Friday, June 4, 2010

தடம் மாறும் பெருங்கையன்

மே மாதம் 24 தேதி உயிரோசையில் வெளிவந்துள்ள கட்டுரை இது.

வேழம் ,பூழ்க்கை,பெருங்கை, களிறு(ஆண்),பிடி(பெண்) என பலவேறு சொல்மாலைகளை சூடிக் கொண்டிருக்கும் யானைகள் என்ற பேருயிர் இனம், தன் தடங்களை (corridors) தொலைத்துவிட்டு அலைந்து வருகிறது.மனிதனுக்கும், யானைக்குமான வாழ்விடப் போராட்டம் ,அதன் தொடர்பான உணவுப் போராட்டம் கடுமையான திசை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எங்கோ ஓரிடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியாக இருந்தாலும் அது யானைகள் பக்கம் குற்றமுள்ளதாக, செய்திகளை பத்திரிக்கைகளும் ,தொலைக்காட்சிகளும் பெரிது படுத்தி வெளியிடுகின்றன. இது மேலும் யானைகள் குறித்த அவநம்பிக்கையை வளர்க்கிறது.


யானைத்தடம் நேர் கோடானது. இது ஓரிடத்திலிருந்து அடுத்த வசிப்பிடத்திற்கு செல்லும் இணைப்புப் பாதையாக அவை செயல்படும். உலகெங்கும் 25,000 தடம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.இந்தியாவில் மட்டும் 88 தடம் உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக 0.5கி.மீ அகலமும், 2கி.மீ நீளமும் கொண்டதாக அவை இருக்கும். இது அவைகளை காடுகளுடனும் ,பிற குழுவை சந்திக்கவும் உதவும். காடு அழிப்பு, நெடுஞ்சாலை அமைத்தல் , காட்டை அழித்து அதை விளை நிலமாக மாற்றுதல், என தன் தடம் இழந்த யானைகள் மனிதனோடும், மனித வசிப்பிடத்தோடும் தொடர்பு கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டது. இச்செயல் அவைகளின் இனப் பெருக்கத்தையும், தங்குமிடத்தையும் பெரிதும் பாதித்தது. இந்தியாவில் International Fund for Animal Welfare(IFAW) மற்றும் Wild Life Trust of India(WTI) போன்றவை ,யானைத்தடத்தை கண்டறிந்து அவற்றை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளன. யானைகள் மட்டுமல்ல ,புலி மற்றும் சிறுத்தை பாதுகாப்பும் இதில் அடங்குகிறது. சுமார் 20 ஆண்டுகளில் சுமார் 50% யானைகள் கொல்லப்பட்டு விட்டன. வீரப்பனும், வீரப்பன் இறந்த பின் பலரும் காட்டழிப்பு, யானை இறப்பிற்கு வழிகோலினர். வாழ்விட அழிப்பில் அல்லலுற்ற யானைகள் ,தங்கள் உறவுமுறை கட்டமைப்பு உடைந்து போவதை தாங்காமல் இறக்கத் துவங்கின.
முதல் முயற்சியாக ,கர்நாடகா மாநிலத்தில் உள்ள பிலிகிரி ரெங்கசாமி கோவில் வனச்சரகத்தை சார்ந்த காடுகளில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. வனத்தை ஒட்டியுள்ள 25.5 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, அங்கு புதிய காவலர்கள் நியமிக்கப்பட்டு காப்பாற்றும் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். IFAW ன் தலைவர் பிரைட் ஓ ரீகன் ,இம்முயற்சி வெற்றி பெற்றதில் தான் மிகவும் மகிழ்ச்சியுற்றதாகவும், கர்நாடகா அரசு தனக்கு பேருதவி செய்ததாகவும் பாராட்டியுள்ளார்.


