Monday, May 9, 2011

உணவே மருந்து

              பிரம்மி, பிரம்ம மாண்டூகி, மாண்டூக பரனி,கொட்டு கோலா போன்ற அற்புத பெயர்கள் கொண்ட நாம் அனைவரும் அறிந்த கீரை வல்லாரை. ஆயுளை கூட்டி, இளமையை தரும் காயகல்பம் என்று ஆயுர்வேதம் இதை அழைகிறது. இளமை மட்டுமன்றி, உடல் வனப்பு, சக்தி, மூளை திறன், நினைவாற்றல், ஜீரண சக்தி, ரத்த விருத்தி என அனைத்து விதத்திலும் நன்மை செய்யும் இது, நீரிழிவு நோயாளிகளுக்கும், ரத்த சோகை கண்டவர்களுக்கும் அருமருந்து.
         தையாமின்(பி1), நையாசின்(பி3), ரிபோஃபேளாவின்(பி2) , பைரிடாக்ஸின்(பி6) மற்றும் கால்சியம், மாங்கனீஸ், மெக்னீசியம், சோடியம் .......அப்பாடா..... சத்துக்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
               ஆயுர்வேத ரசாயனங்கள் செய்வதற்கு இது முக்கிய மூலப் பொருளாக உள்ளது. அதுமட்டுமின்றி  நாள்பட்ட  வியாதிகளை தீர்க்கவும் வல்லாரை பெரிதும் உதவி புரிகிறது. வெரிகோஸ் வெயின்ஸ், சோரியாசிஸ், நாள்பட்ட ஆராத காயம் , வயிற்றுப்புண், தோல் நோய்களுக்கு மருந்தாகிறது.இது சளி ,ஆஸ்துமா போன்றவற்றிர்க்கும் மருந்தாகும்.
 
      உணவில் அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் மேற்குறிப்பிட்ட பயன்களை பெறலாம். இதை வைத்து செய்யும் சில உணவு முறைகள்

1 வல்லாரை துவையல்

தேவையானவை
வல்லாரை ----1கட்டு
சின்ன வெங்காயம்---10
தேங்காய் துருவியது ---1 கைப்பிடி
பூண்டு---5
கடலைப்பருப்பு--- 2ஸ்பூன்
உளுத்தம் பருப்பு ---2 ஸ்பூன்
புளி கோலி அளவு
உப்பு தேவையானது
சிவப்பு மிளகாய்---3
எண்ணை --தேவையான அளவு

கடுகு, பெருங்காயம் தாளிக்க

கடாயில் சிறிதளவு எண்ணை விட்டு ,அதில் பருப்புகள், மிளகாய் போட்டு சிவக்க வறுக்கவும். கீரையை சுத்தம் செய்து தனியாக வதக்கவும். வெங்காயம் ,பூண்டு வதக்கவும், எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து ,புளி, தேவையான உப்பு போட்டு மிக்ஸியில் அரைக்கவும். பின்பு தாளிக்க கொடுத்துள்ளதை தாளித்து துவையலில் சேர்க்கவும்.

சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட ஏற்றது.

2 வல்லாரை கூட்டு

வல்லாரை --1கட்டு
சின்ன வெங்காயம்---10
 தக்காளி ---2
பாசிப்பருப்பு ---1 கப்
உப்பு தேவையான அளவு

அரைப்பதற்கு
தேங்காய்---1கப்
சிவப்பு மிளகாய்---3
சீரகம்--1ஸ்பூன்

தாளிக்க
கடுகு, பெருங்காயம்


குக்கரில் சுத்தம் செய்த கீரை, வெங்காயம், தக்காளி, பருப்பு போட்டு 3 விசில் விடவும். அரைக்க கொடுத்துள்ளதை அரைத்து ,குக்கரில் வேகவைத்துள்ளதுடன் சேர்க்கவும்.உப்பு போட்டு ஒரு கொதி விடவும். தாளிக்கவும்.

சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம் , சப்பாத்திக்கு  தொட்டுக் கொள்ளவும் பயன்படுத்தலாம்.

3 வல்லாரை சூப்

வல்லாரை --1கட்டு
சின்ன வெங்காயம்---10
பூண்டு--5
தக்காளி--2
உப்பு--தேவையானது
மிளகு சீரகம் வறுத்து அரைத்த தூள் --2 ஸ்பூன்

எல்லா பொருட்களையும் ஒன்றாக குக்கரில் போட்டு 3 விசில் விடவும். அதோடு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதிக்கும் போது உப்பு மிளகு சீரகத்தூள் போட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும். தனியாக ஒரு கடாயில் சிறிதளவு வெண்ணை போட்டு பட்டை சோம்பு தாளித்து சேர்க்கவும். விரும்பினால் பிரஷ் கிரீம் சேர்க்கவும்.