Wednesday, May 11, 2011

சர்க்கரை வள்ளி மிளகு கூட்டு

கர்நாடகாவின் பாரம்பரிய சமையல்களில் மிளகு கூட்டு முக்கிய இடம் பெற்றது. எல்லா விஷேசங்களிலும், எல்லா காய்களிலும், மிளகு கூட்டு செய்வர்.அதற்கு தொட்டுக் கொள்வதற்கு மோர்க்குழம்பும் இருக்கும்.

சர்க்கரை  வள்ளிக் கிழங்கு மிளகு கூட்டு

தேவையானவை
சர்க்ரை வள்ளிக் கிழங்கு நறுக்கியது ---1கப்
பச்சை பட்டாணி----1கப்
துவரம் பருப்பு---அரை கப்
புளி---கோலி அளவு
உப்பு தேவையானவை

வறுத்து அரைப்பதற்கு
உளுத்தம் பருப்பு---3 ஸ்பூன்
மிளகு --1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்---2
தேங்காய் துருவல் ---1கப்

தாளிப்பதற்கு
நல்லெண்ணை ---2 ஸ்பூன்
கடுகு,சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை


சர்க்கரை வள்ளியை சுத்தம் செய்து, சதுரமான துண்டுகளாக நறுக்கவும்.
அதோடு பட்டாணியையும் சேர்த்து குக்கரில் வைத்து 3 விசில் விடவும்.
துவரம்பருப்பை குழைய வேகவிடவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் தேங்காய் தவிர்த்து மற்றதை எண்ணையில் சிவக்க வறுத்து, தேங்காயுடன் சேர்த்து நைஸாக அரைக்கவும்.
புளியை கரைத்து,அதில் வெந்த காய்களை போட்டு கொதிக்கவிடவும். கொதிக்கும் போது, அரைத்த விழுது, உப்பு சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். பருப்பையும் சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் இறக்கி  நல்லெண்ணையில் தாளித்து சேர்க்கவும்., இறக்கிய பின் உளுந்து அப்பளம் சுட்டு பொடியாக்கி கூட்டில் சேர்க்கவும்.






Tuesday, May 10, 2011

கேழ்வரகு புலாவ்

புலாவ் பொதுவாக அரிசியில் செய்வார்கள்.சற்று வித்தியாசமாக கேழ்வரகு மாவில் புலாவ் செய்யலாமே.

தேவையானவை
 வெங்காயம் நறுக்கியது ---2
காரட், பீன்ஸ், குடமிளகாய், உருளைக்கிழங்கு, நறுக்கியது ---வகைக்கு 1கப்
பச்சை பட்டாணி வேகவைத்தது---1கப்
இஞ்சி --- பூண்டு விழுது---2 ஸ்பூன்
பச்சை மிளகாய்---3
கேழ்வரகு மாவு---  2 கப்
உப்பு தேவை யானது
எண்ணை தேவையான அளவு
வெண்ணை --1ஸ்பூன்
கரம் மசாலா தூள் --1 ஸ்பூன்


கடாயில் வெண்ணை போட்டு வெங்காயம் வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பட்டாணி, காய்களை போட்டு வேகவிடவும். காய்களுக்கு தேவையான உப்பு  மட்டும் சேர்க்கவும். கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வேகவிடவும்.

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, உப்பு , ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்கவும். மற்றொரு கடாயில் எண்ணை விட்டு பட்டை சோம்பு கிராம்பு தாளித்து ,கரைத்த மாவை போட்டு கிளறவும். உதிர் உதிராக வரும் வரை கிளறவும். அதோடு வேகவைத்த காய்கள் சேர்த்து நன்கு கிளறி , கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.

தயிர் வெங்காயம்,  வெண்டைக்காய் பச்சடியோடு சூடாக பரிமாறலாம்.



"காயத்தை" மெருகேற்ற......