உலகெங்கினும் செயல்படுத்தப்படும் இத்திட்டம் மலேசியாவில் உள்ள டாமன் நெகாரா வனச் சரணாலயத்தில் செயல்படுத்தப்பட்டு பெரும் வெற்றியை பெற்றுள்ளது. 1676 கி.மீ சுற்றளவு கொண்ட இது, பாதுகாக்கப்பட்ட வனச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 631 யானைகள் ஒரே குழுவாக வாழ்கின்றன. ஆசியாவிலேயே அதிகமாக ஒரே குழுவாக இங்கு மட்டுமே யானைகள் நிம்மதியாக வாழ்கின்றன. இதற்கு வன விலங்கு பாதுகாப்பு அமைச்சகம் Department of Wild Life and National Parks(DWNP) உதவுகிறது. இவர்கள் யானைகளின் ஒவ்வொரு அசைவையும் அறிவியல் துணையோடு, செயற்கை கோள் மூலம் ஆராய்ந்து வருகின்றனர். இவர்கள் ஆய்வில் புலி ,சிறுத்தை, குரங்கு, 30 க்கும் மேற்பட்ட பறவையினங்கள் ,மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள காட்டு நாய் போன்றவை எண்ணிக்கையில் பெருகி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இதே போல் 35,000 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்தோனேசியா, டோசோ நிலோ வனச்சரணாலயம் ,தற்போது WWF மற்றும் அரசின் உதவியோடு 86,000ஏக்கராக விஸ்தீரணப் படுத்தப் பட்டுள்ளது. இங்கு 4,000 வகை செடி மற்றும் அரிய வகை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. 2004ல் துவங்கிய இப்பணி தற்போது பலனை தர துவங்கியுள்ளது. 22 கிராமங்கள் தங்கள் நிலங்களை இச்சரணாலயத்திற்காக இழந்தனர். அவர்களுக்கு அளித்த விழிப்புணர்வு பயிற்சியால் கவரப்பட்டு இம்முயற்சிக்கு ஆதரவு அளித்தனர். அவர்களுக்கு தேவையான உணவு, இருப்பிட ஆதாரங்களை ஏற்படுத்தி தந்ததோடல்லாமல், 4,000 பேரை வேலைக்கு அமர்த்திக் கொண்டனர். 40,000 மக்கள் தொகை கொண்ட மொத்த கிராமமும், சரணாலயத்தை பாதுகாப்பதில் அக்கறையும் , செலுத்தி வருகின்றனர்.



இந்தியாவில் வேறு விதமான நிலைமை உள்ளது. கேரளாவில் மிக அதிக பட்ச யானைகள் கொல்லப்படுவதாக தகவல் கூறுகிறது. மார்க் ஷாண்ட் போன்ற தன்னார்வ சேவகர்கள் தங்கள் சொத்தை விற்றாவது இந்திய யானையை காப்பாற்றியே தீர வேண்டும் என்ற வைராக்கியத்தோடு முனைந்து வருகிறார்கள் . இவர் எழுதிய "TRAVELS WITH MY ELEPHANTS" மற்றும் "QUEEN OF THE ELEPHANTS" ஆகியவை பெரும் புகழ் படைத்தவை. இவர் டச்சு சீமாட்டியின் தம்பியாவார். இவரின் கூற்றுப்படி ,யானைகள் அதிக உணவு வேண்டுபவை. அவை உண்ணும் உணவின் கால்பகுதி , செரிமானம் ஆகாமல் சாணமாக வெளியேறிவிடும். எனவே அவை உணவை தேடி அலையத் துவங்குகின்றன. இதனால் இவை " பேருயிர் பாலூட்டி வகைகளில் நாடோடி இனமாக" அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வயநாடு பகுதியில் உள்ள திரு நெல்லி பகுதியே சர்ச்சைக்குரியதாகும். இங்கு தான் மனித ---யானை