Wednesday, April 27, 2011

மேத்தி பராத்தா

பராத்தா என்பது நம் ஊர் சப்பாத்தி தான். அதில் நடுவில் ஸ்டஃப் செய்து சப்பாத்தி போல் திரட்டி சுட்டு எடுப்பார்கள் அவ்வளவு தான். இது பொதுவாக வட நாட்டில் பிரசித்தி பெற்றது.

மேத்தி பராத்தா செய்ய தேவையானவை
1கப் கோதுமை மாவு
2 ஸ்பூன் எண்ணை
உப்பு தேவையான அளவு
1குழிக் கரண்டி வெதுவெதுப்பான பால்

மாவு தயாரிப்பு 
மேற்குறிப்பிட்ட எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து ,தேவையான அளவு தண்ணீர் விட்டு மிருதுவான சப்பாத்தி மாவு போல் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்

ஸ்டஃப் செய்ய தேவையானவை
1 கட்டு வெந்தயக் கீரை
பச்சை மிளகாய் 4
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
வெங்காயம் 2(பொடியாக நறுக்கவும்)
உப்பு தேவையான அளவு

தாளிக்க
பட்டை சோம்பு

கடாயில் எண்ணை விட்டு தாளிக்கவும்,அதில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு சிவப்பாகும் வரை வதக்கவும்,இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். வெந்தயக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அதையும் சேர்க்கவும்.நன்கு வேகவிடவும். தேவையான உப்பு போட்டு கிளறி இறக்கவும்.


பராத்தா செய்முறை
மாவினை சிறு உருண்டையாக செய்து  கனமாக திரட்டவும்,அதில் ஸ்டஃப்பிங் வைத்து ஓரங்களை நன்றாக மூடி மெல்லிய தாக மீண்டும் திரட்டவும். தவாவை சூடாக்கி பராத்தாக்களை போட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

பயன்கள்
வெந்தயக் கீரையில் இரும்புச் சத்து நிறைய உள்ளது.குளிர்ச்சி தரவல்லது. கோதுமை மாவில் நார் சத்து அதிகம்.








பனீர் கோப்தா

ஸ்டார் ஹோட்டல்,ஹோட்டல்களில் கோப்தா சைட்டிஷ்களை அதிக விலைக்கு தருவார்கள். சுவையாக இருப்பதால் விலையை பற்றி கவலை படுவதில்லை. ஆனால் அதிக செலவு செய்யாமல் நாம் வீட்டிலேயே இவற்றை செய்யலாம். சப்பாத்தி, பூரி, நான், புல்கா வகைகளுக்கு மிகவும் ஏற்றது.

தேவையான பொருட்கள்

வீட்டிலேயே பனீர் தயாரிக்கலாம்,அல்லது காட்டேஜ் சீஸ் வாங்கிக் கொள்ளலாம்.
வீட்டில் பனீர் தயாரிக்க தேவையானவை
பால் 1 லிட்டர்
எலுமிச்சை சாறு 3 ஸ்பூன்( 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு ,1ஸ்பூன் சுடு நீர் கலந்து கொள்ளவும்)

தயாரிப்பு முறை
பாலை அடி கனமான பாத்திரத்தில் போட்டு காய்ச்சவும். நன்கு கொதிக்கும் போது , சிறிது சிறிதாக எலுமிச்சை சாறு சேர்க்கவும். பனீர் தனியாக பிரிய ஆரம்பிக்கும்.
வடிதட்டில் கொட்டி நன்கு பச்சைதண்ணீர் கொண்டு 5 நிமிடம் அலசவும். பிறகு தண்ணீர் முழுவதையும், வடிகட்டி பிழியவும்.இது தான் பனீர்.

கோப்தா செய்வதற்கு தேவையானவை
பனீர் 200 கிராம்
வேகவைத்த உருளைக்கிழங்கு 2
மிளகாய் தூள் 1ஸ்பூன்
சோள மாவு 2ஸ்பூன்
கரம் மசாலா 1 ஸ்பூன்
எண்ணை பொரிப்பதற்கு
உப்பு தேவையான அளவு

கோப்தா செய்முறை
உருளைக்கிழங்கை தோலுரித்து மசிக்கவும், அதோடு துருவிய பனீர்,மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ,சோள மாவு, உப்பு சேர்த்து நன்கு பிசையவும். உருண்டைகளாக்கி எண்ணையில் பொன்னிறமாக பொரிக்கவும்.


கிரேவி செய்வதற்கு தேவையானவை
வெங்காயம்--4
தக்காளி---4
முந்திரி --10 (ஊற வைத்து விழுதாக அரைக்கவும்)
கரம் மசாலா தூள் --1ஸ்பூன்
மிளகாய்தூள் 1ஸ்பூன்
தயிர்--- அரைகப்
உப்பு தேவையான அளவு
கொத்தமல்லி தழை--அலங்கரிக்க
வெண்ணை 2ஸ்பூன்

வெங்காயம், தக்காளியை அரைக்கவும். கடாயில் வெண்ணை போட்டு, பட்டை சோம்பு தாளித்து, வெங்காய,தக்காளி விழுது போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.அதில் அரைத்த முந்திரி விழுது, உப்பு ,மிளகாய்தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், தயிர், 2 கப் தண்ணீர் சேர்த்து  5 நிமிடம் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும், கொத்தமல்லி தழை, பொரித்த கோப்தாக்கள் போட்டு லேசாக கிளறி 2 நிமிடம் கொதிக்க விடவும்.

குறிப்பு
பரிமாறுவதற்கு முன்பு மட்டுமே பொரித்த கோப்தாக்களை சேர்க்கவேண்டும். இல்லாவிட்டால் அதிகம் ஊறி கோப்தா குழைந்து விடும்.