ட இப்பாம்புகள் கடித்தால் 15 நிமிடத்தில் மரணம் நிச்சயம் என்கிறது பாம்பியல் துறை. ஒரு முறை கொத்தும் போது சுமார் 600 மி.கி விஷத்தை உமிழ்கிறது. இது 60 நன்கு வளர்ந்த மனிதனை அல்லது ஓர் முதிர்ந்த யானையை கொல்ல போதுமானது.  இதன் விஷம் பிற பாம்புகளின் விஷத்தை விட சற்றே வீரியம் கூடுதலாக இருப்பினும் ,அதிகபட்ச மிரட்சி, பயம் போன்றவை இதய படபடப்பை துரிதப்படுத்தி விஷத்தை வெகு சீக்கிரத்தில் நரம்புகளின் ஊடாக கொண்டு சென்று மூளை ,இதயத்தை செயலிழக்கச் செய்கிறது என்கிறார் கௌரி சங்கர். இவர் புகழ் பெற்ற உயிரின ஆய்வாளரான ரோமுலஸ் விட்டேகரின் மாணவராவார். தனது குருநாதரோடு இணைந்து ராஜநாகங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்பவர். அகும்பே ஆய்வு நிறுவனம் என்ற பெயரில் பாம்பினங்களை பாதுகாக்கும் அமைப்பை விட்டேகருடன் இணைந்து ,அமைத்து கர்நாடகத்தில் பரவலான விழிப்புணர்வை மாணவர்களிடம் பரப்பி வருகிறார். உண்மையில் இவை மனிதர்களை கடிப்பது அபூர்வம். கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை 4 பேர்களை மட்டுமே கடித்துள்ளது என்கிறது ஓர் ஆய்வறிக்கை.
                   காடுகள் அழிப்பினால் இவை பலமுறை வீடுகளுக்குள் நுழைந்து விடுகின்றன. பலத்த தாக்குதலுக்கு ஆளாகி பல இறந்தும் ,சில ஊனமுற்றும், எஞ்சிய சில பிடிபட்டு காடுகளில்அல்லது வேறு பகுதிகளில் கொண்டு சென்று விடப்படும் போதுமிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றன. காப்பகங்களில் உள்ளவையும் இது போன்ற மன உளைச்சலிலிருந்து தப்புவதில்லை. தங்கள் எல்லைகளை மறந்து, உணவுக்காக திக்கு திசை தெரியாமல் அலைந்து பிற பாம்பினங்களோடு சண்டையிட்டு ,மிகக் குறுகிய வயதிலேயே உயிரிழக்கின்றன என்கிறார் கௌரி சங்கர். பிடிபடும் அல்லது இடமாற்றத்திற்கு உட்படும் ராஜநாகங்கள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளார். அதில் அவைகளின் தலையில் ரேடியோ சிப் பதித்து அவற்றின் நடமாட்டம், எதிர் கொள்ளும் பிரச்சினை போன்றவற்றை ஆய்ந்து அறிக்கை சமர்பித்துள்ளார். அதில் அவை நிம்மதியற்று ஒரு சொட்டு தண்ணீர் அருந்த சுமார் 30 கி.மீ தொலைவு கூட ஊர்ந்த வாறே உள்ளதை பதிவு செய்துள்ளார். மிகுந்த கோபம், பசி, அயர்ச்சி அவற்றின் இறப்புக்கு வழி வகுக்கின்றன என்பது அவரது அறிக்கையின் நிறைவுப்பகுதியாக உள்ளது.
           ராஜநாகங்கள் ,தன் வாயை இயல்பை விட ஐந்து மடங்கு திறக்கும் வல்லமை கொண்டது. வாய்ப்பகுதியைச் சுற்றி அமைந்துள்ள சவ்வுகள் மிகுந்த நெகிழ்வுத்தன்மை கொண்டது .எனவே தான் இவைகளால் எவ்வளவு பெரிய இரையையும் விழுங்க முடிகிறது. பாம்பினங்களில் பாம்புகளையே தனது உணவாக கொள்ளும் ஒரே இனம் ராஜநாகம். குறிப்பாக சாரைப்பாம்புகளையே அதிகமாக உணவாக்கிக் கொள்கிறது. சாரைப்பாம்புகள் கிடைக்காத சமயத்தில் மட்டுமே இவை மற்ற பாம்புகள், சிறு உயிரனங்களான ஓணான் ,தவளை, சிறு குருவிகளை விருப்பமில்லாவிட்டாலும் இரைக்காக உட்கொள்கிறது. பொதுவாக  உணவாக மாறும் பாம்புகள் ராஜநாகத்தை கண்டவுடன் ,பதற்றத்தில் எதிர்ப்பை விட்டுவிட்டு தாமாகவே இறப்பை ஏற்றுக் கொள்வது போல் தோன்றும். ஒருமுறை நன்கு உண்ட பின் பல நாட்களுக்கு இவை உணவெடுப்பதில்லை. அதிக தண்ணீர் வளமும் ,அடர் வனப்பகுதியும் இவை வாழ வசதியாக உள்ளன. ராஜநாகம் உள்ள வனம் ,"பயோடைவர்சிட்டி" கொண்ட வனம் என்கிறார் விட்டேகர்.