மோதல் அதிகம் ஏற்படுகிறது. யானைத்தடம் அதிகம் உள்ள இப்பகுதி, தற்போது காப்பித் தோட்டமாக மாற்றப்பட்டு காசு கொழிக்கும் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. பன்னெடுங்காலமாக தாங்கள் உபயோகித்த வழித்தடத்தை காணாத யானைகள், காடுகளுக்குள் புகுந்து உணவையும், புதிய தடங்களையும் ஏற்படுத்தியதால் , எதிர்ப்புகளையும் ,துன்பத்தையும் தினமும் சந்தித்து வருகின்றன. இதற்கான தீர்வாக அங்குள்ள தோட்டங்களை தாங்களே விலைக்கு வாங்கி அவர்களுக்கு மாற்று இடத்தை தேர்வு செய்து கொடுப்பதன் மூலம் மனித---யானை மோதல் தவிர்க்கப்படும் என்பதை ஷாண்ட் கண்டறிந்தார். இதற்காக WTI ஐச் சேர்ந்த விவேக்மேனனுடன் களத்தில் இறங்கினார் .பெரும் செலவு பிடிக்கும் இம்முயற்சிக்கு ,தன் சொந்த பணத்தை செலவழிக்கத் துவங்கினார்.பலத்த முயற்சிக்கு பிறகு முதல் "மலையாள குடும்ப அகற்றல் பணி " வெற்றி பெற்றது. நான்கு குடும்பங்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு அகன்று "திருளக்குன்னு " என்ற இடத்தில் வசிக்க சம்மதித்தனர். அவர்களுக்கு சொந்தமாக வீடு, தோட்டம் என அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது. தாங்கள் பெரும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளதாகவும், சேதாரமில்லாத விவசாயம் நிறைய பணம் தருவதாகவும் கூறினர். அதே சமயம் பழங்குடி மக்களை நகருக்குள் இடமாற்றம் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. அவர்கள் , புதிய கலாசாரத்தையும், சமுதாய சூழலையும் ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கபடுகிறார்கள். இம்மக்களை தீண்டத் தகாதவர்களாக எண்ணும் போக்கு கேரளா முழுவதும் விரவி காணப்படுகிறது. குடிநீர் கிணறு கூட அவர்களுக்கு அரசே தனியாக அமைத்து தந்துள்ளது. பீகார் ,ஒரிசா மாநிலங்களுக்கு அடுத்து கேரளாவில் மட்டுமே அதிக ஆதிகவாசி பழங்குடியினர் காடுகளுக்குள் வாழ்கின்றனர். வனத்துறையினர், தீவிரவாதிகள், கொள்ளையடிப்போர் என பலராலும் துன்பத்திற்கு ஆளாகும் இவர்கள், மனதால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களால் மட்டுமே காடுகளுக்கும், அங்கு வாழும் ஜீவராசிகளுக்கும் பாதுகாப்பு தரமுடியுமே தவிர வேறு யாராலும் , குறிப்பாக அரசாலும் கூட தரமுடியாது என்கிறார் ஆதிவாசிகள் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்ட "ஜான் ஹெட்ஜ் வெல்". காடுகளை கையகப்படுத்தும் போது இவர்களையும் அப்புறப்படுத்த வேண்டிய சூழல் பெரும் பிரச்சனைக்கு துவக்கப் புள்ளியாகிறது. தீண்டாமையும் , மூட நம்பிக்கையும் யானைகளை மட்டுமல்ல இப்பழங்குடி மக்களையும் தடம் மாறி ஓடச் செய்துள்ளது. இவர்கள் குறித்த உருப்படியான எந்த செயல் திட்டமும் அரசிடம் இல்லை என்பது தான் வேதனை.


