Thursday, April 14, 2011

இசை--எளிய அறிமுகம்---5

ஸ்வரத்திற்கு ஒத்த தமிழ் பெயர்கள்
ஸ(-ஸட்ஜம்)-----குரல்
ரி(ரிஷபம் )----துத்தம்
க(காந்தாரம்)----கைக்கிளை
ம(மத்தியமம்)----உழை
ப(பஞ்சமம்)---இளி
த(தைவதம்)---விளரி
நி(நிஷாதம்)---தாரம்

ஸ்வர ஸ்தானங்கள்
வட மொழிப் பெயர்                         தமிழ்பெயர்
ஸட்ஜம்                                              குரல்
சுத்த ரிஷபம்                                      குறை துத்தம்
சதுஸ்ருதி ரிஷபம்                           நிறை துத்தம்
சாதாரண காந்தாரம்                         குறை கைக்கிளை
அந்தர காந்தாரம்                               நிறை கைக்கிளை
சுத்த மத்யமம்                                    குறை உழை
பிரதி மத்யமம்                                    நிறை உழை
பஞ்சமம்                                               இளி
சுத்த தைவதம்                                   குறை விளரி
சதுஸ்ருதி தைவதம்                       நிறை விளரி
கைசிகி நிஷாதம்                              குறை தாரம்
காகலி நிஷாதம்                                நிறை தாரம்

"அகநிலைக்குரிய நரம்பின திரட்டி நிறை, குறை, கிழமை பெறுமென மொழிப "
                                                    (சிலப்பதிகாரம் 8 :39 --அடியார் உரை)
ராகம்
கேட்பதற்கு இனிமையாகவும், நம் மனதின் உணர்ச்சிகளுக்கு விருந்தளிக்கும் அல்லது  உணர்ச்சிகளை பிரதிபலிப்பதாகவும் உள்ள ஸ்வரங்களின் கோர்வை பல்வேறு பட்ட ராகங்களை உருவாக்குகின்றன. எந்த ஒரு ராகமும் அதற்கென பிரத்யேக குணாம்சங்களை கொண்டு ஜீவிக்கின்றன. கேட்பவர்களை மயக்கி தன்னிடத்தே வைத்துக் கொள்கிறது.
முதல் ஸ்வரமான ஸ உடலின் ஆறு பாகங்களான நாசி, தொண்டை, இதயம், வாய் நாக்கு, பல் முதலியவற்றின் ஒருங்கிணைப்பால் உருவானது. இதைத் தான் நாரதரும்
"யமாஸ்ருஷ்ட பிரஜாயந்தே ரிஷபத்யா ஷட் ஏவ து, தஸ்மாத்  ஸட்ஜ இதி பிரோக்தாஹ " என்கிறார்.
                                                      (இன்னிசை தரும்)


arts and crafts

எல்லோரும் எளிமையாக ஏதாவது ஒரு கை வேலை செய்ய கற்றுக் கொண்டுவருகின்றனர். அந்த வகையில் இன்று மணல் ஓவியம் செய்ய கற்றுக் கொள்வோமா.

தேவையான பொருட்கள்
நைஸாக உள்ள ஆற்று மணல்
கலர்கள்(acrylic /pearl colour)
தடியான அட்டை
வெல்வெட் அல்லது காட்டன் துணி
ஒட்டுவதற்கு பெவிகால்
விரும்பிய டிசைன்

செய்யலாமா

முதலில் தடியான அட்டையில் பெவிகால் தடவி துணியை ஒட்டி காயவிடவும். பின்னர் எடுத்துக் கொண்ட டிசைனை டிரேஸ் செய்யவும்.அதில் பெவிகால் தடவி. மணலை தூவி விடவும். அதிகமான மணலை காய்ந்ததும் தட்டிவிடலாம்.பின்னர் அதில் நாம் விரும்பிய கலர்களால் மணலின் மீது பெயிண்ட் செய்யவும். தேவைக்கேற்ப பிரேம் செய்யவும். சுவரில் மாட்ட ஏதுவான அழகான மணல் ஓவியம் இப்போது உங்கள் கைகளில்.


Wednesday, April 13, 2011

இசை--எளிய அறிமுகம்--4

நாதத்தின் இரு வகை 1.ஆஹதம் 2.அனாஹதம்.
ஆஹதம்
மனிதனால் உண்டாக்கக் கூடிய நாதமே ஆஹதம். சிந்தைக்கு விருந்தளித்து இன்பமளிக்கக் கூடியது.
அனாஹதம்
இயற்கையாக,வீசும் காற்று ,ஆர்ப்பரிக்கும் கடல் அலை,குயிலில் குரல், கிளியின் கீச்சு, முதலியவற்றால் உண்டாகக் கூடியது.
நாதம்,, நாபி, ஹ்ருதயம், கண்டம், மூர்த்தம் இவற்றிலிருந்து கிளம்பி ஸ்வரங்களாக வருகின்றன. நாபியிலிருந்து வருகின்ற ஸ்வரங்கள் மந்தரம், ஹ்ருதயத்திலிருந்து வருபவை மத்யம், நாசியிலிருந்து வருபவை தார ஸ்வரங்கள் என்று வழங்கப்படுகிறது.
நாத உபாசனையே மோக்ஷத்திற்கு ஏற்ற வழி என்று தியாகராஜர் தனது சோபில்லு என்ற ஜகன் மோகினி ராக கிருதியில் கூறியுள்ளார்.

