Thursday, May 5, 2011

அக்ஷய திருதியை ---எப்படி கொண்டாடுவது?

அஷ்ட ஐஸ்வர்யங்களையும், சகல சௌபாக்கியங்களையும் தரவல்ல லக்ஷ்மி தேவி எங்கெல்லாம் வாசம் செய்கிறாள்? எந்த இல்லங்களில் இருக்கிறாள்? எந்த பொருட்களை விரும்புகிறாள்?


தெய்வ பக்தி, ஆற்றல், துணிவு, பொறுமை, இனிய பேச்சு, பெரியோரை மதித்தல், போன்ற நற்பண்புகள் உள்ளவரிடம் நீங்காது இருப்பாள்.

சூரிய உதயத்திற்கு முன் எழுந்து , வீட்டை தூய்மையாக வைத்திருக்கும், குப்பைகளை வீட்டின் முன் கொட்டாமலும், பெருக்கி கோலமிட்டு, தீபமேற்றி ,வழிபாடு செய்கின்றனரோ அங்கே இருப்பாள்.
சங்கு, மஞ்சள், குங்குமம், கற்பூர ஜோதி, துளசிச் செடி, வாழை மரம், நெல்லிக்காய், பூரண கும்பம் போன்றவற்றிலும், பசு, யானை போன்றவற்றிலும் நீங்காது இருப்பாள்.

அக்ஷய திருதியை என்றால் தங்கம் வாங்கித்தான் கொண்டாட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் பெண்கள் அதிகாலை எழுந்து குளித்து ,குத்துவிளக்கேற்றி, மகாலட்சுமி படம் அல்லது அரிசி நிறைந்த செம்பு, அல்லது நீர் நிறைத்து அதில் வாசனை திரவியங்களான பச்சை கற்பூரம், ஏலம், போட்டு வைத்து ,வாசனை மலர்களால் தெரிந்த மந்திரம் கூறி ,பாயசம் நைவேத்தியம் வைத்து , மகாலட்சுமியை வணங்கி ,பின் வீட்டிற்கு சுமங்கலிகளை அழைத்து, முடிந்த வரை தட்சிணை வைத்து தோலுரிக்காத ,மட்டையுடன் கூடிய  தேங்காயை வைத்து மஞ்சள், குங்குமம் தந்து வணங்கினாலே மகாலட்சுமி மகிழ்ந்து இல்லம் வருவாள்.

நாளை (மே 6) அக்ஷய திருதியை இவ்வாறு கொண்டாடுங்களேன்.
பழைய ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்ட மகாலட்சுமி மந்திரம் உங்களுக்காக.....


அஷ்ட லட்சுமி தியானம்

1 தன லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் செல்வத்தின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன்,வணங்குகிறேன்,வணங்குகிறேன்.

2 வித்யா லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் கலை, கல்வியின் வடிவாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

3 தான்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் உணவு பொருட்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன், வணங்குகிறேன்.

4 வீர லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா 
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் வீரம், வெற்றியின் அம்சமாக உறைகிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

5 ஸௌபாக்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் சுகம், நிம்மதியின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

6 சந்தான லட்சுமி

யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா 
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவியானவள் எல்லா உயிர்களிடத்தும் தாயாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

7 காருண்ய லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

8 மஹா லட்சுமி
யா தேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும் அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ அந்த தேவியை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்.

இந்த மந்திரம் கூறி வழிபட்டாலே போதும் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.



கறிவேப்பிலை,,,புதினா பொடி

பல வகையான பொடி வகைகளை செய்து வைத்துக் கொண்டால் ,இரவு நேரத்தில் என்ன சமைப்பது ,எப்போதும் சாம்பார், குழம்பு தான் செய்கிறோமே என்று அலுத்துக் கொள்ள வேண்டாம். பொடிகள் இருந்தால் சூடான சாதத்தில் போட்டு சிறிது நெய் அல்லது நல்லெண்ணை விட்டு பிசைந்து சாப்பிட்டு விடலாம்.

பொடி---1
கறிவேப்பிலை பொடி

தேவையானவை
கடலைப்பருப்பு ---1 கரண்டி
உளுத்தம் பருப்பு----2 கரண்டி
காய்ந்த மிளகாய்---4
கறிவேப்பிலை--- 1கப் (கழுவி சுத்தம் செய்து லேசாக காயவைக்கவும்)
உப்பு தேவையான அளவு
பெருங்காயம் சிறிது

கடாயில் 1 ஸ்பூன் எண்ணைவிட்டு பருப்புகள், மிளகாய் சேர்த்து சிவக்க வறுத்து தனியாக வைக்கவும்.மீண்டும் 1ஸ்பூன் எண்ணை விட்டு கறிவேப்பிலையை போட்டு நன்கு வறுக்கவும். சிறிது ஆறிய பின் , வறுத்த பொருட்கள், உப்பு பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
காற்று புகாமல் டப்பாவில் வைத்திருந்தால் ,15 நாட்கள் வரை நன்றாக இருக்கும்.