              நன்கு வளர்ந்த ஓர் ஆண்பாம்பு கிட்டத்தட்ட 10 கி.மீ பரப்பளவை தனது ஆளுகைக்கு உட்படுத்திக் கொள்கிறது. குறைந்தது மூன்று பெண் பாம்புகளை தனது இணையாக்கிக் கொள்ளும். பருவ காலங்களில் அதாவது ஜனவரி முதல் ஏப்ரல் வரை , இவை உறவுக்கு தயாராகிறது. அப்போது பெண்ணும் ஆணும் தனது உடலில் புழை பாகத்திற்கு கீழ் அமைந்துள்ள சுரப்பி மூலம் ஒருவித நறுமண நீரை சுரந்த வாறே செல்லும் அதை நுகரும் எதிர் இனம் தன் இணையை நாடும். சுமார் 500 முறை பின்னிப் பிணைந்து நடனமாடும். அப்போது அவைகள் மூர்க்கமாகவே இருக்கும். எதிர் வரும் அனைத்து உயிரிகளையும் விஸ்ஸ் என்று ஒலியோடு , தனது வாயினால் வௌிவிடும் மூச்சின் மூலம் மிரளச் செய்யும். தவிர தனது உடல் பாகத்தில் முக்கால் பங்கு மேலெழும்பி நிற்கும் போது யானை போன்ற பெரிய உயிரினமே பயங்கொண்டு விலகிச் செல்லும்.
                உடலுறவுக்கு போட்டியிடும் பிற ஆண்கள், தங்கள் உயிரை பொருட்படுத்தாது நடனப்போட்டியில் பங்கேற்கும். தோற்கும் நிலையில் உள்ள பாம்புகளை வெற்றி நிலையில் உள்ளவை விஷத்தை உட்செலுத்தாது கொத்தி விரட்டும். பின் தன் சிறிய ஆண் குறியை பெண்ணின் புழைக்குள் சுமார் 50 முறை உட்செலுத்தி பின் விந்தை வெளிவிடும். தன் காதலுக்கு உட்படாத பெண்கள், பலசமயம் ஆண்களால் கொல்லப்படுகிறார்கள் என்பது தான்  வேதனையான  நிகழ்வு. ஏதோ ஒருசூழலில் பெண்கள் உட்படாத போது ஆணானது மிகுந்த கோபம் அடைகிறது. அப்போது காமமும் கோபமும் ஒன்று சேர ,அதன் இமையில்லா பெரிய விழிகள் பிதுங்கி மிரட்சியூட்டும் விதமாக வௌியில் தெரிய, பெண்ணை கடும் கோபத்துடன் கடித்து குதறி தனது அத்தனை விஷத்தையும் உட்செலுத்தும்.  பெண்ணானது நரம்பு மண்டலம் முழுதும் பாதிப்படைந்த நிலையில் அங்கேயே இறந்து விடுகிறது. அப்போதும் கோபம் தணியாத ஆண் அதை விழுங்க முற்படும். பல சமயம் முக்கால் பங்கு விழுங்கிய பிறகு  அதை கக்கி விடும். பிறகு எதிர்படும் பிற பாம்புகளையும் தாக்கி உணவாக்கிக் கொண்டு அருகிலிருக்கும் மரங்களின் உச்சியில் அமர்ந்து ஓய்வெடுத்து அமைதியடைய முயற்சி செய்கிறது. பொதுவாக எந்நேரமும் மரத்தின் உச்சியில் அமர்ந்திருப்பது இதன் சுபாவம். இவை எப்போதும் பழிவாங்கும் குணமுடையவை.  தன் இணையை கொன்றவர்களை பழிவாங்கவே இவை இவ்வாறு இருக்கின்றன என்பன போன்ற கற்பனை கதைகளும் உண்டு.
                     பாம்பினத்தில் கூடுகட்டி முட்டையிடும்  சிறப்பு குணம் இவற்றிர்க்கு மட்டுமே உண்டு. பெண் கருவுற்ற நிலையில் சதுப்பு நில பகுதியில் இலை தழைகளால் கூடுமைத்து அதில் முட்டையிடும். இதற்கு ஆணும் துணையாக இருக்கும்.  20--40 முட்டைகள் வரை இடும்.