இந்த உடலுக்கு காயம் என்றொரு பெயரும் உண்டு. நம் உடல் ஆரோக்கியமாக ,பிணிகள் இன்றி நீண்ட நாள் வாழ நம் முன்னோர்கள் உணவிலேயே பல வகைகளை கையாண்டனர். அதில் ஒன்று தான் சாதத்தோடு பிசைந்து சாப்பிடும் பொடி வகைகள்.

ஐங்காயப் பொடி

தேவையானவை

மணத்தக்காளி வற்றல் ---1 கைப்பிடி
சுண்ட வத்தல்---1 கைப்பிடி
வேப்பம் பூ--- சிறிது
 மல்லி வதை---3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்----4
சுக்கு --10 கிராம்
உப்பு தேவையான அளவு
பெருங்காயம் சிறிது

கடாயில் சிறிதளவு எண்ணை விட்டு சுண்ட வத்தல் ,வேப்பம் பூ, மணத்தக்காளி வத்தல்களை தனித்தனியாக வாசம் வரும் வரை வறுக்கவும் .மல்லி விதை , மிளகாயை தனியாக வறுக்கவும். வறுத்த வத்தல்கள், மல்லி, மிளகாய், சுக்கு ,உப்பு பெருங்காயம் சேர்த்து  மிக்ஸியில் பொடி செய்யவும்.

பயன்கள்

இந்த பொடியை சூடான சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட ,பித்தம், பித்த மயக்கம், வயிற்றுப்பூச்சிகள், அல்சர், வயிற்று வலி, தீரும். பிள்ளை பெற்ற  பெண்கள் வாரம் ஒருமுறை உண்டுவந்தால் ஜீரணச்சக்தி கூடும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு ஏற்படும் ஜீரணக் கோளாறு நீங்கும். பால் குடித்தவுடன் கக்குவது நிற்கும்.



Spanish மொழி கற்கலாம்

இந்த பாடத்தில் prepositions எழுதும் முறை அறியலாம்.



The food is on the table.----La comida está sobre la mesa.( லா கொமிதா எஸ்தா சோபர் லா மேசா)
The flowers are on the table.----Las flores están sobre la mesa.(லாஸ் ஃப்ளோரஸ் எஸ்தான் சோபர் லா மேசா)
The managers are at the table.-----Los gerentes están en la mesa.(லாஸ் ஹெரன்தஸ் எஸ்தான் என் லா மேசா)
The coffee is on the table.----El café está sobre la mesa.(எல் காஃபே எஸ்தா சோபர் லா மேசா)
The candy is in the box.----El caramelo está en la caja.(எல் காரமிலோ எஸ்தா என் லா காஹா)

He sat on a chair.----Se sentó en una silla.( சே சென்தோ என் உன சீஜா)
The boy is in the box.----El niño está en la caja.(எல் நீனோ எஸ்தா என் லா காஹா)
The boxes are on the table.----Las cajas están sobre la mesa.(லாஸ் காஹாஸ் எஸ்தான் சோபர் லா மேசா)
I am at the door.----Estoy en la puerta.(எஸ்தோய் என் லா புஅர்தா)
I am at the building.---Estoy en el edificio.(எஸ்தோய் என் எல் எடிபீசியோ)
 There is a cow in the field.---Hay una vaca en el campo.(அய் உன வாகா என் எல் காம்போ)
Is he in his room?---¿Está en su habitación?(எஸ்தா என் சு ஹாபிடேசியன்?)



 