பழங்குடி மக்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு தேவையான பயிற்சியையும் , விழிப்புணர்வையும் கொடுப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும் என்கிறார் லூசிகிங் என்ற ஆய்வாளர். இவர் அவர்களை சிறு சிறு குழுக்களாக அமைத்து காடு பாதுகாப்பு குறித்து பல்வேறு உத்திகளை கற்றுத் தந்தார். இம்முயற்சி நீல கிரி மலைத் தொடர்சியிலும் ,சுந்தர வனப் பகுதியிலும் ,மேற்கொள்ளப்பட்டு பெரும் வெற்றியை பெற்றது. இது யானைகளை தவிர புலிகளையும் பாதுகாக்க பெரும் உதவி புரிந்தது. உண்மையில் அங்கு புலிகள் வாழ்வது மிகச்சிரமம் என்கிறார் உல்லாஸ் கரந்த். தடத்தை பறிகொடுத்த யானைகள் மிகுந்த சிரமத்தோடு வாழ்கின்றன. தங்கள் வாழ்வில் ஏராளமான சரிவான நிலப்பகுதிகளையே அவைகள் கடக்க நேரிடுகிறது. அதை அவைகள் விரும்புவதில்லை. பெரும் உடல் கொண்ட அவை பல சமயம் வழுக்கி விழ நேரிடும் . தண்ணீர் வழிந்தோடி பெரும்பாலான சமயம் சிறு ஓடைகள் வறண்டே காணப்படும். காயம், தாகம், உணவு ,குழுச் சண்டை ,எல்லை மீறல் என தன் வாழ்க்கை முழுதும் ஓட்டத்திலேயே கழிக்கின்றன. இவற்றை தவிர்க்க தங்களுக்கென இருக்கும் பகுதியை அமைதியாக வாழ விடாமல், மனிதன் ஆக்கிரமித்தது தான் அவற்றின் கோபத்திற்கு முதல் காரணம்.

சரிவில் இறங்கி விட்டால் மீண்டும் மேடு ஏறுவதற்கு அதற்கு 100 சதவீதம் சக்தி விரயமாகிறது. அதனால் பின் புறத்தையும் பார்க்க இயலாது. அதிக பட்ச தீங்குகள் அனைத்துமே அதன் பின்புறமே நிகழ்த்தப்படுகிறது. இந்த காரணங்களால் சரிவான பகுதிகளை விட்டுவிட்டு விவசாய நிலங்களை நாடுகின்றன. இதன் காரணமாக பல சமயம் கொல்லப்படுகின்றன.இதனை கருத்தில் கொண்ட ஆக்ஸ்போர்டு பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் ,தேன் கூடுகளை வயல் வெளியின் எல்லையில் அமைத்து அதனோடு 8மீ கயிறு இணைத்து அதன் மற்றொரு முனையை அடுத்த கூண்டோடு இணைத்து விடுகின்றனர். கயிறை யானை தட்ட கோபம் கொண்ட தேனீக்கள் யானைகளை கொட்டத்துவங்கும். இதனால் பயந்த யானைகள் அவ்விடத்தை விட்டு அகலும். இம்முயற்சி கென்யாவில் மேற்கொள்ளப்பட்டு பெரும் வெற்றியையும் பெற்றது.
உலகின் அதிசயங்கள் என கல் கட்டிடங்களை காப்பாற்ற முற்படும் நாம், இயற்கையின் இவ்வாறான உயிருள்ள அற்புத அதிசயங்களை காப்பாற்ற முற்பட வேண்டும். அதற்கு தேவையான அடிப்படை விழிப்புணர்வு , குழந்தை பருவம் முதல் கற்றுத்தரப்பட வேண்டும்.
kannan233@gmail.com எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா

வானில் பறக்கும் மத்தாப்புச் சிதறல்கள்....

இக் கட்டுரை இவ்வார உயிரோசையில் வெளிவந்துள்ளது.