பொடி---2 

புதினா பொடி

மேற்கூறிய  பொருட்களில் கறிவேப்பிலைக்கு பதிலாக புதினா இலைகளை சேர்க்கவும். மற்ற பொருட்கள், செய்முறை மேற்கூறியதே.

இதுவும் 15 நாள் வரை கெடாது.

பயன்கள்
கறிவேப்பிலை, புதினாவில் இரும்புச் சத்து நிறைய உள்ளது. பருப்புகளோடு சேரும் போது புரதமும் கிடைத்து சரிவிகித உணவாகிறது.

 (இன்னும் பல வகை கூறுகிறேன்)



மஷ்ரூம் சூப்

 தினமும் ஏதாவது ஒரு சூப் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வழக்கம் போல் தக்காளி சூப் வெஜிடபிள் சூப் என்றில்லாமல் மஷ்ரூமில் சூப் செய்யலாம்

 மஷ்ரூம் சூப்  .
 
 மஷ்ரூம்
காரட்,
பீன்ஸ்
வெங்காயம்
உப்பு ,மிளகுத்தூள்
வெண்ணை அல்லது ஆலிவ் ஆயில் இது தான் தேவையானது.
 

மஷ்ரூமை சுத்தம் செய்து சிறியதாக கட் செய்யவும். காரட், பீன்ஸ், வெங்காயம், பொடியாக கட் செய்யவும்.ஒரு கடாயில் வெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் போட்டு காய்கறிகள், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பாதியளவு வதங்கியதும்,   மஷ்ரூம்  சேர்க்கவும்.லேசாக வதங்கியதும், தண்ணீர் ஊற்றவும். நன்கு கொதித்ததும் உப்பு , மிளகுத்தூள் ,போடவும். சூடாகப் பரிமாறவும்.விருப்பம் உள்ளவர்கள் இதில் குடமிளகாய் கூட சேர்க்கலாம். இன்னும் சுவையாக இருக்கும்.


புரோட்டீன் ரிச் ஸ்பெஷல் வடகறி

எனக்கு ஏற்றார் போல் அருமையான ஜோடியை தயார் செய்ய மாட்டீர்களா ?என்று உங்கள் வீட்டின் இட்லி, தோசைகளின் கவலை தோய்ந்த குரல் கேட்கிறது. வடகறி அந்த குறையை நிச்சயம் போக்கும்

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு ----1கப்
துவரம் பருப்பு--கால் கப்
காய்ந்த மிளகாய் ---2
உப்பு---தேவையான அளவு
எண்ணை ---3 குழிக்கரண்டி

பருப்புகளை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின் உப்பு, மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக  அரைக்கவும்.
கடாயில் 1 கரண்டி எண்ணை விட்டு அரைத்த பருப்பு கலவையை நன்கு வறுக்கவும். அவ்வப்போது மீத முள்ள எண்ணையை சிறிது சிறிதாக விடவும். பருப்பு நன்கு உதிராக ,மொறு மொறுப்பாக வரும் வரை வறுக்கவும். பருப்பின் மணம் நன்கு வரும்.
இதை தனியாக வைத்துக் கொள்ளவும்.

மசாலா செய்வதற்கு தேவையானவை

வெங்காயம்---3(அரைத்துக் கொள்ளவும்)
தக்காளி ----3(அரைத்துக்கொள்ளவும்)
இஞ்சி, பூண்டு விழுது---2 ஸ்பூன்
மிளகாய் தூள்---1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் --1 ஸ்பூன்
உப்பு தேவையானது
எண்ணை தேவையானது

தாளிக்க
பட்டை,சோம்பு, கிராம்பு, ஏலம்
பச்சை மிளகாய் ---2

கடாயில் எண்ணை விட்டு தாளித்து, பின் அரைத்த வெங்காயம் ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறி, பச்சை வாசனை போனவுடன், தக்காளி விழுதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து மேலும் கொதிக்க விடவும். மிளகாய்தூள், கரம்மசாலா தூள், உப்பு சேர்க்கவும். இறுதியில் வறுத்து வைத்துள்ள பருப்பு கலவையை போட்டு கிளறி, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். தேவையெனில் சிறிதளவு எண்ணை அல்லது வெண்ணை மேலாக விடவும்.