Monday, May 9, 2011

உணவே மருந்து

              பிரம்மி, பிரம்ம மாண்டூகி, மாண்டூக பரனி,கொட்டு கோலா போன்ற அற்புத பெயர்கள் கொண்ட நாம் அனைவரும் அறிந்த கீரை வல்லாரை. ஆயுளை கூட்டி, இளமையை தரும் காயகல்பம் என்று ஆயுர்வேதம் இதை அழைகிறது. இளமை மட்டுமன்றி, உடல் வனப்பு, சக்தி, மூளை திறன், நினைவாற்றல், ஜீரண சக்தி, ரத்த விருத்தி என அனைத்து விதத்திலும் நன்மை செய்யும் இது, நீரிழிவு நோயாளிகளுக்கும், ரத்த சோகை கண்டவர்களுக்கும் அருமருந்து.
         தையாமின்(பி1), நையாசின்(பி3), ரிபோஃபேளாவின்(பி2) , பைரிடாக்ஸின்(பி6) மற்றும் கால்சியம், மாங்கனீஸ், மெக்னீசியம், சோடியம் .......அப்பாடா..... சத்துக்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
               ஆயுர்வேத ரசாயனங்கள் செய்வதற்கு இது முக்கிய மூலப் பொருளாக உள்ளது. அதுமட்டுமின்றி  நாள்பட்ட  வியாதிகளை தீர்க்கவும் வல்லாரை பெரிதும் உதவி புரிகிறது. வெரிகோஸ் வெயின்ஸ், சோரியாசிஸ், நாள்பட்ட ஆராத காயம் , வயிற்றுப்புண், தோல் நோய்களுக்கு மருந்தாகிறது.இது சளி ,ஆஸ்துமா போன்றவற்றிர்க்கும் மருந்தாகும்.
 
      உணவில் அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் மேற்குறிப்பிட்ட பயன்களை பெறலாம். இதை வைத்து செய்யும் சில உணவு முறைகள்

1 வல்லாரை துவையல்

தேவையானவை
வல்லாரை ----1கட்டு
சின்ன வெங்காயம்---10
தேங்காய் துருவியது ---1 கைப்பிடி
பூண்டு---5
கடலைப்பருப்பு--- 2ஸ்பூன்
உளுத்தம் பருப்பு ---2 ஸ்பூன்
புளி கோலி அளவு
உப்பு தேவையானது
சிவப்பு மிளகாய்---3
எண்ணை --தேவையான அளவு

கடுகு, பெருங்காயம் தாளிக்க

கடாயில் சிறிதளவு எண்ணை விட்டு ,அதில் பருப்புகள், மிளகாய் போட்டு சிவக்க வறுக்கவும். கீரையை சுத்தம் செய்து தனியாக வதக்கவும். வெங்காயம் ,பூண்டு வதக்கவும், எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து ,புளி, தேவையான உப்பு போட்டு மிக்ஸியில் அரைக்கவும். பின்பு தாளிக்க கொடுத்துள்ளதை தாளித்து துவையலில் சேர்க்கவும்.

சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட ஏற்றது.

2 வல்லாரை கூட்டு

வல்லாரை --1கட்டு
சின்ன வெங்காயம்---10
 தக்காளி ---2
பாசிப்பருப்பு ---1 கப்
உப்பு தேவையான அளவு

அரைப்பதற்கு
தேங்காய்---1கப்
சிவப்பு மிளகாய்---3
சீரகம்--1ஸ்பூன்

தாளிக்க
கடுகு, பெருங்காயம்


குக்கரில் சுத்தம் செய்த கீரை, வெங்காயம், தக்காளி, பருப்பு போட்டு 3 விசில் விடவும். அரைக்க கொடுத்துள்ளதை அரைத்து ,குக்கரில் வேகவைத்துள்ளதுடன் சேர்க்கவும்.உப்பு போட்டு ஒரு கொதி விடவும். தாளிக்கவும்.

சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம் , சப்பாத்திக்கு  தொட்டுக் கொள்ளவும் பயன்படுத்தலாம்.

3 வல்லாரை சூப்

வல்லாரை --1கட்டு
சின்ன வெங்காயம்---10
பூண்டு--5
தக்காளி--2
உப்பு--தேவையானது
மிளகு சீரகம் வறுத்து அரைத்த தூள் --2 ஸ்பூன்

எல்லா பொருட்களையும் ஒன்றாக குக்கரில் போட்டு 3 விசில் விடவும். அதோடு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதிக்கும் போது உப்பு மிளகு சீரகத்தூள் போட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும். தனியாக ஒரு கடாயில் சிறிதளவு வெண்ணை போட்டு பட்டை சோம்பு தாளித்து சேர்க்கவும். விரும்பினால் பிரஷ் கிரீம் சேர்க்கவும்.