சீன ,ஜப்பானிய குழந்தை இலக்கியங்கள் வண்ணத்துப்பூச்சிகளுக்கும், தும்பிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தன.இன்றும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் ,புத்த மதம் பரவிய அனைத்து கீழை நாடுகளும் ,தங்கள் இலக்கியத்தில் மரம்,பூ, பறவைகள், பூச்சிகள், என அனைத்தையும் ,மதித்து ,நம்மையும் அவற்றின் மீது அன்பு கொண்டாட தூண்டின. நம் இந்திய ,தமிழ் குழந்தை இலக்கியங்கள் ,வண்ணத்துப்பூச்சிகளுக்கும் ,குறிப்பாக தும்பிகளுக்கு போதுமான முக்கியத்துவம் தரவில்லை. அங்கு கதாநாயகன் அல்லது கதாநாயகியின் உற்ற தோழனாக, தோழியாக வரும். அவர்களுக்கு தாங்கள் மறந்த பாதையை நினைவூட்டும் தேவதையாக, மரங்களில் அமர்ந்து ரகசியங்களை கூறும் அசரீரியாக ,சோகத்தில் இருக்கும் போது உற்சாகமூட்டும் பாடல் பாடும் கலைஞனாக பல பாத்திரங்களில் உலா வரும்.மாலை வேளையில் நான் நடந்து செல்லும் கண்மாய் பாதை ஓரம் விண்ணில் சிதறிய மத்தாப்புச் சிதறல்களாய், என்னை இப்படித் தான் தினம் தினம் மகிழ்விக்கின்றன.

வீட்டிற்கு மிக அருகில் இருக்கும் மீறு சமுத்திர கண்மாய் மிகவும் மெதுவாக நிரம்பத் துவங்கியுள்ளது. சென்ற வாரம் பெய்த "லைலா" தயவால் பச்சை பட்டாய் எங்கும் புற்கள் முளைத்துள்ளது. இலைகள் தழைத்துள்ளன.காட்டுப்பூக்கள் எங்கும் சிதறி கிடக்க செங்கொன்றை பூத்துக் குலுங்குகின்றது. மைனா,தவிட்டுக் குருவி ,கருங்குருவி, கொக்கு என எண்ணிக்கை பல கொண்டு மாநாடுகள் நடத்து கின்றன.எல்.சுப்ரமணியனும், ஜூபின் மேதாவும் சேர்ந்து நடத்திய கலந்திசை பரவசத்தை, எனக்கு திரும்ப தருகிறது. தென்மேற்கு பருவ மழையின் துவக்க அறிகுறியாக ஈரம் கலந்த பருவக்காற்று, காதின் மடல்களை மெல்ல உரசிச் செல்கிறது. நிறைய பூச்சி இனங்கள் ஊர்ந்து வருகின்றன. சில ரீங்காரமிடுகின்றன. சில ஏதோ சிந்தனையில் அமர்ந்துள்ளன. தென்னை பூ பூத்து தேனீக்களை வரவழைத்துள்ளது. வாழை, குலை தள்ளி நம்மை மரியாதை செய்கிறது. இதை எல்லாம் ரசித்தும், எனக்கு " குறவஞ்சி" எழுத வரவில்லை. எழுத தெரிந்தவர்கள் தேனிக்கு வரலாம். வாழ்க்கையின் அர்த்தத்தையும், மகிழ்ச்சியையும், நொடிப் பொழுதில் அள்ளித் தரும் வல்லமை இயற்கைக்கு மட்டுமே உண்டு என்பதை நான் உணர்கிறேன். மகிழ்ச்சி நீடிக்க, மழை பெய்ய வேண்டும். "மஜ்னு" காக காத்திருக்கிறேன்.
ஓடோநேட்ஸ்(ODONATES) வகுப்பை சேர்ந்த தும்பிகள் இரு வகைப்படும். 1. தட்டான்கள்(DRAGONFLY) இவை அளவில் பெரியவை .பலம் கொண்டவை. கடிப்பவை. 2. ஊசித்தட்டான்கள் அல்லது ஊசித் தும்பிகள் (DAMSELFLY) இவை அளவில் சிறியவை, அழகிய வர்ணக் கலவை கொண்டவை. பலம் குன்றியவை. கடிப்பது என்பது எப்போதாவது நிகழ்வது. 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாய் அறிவியல் கூறுகிறது. தண்ணீரை சார்ந்து வாழும் இவற்றின் வாழ்வியல் அமைப்பு. முட்டை, லார்வா, முழு உருவம் என பல படிகளை கொண்டது, இந்தியாவில் ,500 வகை இருப்பதாகவும், உலகெங்கும் 6000 வகை இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.