ஸ்வரம்
கேட்ட உடனேயே மனதை ஈர்க்கும் வண்ணம் ,அளவோடு கூடிய ஒலியையே ஸ்வரம் என்கிறோம்.இது 7 ஆகும்.ஸ,ரி,க,ம,ப,த,நி என்ற இவையே சப்த ஸ்வரங்கள்.
ஒவ்வொரு ஸ்வரமும் ஒவ்வொரு மிருகத்தின் குரலை ஒத்து இருப்பதாக பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன.திலீபனும், சுலக்ஷணாவும் ,காதலோடு தோட்டத்தில் நடை பயணம் மேற்கொள்ளும் போது கேட்ட மயிலில் அகவல் ஒலி ஸ வை ஒத்து இருப்பதாக காளிதாசரின் ரகுவம்சம் தெரிவிக்கிறது.அதே போல் ரி -- எருதின் குரலையும், க--ஆட்டின் ஒலியையும்,ம--க்ரௌஞ்ச பறவையின் குரலுக்கும், ப---குயிலின் குரலுக்கும், த---குதிரையின் கனைப்பையும், நி---யானையின் பிளிறலையும் ஒத்திருப்பதாக தெரிவிக்கிறது.











Tuesday, April 12, 2011

இசை--எளிய அறிமுகம்-3

இசை --எளிய அறிமுகம்.

நாரதர் ,ராகங்களை ஆண் ராகம் --பெண் ராகம் என வகை படுத்தியுள்ளார். இவருக்கு பின், கிபி 16 நூற்றாண்டு,17ம் நுற்றாண்டில்,ராமாமாத்யர், வேங்கடமகி இருவரும் தற்போதுள்ள இசை வடிவத்தை அமைத்துள்ளனர். 15ம் நூற்றாண்டின் குப்தர் காலமே இசைக்கு பொற்காலமாக இருந்தது. அப்போது தான் இசை பல மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் அடைந்தது.வட இந்தியாவின் ஹிந்துஸ்தானி, தென்னிந்தியாவின் கர்நாடக இசை ,இரண்டும் பரதரின் நாட்டிய சாஸ்திரத்தின் இரு கிளைகளாக உருமாறின.ஹிந்துஸ்தானி, இசை வடிவத்தை மையமாக கொண்டும், கர்நாடக இசை, பாடல்களை அதாவது சாஹித்தியத்தை மையமாக கொண்டும் உருவானது.நாட்டுப்புற பாடல்களிலிருந்து இசை வடிவங்களை, பண்களை கொண்டு இவை மேலும் வளர்ச்சியடைந்தன.கி.பி 13ம் நூற்றாண்டில் சாரங்க தேவர் ,தனது சங்கீத ரத்னாகரம் எனும் நூலில் 264 ராகங்களை ,திராவிட, வட இந்திய இசையிலிருந்து உருவாக்கினார்.

ராகம், தாளம்

இனிமை,மென்மை ,குழைவுத் தன்மைக்கு அடிப்படையாக விளங்குவது ராகம். "ரிதம்" என்று கூறும் கட்டிற்கு ,அடிப்படை தாளம். உள்ளிருக்கும் ஆத்மாவிலிருந்து வெளிப்படுவது ராகம். நமது சிந்தனை, எண்ணம் ,உணர்ச்சி இதை வெளிக்காட்டும் விதமாக விளங்குவது ராகம்.நாதத்திலிருந்து தோன்றியது ராகம். நாதம் என்ற வடமொழி சொல்லுக்குத் தமிழில் "இசை ஒலி" என்று பெயர். ஒழுங்கு செய்யப்பட்ட அல்லது அழகு செய்யப்பட்ட ஒலிக்குறிப்பே நாதம் என்று கூறப்படுகிறது. நாதம் இயற்கையாகவும், மனிதன் மூலமும் உண்டாக்கக் கூடியது. இந்த இசை ஒலியிலிருந்து நாதமும், அதிலிருந்து சுருதியும், அதிலிருந்து ஸ்வரங்களும் ,ஸ்வரங்களின் கோர்வையிலிருந்து பல்வேறுபட்ட ராகங்களும் பிறக்கின்றன.ஒவ்வொரு ராகமும் ,பண்ணும் சில குறிப்பிட்ட ஸ்வரங்களினால் பின்னப்பட்ட அற்புத அமைப்பாகும்.
நாதம் இருவகை .1. ஆஹதம் 2. அனாகதம்.
(இன்னிசை தரும்)

Monday, April 11, 2011

தோட்டம் போடலாமா?

இன்றைய அவசர யுகத்தில் தோட்டங்கள் போட நேரம் ஏது? என்கிறீர்களா.வயல் வெளிகள் எல்லாம் ரியல் எஸ்டேட்களாக மாறிக் கொண்டிருக்கும் இச்சூழலில் நமது வீட்டில் வெகு எளிமையாக தோட்டத்தை , இருக்கும் சிறு இடத்திலேயே அமைக்க முடியும், என் வீட்டு மாடியில் மிகப் பெரிய தோட்டத்தை நான் அமைத்திருக்கிறேன்.தோட்டம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதும். மற்றவை மிக எளிது. முதலில் நீங்கள் என்ன விதமான தோட்டம் அமைக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். அதாவது ,அலங்காரத் தோட்டமா,காய்கறித் தோட்டமா, பழத்தோட்டமா, உள் அலங்காரத்திற்கான செடிகளை வளர்க்கப் போகிறீர்களா என்பனவற்றை முடிவு செய்யுங்கள். பின்னர் அதற்கான இடத்தை தெரிவு செய்யுங்கள். மாடி, பால்கனி, வீட்டு முன், வீட்டிற்கு பின் என எங்கு வேண்டுமெனினும் இடத்தை தேர்வு செய்யலாம்.
                       (இன்னும் வழிகள் கூறுகிறேன்)