கூட்டின் அருகிலேயே இருந்து  தாய் அடைகாக்கும். சுமார்  90 நாட்களுக்கு பின் குட்டிகள் வௌி வருகின்றன. குட்டிகள் வௌிவருவதை உணர்ந்ததும் தாய் அவ்விடம் விட்டு அகன்று இரை தேட சென்றுவிடுதால் தன் குட்டிகளை இவை இரையாக்கி கொள்வதில்லை. முட்டையிலிருந்து வௌி வந்த குட்டிகள் தாயைப் போலவே அதிகபட்ச விஷத்தை கொண்டிருக்கும். சிறிய வெட்டுக்கிளிகள், பட்டாம்பூச்சிகள், போன்றவற்றை உணவாக்கிக் கொள்ளும். இயற்கை சீரழிவு, கழுகு, வல்லூறு போன்ற பறவைகளின் தாக்குதலிலிருந்து தப்பிய 10--15 குட்டிகளே வளர் நிலையை அடைகின்றன. முதிர்ந்தவை , நடுவயது பாம்பை போருக்கு அழைத்து தன் எல்லையை நிலை நிறுத்திக் கொள்ளும் .சுமார் 20 வருடங்கள் வாழும் ராஜநாகங்கள் தன் முழு வாழ்நாளையும் சுகமாக கழிக்கின்றதா? ......சந்தேகம் தான்....!
                  ஆஸ்டின் ஸ்டீவன்ஸ் , என்ற புகழ் பெற்ற பாம்பின ஆய்வாளர், ஆசியப்பகுதி உயிரினமான இவ்வகை பாம்புகள் காடு அழித்தலாலும், சுற்றுச் சூழல் மாறுபாடாலும் அழிவுக்கு உள்ளாவதை ஒவ்வொரு கட்டுரையிலும் குறிப்பிடத் தவறுவதில்லை. இவர் பர்மா, நேபாளம், தவிர வட கிழக்கு பகுதிகளான சிக்கிம், மேகாலயா, திரிபுரா ,மணிப்பூர், போன்ற இடங்களின் காடுகளில் அலைந்து திரிந்து ராஜ நாகங்களின் வாழ்வை மிகுந்த துணிச்சலுடன் பதிவு செய்துள்ளார். 65 வயது நிரம்பி, இதுவரை 1306 முறை விஷப்பாம்பு கடிக்கு ஆளாகி உள்ளார். ஓர் ஆசை இவருக்கும் உண்டு!
                 இந்திய கலாசாரத்தில் நாக பஞ்சமி, பாம்புகளை வணங்கும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இன்று முட்டையும் பாலும் வைத்து வணங்குகின்றனர். பாம்புகள் ஒருபோதும் முட்டைகளையோ பாலையோ உணவாக்கிக் கொள்வதில்லை சமுதாயத்தில் நிலவி வரும் ஒரு மூட நம்பிக்கையே . இதே போல் பர்மாவில் வயதிற்கு வந்த இளம் பெண்கள் ராஜநாகங்களை வணங்குவதோடல்லாமல் அவற்றின் தலையில் முத்தமிட்டால் தனக்கு அழகிய மணவாளன் கிடைப்பார் என்ற நம்பிக்கையும் கொண்டுள்ளனர். இதில் சுவாரசியமான விஷயம் என்னவெனில் அந்த ராஜநாகங்களை பெண் பாம்பு பிடாரர்களே கொண்டுவருவர். இந்நிகழ்ச்சியை நேரில் கண்ட ஆஸ்டின் ஸ்டீவன்சுக்கு தானும் ஒரு முறையேனும் உயர எழும்பி நிற்கும் ராஜநாகத்தின் விரிந்த தலையை முத்தமிட வேண்டும் என்றஆசை தான் அது. பர்மாவில் அதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத சூழலில் திருவனந்தபுரம் வந்தவருக்கு பிரபாகர் என்றொரு இளைஞரின் உதவியோடு ராஜநாகத்தை நேருக்கு நேர் சந்திக்கம் வாய்ப்பு கிடைத்தது. பலத்த முயற்சிக்கு பிறகு பாம்பை தன்வசப்படுத்திய ஆஸ்டின் தன் ஆசை தீர அதன் தலையில் முத்தமிட்டார். முத்தமிட்ட கையோடு அதை நேஷனல் ஜியோகிராபிக் சேனலிலும் வௌியிட்டார் வலை தளத்தில், யூ--டியூபில் நாம் காணும் போது நமக்கு சற்று மிரட்சியாகத்தான் உள்ளது!
kannan233@gmail.com                 எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா

படங்கள் உதவி----  இணையம் 

Friday, November 8, 2019

மனதிற்குள் மழைச்சாரல்
-----------------------------------------
யாருமற்ற தெருமுனையில்
தனித்திருந்த மாலைப்பொழுதில்
வீசி அடங்கிய தென்றலுக்குப்பின்
தவழ்ந்து வந்தது சிறு தூரல்கள்

வனிதை நீயும் வந்து நின்றாய்
இடைவெளியை குறைத்துக்கொண்டு
உன்னிதழ் பட்டுத்தெறித்த தூரலொன்று
உள்ளத்தில் பொழிந்தது பூமழையென்று

பக்கத்தில் நானிருந்து
பார்த்து பார்த்து ரசிக்கின்றேன்
நிலவாக நீ வந்து
நெஞ்சினுள்ளே நிறைகின்றாய்

மோகத்தின் கவிதைக்கு
முன்னுரைகள் எழுதிவிட்டதடி
முத்துக்களின் முத்தத்தில் சத்தமிடும்
உன் கால் கொலுசு

எட்டி வைத்த நாலடியில்
கொட்டி கிடக்கும் இன்னிசையால்
கட்டி என்னை இழுக்கின்றாய்
விட்டிலாகி விட்டேனடி..

மனதோரம் மழைச்சாரல் வீச
மனம் பொங்கி மகிழுதடி
தேவதை உன்னை கொஞ்சியதால் 
தேனாய் இனிக்குதடி இதழோரம்......!!

Friday, December 15, 2017

கிராமத்து சொர்க்கம்
-------------------------------------
 காலையில் எழுந்து  
அவசரங்கள்  ஏதுமின்றி  
அன்றாட வேலைகளை  
முடித்தவிட்டு....

ஆலமர நிழலமர்ந்து
ஆசுவாசமாய் கதையளந்து
பஞ்சாயத்து பேசிவிட்டு....

சிறுபிள்ளை போலே
இனிப்பு நீர் ஒழிகிட
நாவூறும் தேன்மிட்டாய் ருசித்து.....

எட்டிப்பறித்த புளியங்காயை
நண்பர்களோடு சுவைக்கையிலே
உச்சிமண்டையில் ஏறுமே புளிப்பு...  

எட்டு ஊரு மணக்க
கல்சட்டியில் ஆச்சி வைக்கும்
கருவாட்டுக் குழம்பும்
கைகுத்தல் அரிசி சோறும்
வேகும்போதே வாசம் வீசுமே ...

நிலாச்சோறு சாப்பிடவே
வட்டமாய் வந்தமர
அன்பு கூட்டிப்பிசைவாளே அம்மாவும்
ஆளுக்கொரு உருண்டை வாங்கி
நெஞ்சு நிறைய உண்டு களித்து
தென்னங்கீற்றின் அசைவினிலே  
தென்றல் வந்து தாலாட்ட
கண்ணயர்ந்தால்.....
ஆகா.......
சொர்க்கமாய் இனிக்குமே...

 அலைப்பேசியில்  அளவளாவி
பணம் தேடும் பிணங்களாகி
அடுத்தவர்   துயரை
அறிந்திடாது போகின்ற 
நகரத்து வாழ்க்கையிலே
எங்கப்பா சொர்க்கமிருக்கு...?