சுற்றுப்புற சூழல் என வரும் போது ,பூச்சிகளை கட்டுக்குள் வைப்பதில் தும்பிகள் அதிகளவு பங்களிக்கின்றன. தும்பிகளில் ,குறிப்பாக ஊசித்தும்பிகளில் லார்வா பருவம் மிக முக்கியமானது. அப்போது அவை அதிகளவு உணவை உண்கின்றன. நீர் நிலைகளில் உள்ள கொசு,அவற்றின் முட்டை, சிலந்தி ,உண்ணிகள், செடிகளைத் தாக்கும் பூச்சிகள் என அனைத்தையும் உண்கின்றன. இதனால் மிகச் சிறந்த பல்லுயிர் பெருக்க கட்டுப்பாட்டு காவலனாக செயல்படுகிறது. தும்பிகள் தங்கள்முட்டைகளை நீர் நிலை மேல் காணப்படும் பாறை, செடிகள் ,கிளை போன்ற இடங்களில் இடுகின்றன. பெண்ணானது ஒரு முறைக்கு 100--400 முட்டைகள் இடுகிறது. இவை பொரிக்க 40---250 நாட்கள் எடுக்கின்றன. குளிர் காலங்களில் இவை அதிகளவு நாட்களையும், கோடை காலத்தில் மிக விரைவாகவும் குஞ்சு பொரிக்கின்றன.இவற்றின் முட்டைகள் பசை போல் உள்ள ஒரு ஜெல் திரவத்தால் ஒட்டப்பட்டிருக்கும். இதனால் பிற உயிரினதாக்குதலிலிருந்து ஓரளவு காப்பாற்றிக்கொள்ள உதவுகிறது.
லார்வாக்கள் வெளிவந்த ஒருசில மணி நேரத்தில் ,தனது உண்ணும் வேட்டையை துவங்கும். உண்பதற்கு ஏற்ப அதன் வாய்பகுதி ,சிறிய கீறல் போலும், பற்கள் ரம்பம் போலும் ,மேலும் கீழும் நேர்த்தியாக ஒன்று மற்றொன்றில் அடக்கம் கொள்ளும் வகையில் "ஜிப்" போல அமையப் பெற்றிருப்பதால் ,எந்த இரையையும் இவை எளிதில் துண்டாக்கும் .தப்பிப் பிழைத்தவை "அங்க ஹீனர்களாக"மட்டுமே செல்லமுடியும்.பெண்ணை விட ஆணே மிக விரைவில் பருவம் எய்துகிறது. அவை மிகுந்த துடிப்புடன் இருக்கும். டேம்ஸல் வகை தும்பிகள், தங்கள் உடலை எப்போதும் கதகதப்பாக வைத்துக் கொள்தில் ஆர்வம் கொள்கின்றன.எனவே சூரிய வெப்பத்தை விரும்புகின்றன. டேம்ஸல் வகைக்கும் , டிராகன் வகைக்கும் அதன் உருண்ட கண்கள், மார்பு, முன்னங்கால்கள், முன் இறக்கையை மடக்கி தன்னுள் வைத்துக் கொள்ளும் நேர்த்தி, போன்றவையே அவைகளை பிரித்து காட்டுகின்றன. அதன் உடலளவு மிகப் பெரிய வித்தியாசம் கொள்கிறது.


