Wednesday, May 25, 2011

பாகற்காய் புளியோதரை

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் ....இது பழைய பழமொழி.
பாகற்காய் என்றால் வீடே நடுங்கும்....இது புது மொழி.

கசப்பான பாகற்காயையும் சுவையானதாக்க முடியும்
பாகற்காய் புளியோதரை செய்ய தேவையானவை


பாகற்காய் --கால் கிலோ
புளி ---நெல்லிக்காய் அளவு
உப்பு தேவையான அளவு

வறுத்து அரைக்க
கடலைப்பருப்பு --2ஸ்பூன்
மல்லி விதை---4 ஸ்பூன்
மிளகாய் வத்தல்--5
கடுகு--1ஸ்பூன்
வெந்தயம்---அரை ஸ்பூன்

தாளிக்க

கடுகு--1 ஸ்பூன், கடலைப்பருப்பு---2ஸ்பூன், மிளகாய் வத்தல் --2, வறுத்த வேர்கடலை ---2 ஸ்பூன்,கறிவேப்பிலை,

பருப்பு ,மல்லிவிதை, மிளகாயை தனியாகவும், கடுகு வெந்தயத்தை தனியாகவும் வறுத்து பொடி செய்யவும்.
புளியை கெட்டியாக கரைக்கவும்.
பாகற்காயை சுத்தம் செய்து விதை நீக்கி ,நறுக்கி, எண்ணையில் பொரித்து கொள்ளவும்.
கடாயில் தாளிதம் செய்துக் கொண்டு ,கெட்டியாக கரைத்த புளி கரைசலை ஊற்றி ,சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதிக்கும் போது, அரைத்த பொடியை போட்டு கட்டி இல்லாமல் கிளறவும், பொரித்த பாகற்காயை சேர்க்கவும்.  உப்பு சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறவும். 2 குழிக் கரண்டி நல்லெண்ணை சேர்த்து கிளறி இறக்கவும்.


சூடான சாதத்தில் இந்த பேஸ்டிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து கலந்து சாப்பிடவும். 






Monday, May 23, 2011

காலை இளங்கதிர்

மென் தென்றல் குழலும்
பாடும் குயில்கள் கானமும்,       
புள்ளினங்கள் நடனமும்
அற்புதமாய் பங்களிக்க
அன்புடன், அரவணைக்க
மென் நடை பழக வருகிறாள்
சூரியத் தாய்...
காலை இளங்கதிராய்...

கண்டன...மலர்ந்தன
சிற்றிளம் பெண் கொங்கையென.....
தாமரை மொட்டுக்கள்.

அல்லி பூத்ததென
மலர்ந்தது
வளை கர நங்கைகளின்
வண்ணக் கோலங்கள்.....

கண் விழி திறப்பதற்காய்,,,
நான் காத்திருக்க
மென் நகை பூத்தது
மாடியில் நான் வைத்த
ஒற்றை ரோஜா.....





நினைத்தது நடந்திட ......

நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாகும் வேரியங்கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே-----(1)

ராமனாய் வந்து தோன்றி ராவணன் தன்னை வீட்டித்
தராதலம் முழுதும் காத்துத் தம்பியும் தானுமாகப்
பராபரமாகி நின்ற பண்பிளை பகருவார்கள்
நராபதியாகிப் பின்னும் நமனையும் வெல்லுவாரே-----(2)

மேற்குறிப்பிட்ட இரண்டு பாடல்களையும் தினமும் கூறினால் நினைத்து நிச்சயம் நடக்கும். இது என் அனுபவமும் கூட.


சுகப்பிரசவம் உண்டாக

சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும்
வித்தக முனிவரும், விண்ணோர்களும்
நித்தமும் முறை முறை நெருங்கி ஆர்ப்புற
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே
ஒரு பகல் உலகெலாம் உதரத்துள் பொதிந்து
அருமறைக்கு உணர்வு அரும் அவனை அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை
திரு உற பயந்தனள் திறம் கொள் கோசலை.

கர்ப்பிணிப் பெண்கள் இந்த பாடலை கூறினாலும், பிறர் கூறக் கேட்டாலும்
நிச்சயம் சுகப்பிரசவம் உண்டாகும் என்பது ஆன்றோர் வாக்கு.


Saturday, May 21, 2011

பாதாம் கத்லி

வட இந்திய உணவுகளில் தவறாமல் இடம் பிடிப்பவை இனிப்புகள். காஜூ கத்லி, பாதாம் கத்லி போன்றவை குறிப்பிட்டு சொல்லக்  கூடிய சுவை கொண்டவை.


 தேவையான பொருட்கள்

பாதாம்---200 கிராம்
பால் ---1கப்
சர்க்கரை--- 200கிராம்
ஏலப்பொடி,குங்குமப்பூ சிறிது


பாதாம் பருப்பை ஊற வைத்து , பால் சேர்த்து மைய அரைக்கவும்.
கடாயில், அரைத்த விழுது, மீதமுள்ள பால், சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். குங்குமப்பூ, ஏலப்பொடி போட்டு கிளறி  நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிது ஆறியதும் துண்டுகள் போடவும். பாதாம் கத்லி சுவைக்கத் தயார்.


முந்திரி பக்கோடா

சும்மா சும்மா வெங்காய பக்கோடா சாப்பிட்டு போரடிக்குது .இன்னிக்கு வேறு ஏதாவது செய்யலாமா?
முந்திரி பக்கோடா செய்யலாம்


தேவையானவை

கடலை மாவு---200 கிராம்
அரிசி மாவு---50 கிராம்
பச்சை மிளகாய் ---4 பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி ,கறிவேப்பிலை நறுக்கியது சிறிது.
முந்திரி ---100 கிராம்
மிளகாய் தூள் ---2 ஸ்பூன்
எண்ணை பொரிக்க தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

மாவு, பச்சை மிளகாய் ,மிளகாய் தூள், உப்பு ,முந்திரி ,கறிவேப்பிலை, கொத்தமல்லி எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும் .அதோடு சூடான எண்ணை சிறிது விட்டு கலக்கவும். லேசாக தண்ணீர் தெளித்து பிசிறவும். சிறு சிறு உருண்டைகளாக எண்ணையில் பொரிக்கவும்.