Monday, May 15, 2017

சோறு கொண்டு போற புள்ள
 ------------------------------------------------------------------
கண்டாங்கி சேலை கட்டி
களத்துமேடு போற குட்டி
 அயிரை மீனு குழம்பு வச்சு
அத்தான் எனக்கு ஊட்டிவிடு

சோறு கொண்டு போற புள்ள
சலங்க குலுங்க வாடி புள்ள
ஒத்தையில போகையிலே
ஓரக்கண்ணால பாரு கொஞ்சம் 

ஓரக்கண்ணு ஏன் மாமா
ஒனக்குத்தான் நானிருக்கேன்
ஆளான நாள்முதலா  
ஆசையோட காத்திருக்கேன்

 பார்த்தகண்ணு பழிசொல்லுமுன்ன
பரிசம் போட வந்தாலென்ன
சேதிசொல்லும் தேதி சொல்லுங்க
 சொக்கத்தங்கமா காத்திருப்பேன்

காத்திருக்கும் செல்லக்குட்டி
கூட்டிப்போவேன் தாலிகட்டி
காலமெலாம் காத்து நிப்பேன்
கண்ணுக்குள்ள உன்ன வெச்சி....!

ரஞ்சனா கிருஷ்ணன்
 

நெஞ்சு பொறுக்குதில்லையே
-----------------------------------------------------------
  ஒரு குப்பைத் தொட்டியின் வேதனை
----------------------------------------------------------------------

நெஞ்சு பொறுக்குதில்லையே
  மனிதர்களின் 
வேசமிடும் முகங்களை
காணும்போது...
வேண்டாமென 
தூக்கியெறிகின்ற
பொருட்களோடு 
எறிகின்ற பொருளா 
குழந்தைச் செல்வம்
இல்லையென பலரிங்கே
ஏங்கித் தவித்திருக்க
கிடைத்த செல்வமதை
தூக்கி வீசிட மனம்தான்
துணிந்தது எங்ஙணமோ?  

அன்பே அமுதேயென
தீஞ்சுவை வார்த்தைதனில்
மயங்கியே
காமத்தீயில் எரிந்துவிட்டு
வேண்டாத குழந்தையை
 மனமதை கல்லாக்கி
குப்பையில் எறிகின்றாய்
 
நாய்களும் எறும்புகளும் 
கடித்திடும்போது
 அழுதிடும் குழந்தையோடு
அழுகிறேன் உயிரற்ற நானும் .....!!
நட்பு
-----------

அறிவதில் கடினமாகி
விலகுவதில் முடியாததாகி
மறப்பதில் இயலாததாகி
இருக்கும் உண்மை நட்பு

விழியில் வரும்நீர் 
வழியும் முன்னே
அணை போட்டுத் தடுக்கும் 
காலத்தால் அழியாத நட்பு

மலரைப்போல் 
மென்மையானது
 சூரியனைப்போல் 
பிரகாசமானது நட்பு
 
நட்பில்லா மனிதன்
நரம்பில்லா வீணை...!

 ரஞ்சனா கிருஷ்ணன்.
இமைக்குள் நீ
-------------------------------
அன்பே விழிகளின் வழியே
இதயம் நுழைந்தவள் 
 மெளனமாகிச் செல்கிறாயடி

காலை கதிரவனின்கதிர் பட்டு
மலர்கின்ற மலர்களில் 
உறங்கும் பனித்துளி போல

இமைகளில் துளிர்க்கின்ற
விழிநீர் தனை
விழிச்சிறைக்குள் 
பூட்டி வைக்கிறேன்

பிறர் அறியாது
விழிதாழ்த்தி நிலம் பார்த்தால்
என் காலடியிலும்  காவேரியா ...?!

ரஞ்சனா கிருஷ்ணன்.
பயிறு தீஞ்சு போயாச்சு..... வயிறு காஞ்சு போயாச்சு....
--------+--------------


ஏ புள்ள கருப்பாயி 
இங்க வந்து பாருதாயி
மனசுக்குள்ள ஆசை வச்சு
சாமிக்கு தான் பூசை போட்டு
போட்ட விதை அத்தனையும்
ஒண்ணு கூட முளைக்கலியே

பெஞ்ச மழை பத்தலையே
போன எடம் புரியலையே
ஆறு குளம் ஆவியாச்சு
ஓடையெல்லாம் கட்டடமாச்சு

நட்டு வச்ச தென்ன வாழை
நறுங்கி தான் போயாச்சு
அத்த மக ரத்தினமே
ராத்தூக்கம் போயாச்சு

வீடு வித்த காசு போட்டு
செஞ்சி போட்ட வெள்ளாமை
வெத நெல்லு காணலயே
சோறு கூட இல்லையே....