ஆண் ஊசித்தும்பிகள், பெண்ணை கவர நிறைய உத்திகளை கையாளும். இறக்கைகளை வேகமாக அடித்துக் கொண்டு ரீங்கார இசை எழுப்பும். இத்தனை கால ஆராய்ச்சியில் , தும்பியின் காதல் முறை இவ்வாறே நிறைவேற்றம் கொள்கிறது என எண்ணிக் கொண்டிருந்தனர். தற்போதைய நவீன அறிவியல் முறையின், தெர்மோ கிராபி,அதிவேக டிஜிட்டல் கிராபி முறையாலும் அவைகளின் காதல் வாழ்வு கவனிக்கப்பட்டன. இது வரை கண்டறியாத அதிசய நிகழ்வுகளை கண்டு ஆச்சரியமுற்றனர் விஞ்ஞானிகள். சூரிய ஒளியில் வெப்பமேற்றிய ஆணையே பெண் நாடியது. நிழலிலோ, மழையிலோ, அல்லது உடல் குளிர்ந்திருந்த ஆணை அவை நாடவில்லை. உடலுறவில் ஈடுபடும் முன் கூட தங்கள் ஆண் இணையை மாற்றிக் கொள்ள அவை தயங்கவில்லை. ஆணின் உதவியோடு , சூடான பகுதிகளுக்கு பிரயாணிக்கவும், குடித்தனம் நடத்தவும் விரும்புகிறது. தகுந்த இடத்தை ஆண் தேர்ந்தெடுத்த உடன்,பெண் முட்டை இடுகிறது. அந்த இடம் பெரும்பாலும் நல்ல வெப்பம் கொண்டதாகவும், நீர் நிலை தேக்கம் கொண்டதாகவும் இருக்கவேண்டும். முட்டைகள் வேகமாக பொரியவும், லார்வாக்களுக்கு வேண்டிய உணவு கிடைப்பதற்குமான முன்னேர்பாடே இது. இதில் மிகுந்த ஆச்சரியமான விஷயம், பெண்முட்டை இடும் போது ஆண் அருகிலிருந்து அதனை அணைத்துக் கொள்ளும். இவ்வாறான அணைப்பு உத்தி முட்டை இடுதலின் போதான வேதனையை தாங்கும் மனநிலையை பெண்ணிற்கு உருவாக்குகிறது. இவ்வாறான முறையை மனிதர்களுக்கும், மருத்துவம் தற்போது பரிந்துரை செய்துவருகிறது.
இவைகள் குறித்த ஆய்வுகள் குறைவாக இருந்தாலும் ,டாக்டர் மைக்கேல் சிவ ஜோதி மற்றும் சுப்ர மணியத்தின் முனைவர் பட்டத்திற்கான குறிப்புகள் நமக்கு பேருதவி புரிகின்றன. பெண் ஆணை தேர்ந்தெடுப்பதிலும், விட்டுபிரிதலிலும் சில நொடிகளை மட்டுமே செலவிடுகின்றன. அதிக வெளிச்சம், நல்ல தட்ப வெப்பம், லேசான காற்று உள்ள ரொமான்டிக் சூழலில் உடலுறவு கொள்ளும். இவ்வளவு நேரம் என்பதில் தீர்மானம் கிடையாது. ஆண் தன் முன் கால்களால் பெண்ணின் கன்னப் பகுதியையும், முன் இறக்கைகளால், மார்பு பகுதியை அணைத்துக் கொண்டும் பறக்கும். இவ்விதமான நிலைகளை தேவைக்கு தகுந்தார் போல் மாற்றிக் கொள்ளும். வாலின் இறுதியில் காணப்படும் கொக்கி போன்ற தன் குறியை பெண்ணின் புழைக்குள் செலுத்தும் . பெண்ணின் அடிவயிற்றில் புழை காணப்படும். கிறிஸ்டோபர் ஆண்டர்சன் இவைகளின் பாலுணர்வு பற்றி மட்டும் 100 பக்கம் எழுதியுள்ளார். மீன் மற்றும் சிறு பறவைகள் போன்று தும்பிகளும், குறிப்பாக ஆண்கள் அதிக நிறக் கலவை கொண்டவை. பளிச்சிடும் வண்ணம், வளைந்து நெளிந்த