Showing posts with label பொடி வகைகள். Show all posts
Showing posts with label பொடி வகைகள். Show all posts

Tuesday, May 10, 2011

"காயத்தை" மெருகேற்ற......

இந்த உடலுக்கு காயம் என்றொரு பெயரும் உண்டு. நம் உடல் ஆரோக்கியமாக ,பிணிகள் இன்றி நீண்ட நாள் வாழ நம் முன்னோர்கள் உணவிலேயே பல வகைகளை கையாண்டனர். அதில் ஒன்று தான் சாதத்தோடு பிசைந்து சாப்பிடும் பொடி வகைகள்.

ஐங்காயப் பொடி

தேவையானவை

மணத்தக்காளி வற்றல் ---1 கைப்பிடி
சுண்ட வத்தல்---1 கைப்பிடி
வேப்பம் பூ--- சிறிது
 மல்லி வதை---3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்----4
சுக்கு --10 கிராம்
உப்பு தேவையான அளவு
பெருங்காயம் சிறிது

கடாயில் சிறிதளவு எண்ணை விட்டு சுண்ட வத்தல் ,வேப்பம் பூ, மணத்தக்காளி வத்தல்களை தனித்தனியாக வாசம் வரும் வரை வறுக்கவும் .மல்லி விதை , மிளகாயை தனியாக வறுக்கவும். வறுத்த வத்தல்கள், மல்லி, மிளகாய், சுக்கு ,உப்பு பெருங்காயம் சேர்த்து  மிக்ஸியில் பொடி செய்யவும்.

பயன்கள்

இந்த பொடியை சூடான சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட ,பித்தம், பித்த மயக்கம், வயிற்றுப்பூச்சிகள், அல்சர், வயிற்று வலி, தீரும். பிள்ளை பெற்ற  பெண்கள் வாரம் ஒருமுறை உண்டுவந்தால் ஜீரணச்சக்தி கூடும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு ஏற்படும் ஜீரணக் கோளாறு நீங்கும். பால் குடித்தவுடன் கக்குவது நிற்கும்.



Thursday, May 5, 2011

கறிவேப்பிலை,,,புதினா பொடி

பல வகையான பொடி வகைகளை செய்து வைத்துக் கொண்டால் ,இரவு நேரத்தில் என்ன சமைப்பது ,எப்போதும் சாம்பார், குழம்பு தான் செய்கிறோமே என்று அலுத்துக் கொள்ள வேண்டாம். பொடிகள் இருந்தால் சூடான சாதத்தில் போட்டு சிறிது நெய் அல்லது நல்லெண்ணை விட்டு பிசைந்து சாப்பிட்டு விடலாம்.

பொடி---1
கறிவேப்பிலை பொடி

தேவையானவை
கடலைப்பருப்பு ---1 கரண்டி
உளுத்தம் பருப்பு----2 கரண்டி
காய்ந்த மிளகாய்---4
கறிவேப்பிலை--- 1கப் (கழுவி சுத்தம் செய்து லேசாக காயவைக்கவும்)
உப்பு தேவையான அளவு
பெருங்காயம் சிறிது

கடாயில் 1 ஸ்பூன் எண்ணைவிட்டு பருப்புகள், மிளகாய் சேர்த்து சிவக்க வறுத்து தனியாக வைக்கவும்.மீண்டும் 1ஸ்பூன் எண்ணை விட்டு கறிவேப்பிலையை போட்டு நன்கு வறுக்கவும். சிறிது ஆறிய பின் , வறுத்த பொருட்கள், உப்பு பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
காற்று புகாமல் டப்பாவில் வைத்திருந்தால் ,15 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

பொடி---2 

புதினா பொடி

மேற்கூறிய  பொருட்களில் கறிவேப்பிலைக்கு பதிலாக புதினா இலைகளை சேர்க்கவும். மற்ற பொருட்கள், செய்முறை மேற்கூறியதே.

இதுவும் 15 நாள் வரை கெடாது.

பயன்கள்
கறிவேப்பிலை, புதினாவில் இரும்புச் சத்து நிறைய உள்ளது. பருப்புகளோடு சேரும் போது புரதமும் கிடைத்து சரிவிகித உணவாகிறது.

 (இன்னும் பல வகை கூறுகிறேன்)