கேட்க யாரும் இல்லையே
ராசா மனசு இறங்கலயே
பயிறு தீஞ்சு போயாச்சு
வயிறும்​ காஞ்சு போயாச்சு...!!
கண்டாங்கி சேலையிலே
*****************************************


கண்டாங்கி சேலையிலே
கஞ்சி கொண்டு போறவளே
கம்மாக்கரை ஓரத்திலே 
மாமன் நானும் 
நிக்கிறேன்டி கண்ணம்மா
நீ கண்டுக்காம 
போறியேடி செல்லம்மா
சும்மா நின்னு 
பேசினாத்தான் என்னம்மா
நீ குறைஞ்சித்தான்
போயிருவியா சொல்லம்மா

கருவாச்சி கட்டழகி 
சொல்லுறத கேட்டுக்கடி
உன் மனசத்தான் மாத்திக்கடி
இந்த மாமனதான் ஏத்துக்கடி

கூடையிலே கஞ்சி கொஞ்சம் இருக்குது
அது கண்ணடிச்சி மாமனதான் உசுப்புது
கிட்டவந்து நின்னாக்கா முறைக்குது
கட்டியிருக்கும் பட்டு மட்டும் இழுக்குது
மனசுக்குள்ள உன் நெனப்பு இருக்குது
மயக்கிப்போகும் புன்னகைக்கு ஏங்குது

வாங்கி வந்த தாலி உன்ன அழைக்குது
வஞ்சி உந்தன் கழுத்துக்குத்தான் தவிக்குது
பொழுது சாஞ்சி ரொம்ப நேரம் ஆகுது
உனக்காக காத்திருந்து உடலும் நோகுது

நிலக்கோட்டை ஊரினிலே
ஏகடநாதர் கோவிலிலே
கல்யாணம் தான் 
கட்டிக்கலாம்டி கண்ணம்மா
சம்மதம் ஒன்னு சொல்லிப்போடு பொன்னம்மா
கண்ணுக்குள்ள வெச்சிப்பேன்டி கண்ணம்மா
நாம கருத்தாக வாழலாம்டி பொன்னம்மா... !

ரஞ்சனா கிருஷ்ணன்
அன்ன நடையழகி
அலங்கார இடையழகி
பின்னல் சடையழகி கண்ணம்மா
பக்கத்திலே வாடி நீயும் செல்லம்மா

கட்டான கட்டழகா
கருத்தான பேச்சழகா
பின்னாடி வருவதென்ன சின்னையா 
பார்க்குறாங்க எல்லாரும்தான் செல்லையா

தென்னைதோப்பு ஓரத்திலே
தேங்காய பறிக்கையிலே
பார்க்காம போறியேடி கண்ணம்மா
நீ  மச்சானிடம் பேசலையேடி செல்லம்மா

மாந்தோப்பு பக்கத்திலே
மாங்காய பறிக்கையிலே
அணைச்சிக்க துடிப்பதென்ன சின்னயா
அஞ்சாறு மாசம் போகட்டும் செல்லையா
 
அந்தி சாயும் நேரத்திலே
 அல்லிப்பூ பூக்கையிலே
ஆத்துப்பக்கம் காத்திருந்தேன் கண்ணம்மா
நீ அங்கேயும் வரலையேடி செல்லம்மா

சோழவந்தான் பக்கத்திலே
பொழுது போன நேரத்திலே
சொக்கி நாம பேசிடலாம் கண்ணம்மா
சொன்னபடி அங்க வாடி செல்லம்மா

சோடிபோட்டு போகையிலே
சொக்கநாதர் பார்க்கையிலே
சொன்னபடி வந்திடுங்க சின்னையா
சம்மதம்ஒன்னு சொல்லிடுவேன் செல்லையா.

 ரஞ்சனா கிருஷ்ணன்