கொம்புகள், அலங்கார முடி, ஒயிலான நடை என உயிரினங்கள் தங்கள் காம உணர்வை வெளிப்படுத்துகின்றன. பருவம் எய்திய ஆணே இம்முறைகளை கடைபிடிக்கின்றன. இதை இவர் "இரண்டாம் நிலை பால் நகர்வு " எனஅழைக்கிறார். இம்மாதிரியான செயல்பாடு ,உடல் மாற்ற கூறுகள் தனது இணையை தேர்ந் தெடுக்க மட்டுமல்லாது, எதிரி மாற்று இனம் குறித்த எச்சரிக்கை உணர்வுக்கும் பயன்படுவதாக கூறுகிறார். பெண் தும்பி வண்ணங்களை கருத்தில் கொண்டே தன் கணவனை நினைவில் கொள்ளும். "ஹெட்டர்னா" வகை தும்பிகளில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டு கண்டறியப்பட்டது. பவளப் பாறை மீன்களும், இம்மாதிரியான செயல் பாடு கொண்டவை. மீன்களும், தும்பிகளும் தங்கள் குடும்ப அமைப்பினுள் நெருங்கிய சொந்தங்களை துணையாக தேர்ந்தெடுப்பதில்லை. மரபு ரீதியான தாக்கத்தை தங்களுக்குள் குறைத்துக் கொள்ள இவை உதவுகின்றன.
ஆண் தனது நிறத்தை திடீரென மாற்றி பிற பெண்களுடன் உறவு வைத்துக் கொள்கிறது. முட்டையிட்டுக் கொண்டிருக்கும் பெண்ணை அதன் ஆண் துணையை விரட்டி விட்டு ,கடத்திச் செல்லும் "தாதா" செயல் போன்றவை இவ்வினத்தில் சர்வ சாதாரணம். பலம் நிறைந்த ஆண்கள் இவ்வாறான செயல் மூலம், தங்கள் கட்டுப்பாட்டு எல்லையை விஸ்தீரனம் செய்யும். மணிக்கு 25---30 கி.மீ வேகத்தில் பறக்கும். 180 டிகிரி தலைகீழாக சுற்றும் .பலம் ஒன்றே அதன் எல்லையையும், உயிரையும் தீர்மானிக்கும். தவிட்டுக் குருவிகள், கரிச்சான் குருவிகள், தேன் சிட்டு போன்றவை இந்த கால கட்டங்களில் இவைகளை உணவாக்கிக் கொள்ளும். பலம் குன்றியவை, மேற்கூறிய ஆபத்துகள் தவிர்த்து காற்றின் அழுத்தம் தாளாமலும் இறந்துவிடும். பறவைகளின் தாக்குதலிலிருந்து தப்பிக்க அவ்வப்போது தங்கள் நிறங்களை மாற்றிக் கொள்ளும். நீண்ட தூர பயணக் களைப்பு நீங்க வயது வந்த ஆண்கள் ஏதேனும் நீர் நிலைகளில் ஒன்றாக கூடி பொழுதை கழிக்கும். அப்போது இறக்கைகளை அசைத்தல், மேலும் கீழும் பறத்தல், கிளைவிட்டு கிளை தாவி அமர்தல், பெரிய பூச்சிகளை பிடித்துக் கொண்டு வருதல் என பல வகையான செயல்கள் மூலம் தங்கள் உணர்வுகளை சகாக்களுக்கு வெளிப்படுத்தும். பெண்ணை கவர இவ்வாறான முயற்சிகளின் பயிற்சி களமாக இச்செயல்களை ஆண்கள் பயன்படுத்துகின்றன. மூங்கில் காடுகளில், அதிகம் வாழவிரும்புகின்றன. மதிய வெயிலை பொருட்படுத்தாமல், பறக்கும் இவை நாளை உங்கள் இல்லம் தேடி வரலாம். மகிழ்வுறு செய்தியை சுமந்து வரும் பறக்கும் தாரகைகளை வரவேற்க தயாரா நீங்கள்......?
kannan233@gmail.com எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா