Friday, November 8, 2019

மனதிற்குள் மழைச்சாரல்
-----------------------------------------
யாருமற்ற தெருமுனையில்
தனித்திருந்த மாலைப்பொழுதில்
வீசி அடங்கிய தென்றலுக்குப்பின்
தவழ்ந்து வந்தது சிறு தூரல்கள்

வனிதை நீயும் வந்து நின்றாய்
இடைவெளியை குறைத்துக்கொண்டு
உன்னிதழ் பட்டுத்தெறித்த தூரலொன்று
உள்ளத்தில் பொழிந்தது பூமழையென்று

பக்கத்தில் நானிருந்து
பார்த்து பார்த்து ரசிக்கின்றேன்
நிலவாக நீ வந்து
நெஞ்சினுள்ளே நிறைகின்றாய்

மோகத்தின் கவிதைக்கு
முன்னுரைகள் எழுதிவிட்டதடி
முத்துக்களின் முத்தத்தில் சத்தமிடும்
உன் கால் கொலுசு

எட்டி வைத்த நாலடியில்
கொட்டி கிடக்கும் இன்னிசையால்
கட்டி என்னை இழுக்கின்றாய்
விட்டிலாகி விட்டேனடி..

மனதோரம் மழைச்சாரல் வீச
மனம் பொங்கி மகிழுதடி
தேவதை உன்னை கொஞ்சியதால் 
தேனாய் இனிக்குதடி இதழோரம்......!!

Friday, December 15, 2017

கிராமத்து சொர்க்கம்
-------------------------------------
 காலையில் எழுந்து  
அவசரங்கள்  ஏதுமின்றி  
அன்றாட வேலைகளை  
முடித்தவிட்டு....

ஆலமர நிழலமர்ந்து
ஆசுவாசமாய் கதையளந்து
பஞ்சாயத்து பேசிவிட்டு....

சிறுபிள்ளை போலே
இனிப்பு நீர் ஒழிகிட
நாவூறும் தேன்மிட்டாய் ருசித்து.....

எட்டிப்பறித்த புளியங்காயை
நண்பர்களோடு சுவைக்கையிலே
உச்சிமண்டையில் ஏறுமே புளிப்பு...  

எட்டு ஊரு மணக்க
கல்சட்டியில் ஆச்சி வைக்கும்
கருவாட்டுக் குழம்பும்
கைகுத்தல் அரிசி சோறும்
வேகும்போதே வாசம் வீசுமே ...

நிலாச்சோறு சாப்பிடவே
வட்டமாய் வந்தமர
அன்பு கூட்டிப்பிசைவாளே அம்மாவும்
ஆளுக்கொரு உருண்டை வாங்கி
நெஞ்சு நிறைய உண்டு களித்து
தென்னங்கீற்றின் அசைவினிலே  
தென்றல் வந்து தாலாட்ட
கண்ணயர்ந்தால்.....
ஆகா.......
சொர்க்கமாய் இனிக்குமே...

 அலைப்பேசியில்  அளவளாவி
பணம் தேடும் பிணங்களாகி
அடுத்தவர்   துயரை
அறிந்திடாது போகின்ற 
நகரத்து வாழ்க்கையிலே
எங்கப்பா சொர்க்கமிருக்கு...?

Monday, May 15, 2017

சோறு கொண்டு போற புள்ள
 ------------------------------------------------------------------
கண்டாங்கி சேலை கட்டி
களத்துமேடு போற குட்டி
 அயிரை மீனு குழம்பு வச்சு
அத்தான் எனக்கு ஊட்டிவிடு

சோறு கொண்டு போற புள்ள
சலங்க குலுங்க வாடி புள்ள
ஒத்தையில போகையிலே
ஓரக்கண்ணால பாரு கொஞ்சம் 

ஓரக்கண்ணு ஏன் மாமா
ஒனக்குத்தான் நானிருக்கேன்
ஆளான நாள்முதலா  
ஆசையோட காத்திருக்கேன்

 பார்த்தகண்ணு பழிசொல்லுமுன்ன
பரிசம் போட வந்தாலென்ன
சேதிசொல்லும் தேதி சொல்லுங்க
 சொக்கத்தங்கமா காத்திருப்பேன்

காத்திருக்கும் செல்லக்குட்டி
கூட்டிப்போவேன் தாலிகட்டி
காலமெலாம் காத்து நிப்பேன்
கண்ணுக்குள்ள உன்ன வெச்சி....!

ரஞ்சனா கிருஷ்ணன்
 

நெஞ்சு பொறுக்குதில்லையே
-----------------------------------------------------------
  ஒரு குப்பைத் தொட்டியின் வேதனை
----------------------------------------------------------------------

நெஞ்சு பொறுக்குதில்லையே
  மனிதர்களின் 
வேசமிடும் முகங்களை
காணும்போது...
வேண்டாமென 
தூக்கியெறிகின்ற
பொருட்களோடு 
எறிகின்ற பொருளா 
குழந்தைச் செல்வம்
இல்லையென பலரிங்கே
ஏங்கித் தவித்திருக்க
கிடைத்த செல்வமதை
தூக்கி வீசிட மனம்தான்
துணிந்தது எங்ஙணமோ?  

அன்பே அமுதேயென
தீஞ்சுவை வார்த்தைதனில்
மயங்கியே
காமத்தீயில் எரிந்துவிட்டு
வேண்டாத குழந்தையை
 மனமதை கல்லாக்கி
குப்பையில் எறிகின்றாய்
 
நாய்களும் எறும்புகளும் 
கடித்திடும்போது
 அழுதிடும் குழந்தையோடு
அழுகிறேன் உயிரற்ற நானும் .....!!
நட்பு
-----------

அறிவதில் கடினமாகி
விலகுவதில் முடியாததாகி
மறப்பதில் இயலாததாகி
இருக்கும் உண்மை நட்பு

விழியில் வரும்நீர் 
வழியும் முன்னே
அணை போட்டுத் தடுக்கும் 
காலத்தால் அழியாத நட்பு

மலரைப்போல் 
மென்மையானது
 சூரியனைப்போல் 
பிரகாசமானது நட்பு
 
நட்பில்லா மனிதன்
நரம்பில்லா வீணை...!

 ரஞ்சனா கிருஷ்ணன்.