Friday, June 11, 2010

இந்தியாவின் இயற்கை வளங்கள் என்ன அம்பானிகளின் சொத்தா?

ஒளரங்கசீப் காலத்திற்கு பிறகு சகோதர சண்டை அம்பானி சகோதரர்களால் கவனம் பெறுகிறது. தந்தை, சகோதரர்கள் சிறை வைக்கப் பட்டு கொல்லப் பட்டது அந்த காலம். நாடே சிக்குண்டு திணறுவது இந்தக் காலம். தந்தை திருபாய் அம்பானி உயிரோடு இருந்த போதே பூசல் துவங்கிவிட்டது.உயில் என்று எதுவும் எழுதாமல் உயிரை விட்டார் திருபாய். தாயார் கோகிலா பென் அழுது, புலம்பி, மிரட்டி மற்றும் பல நூதன உபாயங்களை கையாண்டு ஒருவகையில் அவர்களை சமாதானம் செய்தார். இவர்களது பிரச்சனை வீட்டை விட்டு நாட்டை தாக்கும் போது, வரி செலுத்தும், வரி செலுத்தாத, ஒரு வேளை சோற்றுக்கும் வழி இல்லாத ஒவ்வொரு குடி மகனும் பாதிப்புக்கு உள்ளாகிறான். தற்போது பூதாகாரமாக எழுந்திருக்கிறது எரி வாயு பிரச்சனை.


மறைந்த திருபாய் அம்பானிக்கு இரு பிள்ளைகள். மூத்தவர் முகேஷ் , இளையவர் அனில். இருவருக்கும் கோடிக் கணக்கில் சொத்துக்கள் உள்ளது. உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றிருக்கும் இந்தியர். இப்படி வானளாவிய பெருமை கொண்ட இவர்களை நம்பி கோடிக் கணக்கான மக்கள் தங்களது குண்டுமணியளவு பணத்தையும் பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்து நாங்களும் ரிலயன்ஸ் பங்குதாரர்கள் என இருமாந்து உள்ளனர்.இந்தியாவின் அனைத்து பெரு வணிகத்திலும் கால் பதித்த இவர்கள் தற்போது எரி வாயு துறையில் கால் ஊன்றி உள்ளனர். இந்திய இயற்கை வளங்களில் "எரிவாயுத் துறை" அதிகம் பணம் ஈட்டக் கூடிய துறை. பலத்த போட்டிகளுக்கு இடையே ரிலயன்ஸ் கம்பெனிக்கு இந்த காண்ட்ராக்ட்
கிடைத்துள்ளது.
மத்திய அரசு ஆற்றுப் படுகைகளில் எந்தெந்த இடங்களில் இயற்கை எரிவாயு கிடைக்கிறது என்பதை கண்டறிய என்.இ. எல்.எஃப் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. அது தரும் அறிக்கையின் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதற்கு "நியூ எக்ஸ்ப்ளோரேஷன் ஆஃப் லைசன்ஸிங் பாலிஸி" என்று பெயர்.அதன் அடிப்படையில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலயன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு அனுமதி கிடைத்தது.அனுமதியின் பேரில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா- கோதாவரி ஆற்றுப் படுகையில் இயற்கை எரிவாயு எடுக்க மிக தீவிரமான முயற்சியில் இறங்கினார் முகேஷ்.இந்த படுகையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இயற்கை எரிவாயு உள்ளதாக என்.இ.எல்.எஃப் கூறுகிறது.
ரிலயன்ஸ் நிறுவனம், தனது சகோதரரின் ரிலயன்ஸ் நேச்சுரல் ரிசோர்சஸ் நிறுவனத்திற்கு 17 வருட காண்ட்ராக்ட் அடிப்படையில் எரிவாயு வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்தது. அரசு நிறுவனமான என்.டி.பி.ஸி(நேஷனல் தெர்மல் பவர் கார்பரேஷன்)க்கும் சப்ளை செய்ய ஒத்துக்
கொண்டது.அனிலின் நிறுவனம், உ.பி.யில், தாத்ரி என்ற இடத்தில் மின் உற்பத்தி நிலையம் அமைத்துள்ளது.இதற்கு நாள் தோறும் 23,மில்லியன் மெட்ரிக் ஸ்டேன்டர்ட் கியூபிக் மீட்டர் வாயு சப்ளை செய்ய வேண்டும். இதை 2.34 பிரிட்டீஷ் தெர்மல் யூனிட் அளவாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. உலக அளவில் பெட்ரோலியம், வாயு உற்பத்தியில் ஏற்பட்ட விலை நிர்ணய ஏற்ற இறக்கங்கள் குழப்பத்தை உண்டாக்கியது. இங்குதான் துவங்கியது பிரச்சனை.
ரூ112.80 என மத்திய அரசு நிர்ணயித்த விலை நாளடைவில் ரூ 201 ஆக அதாவது டாலர்கணக்கில் 4.2 ஆக உருமாறியது.சர்வதேச சந்தையில் கடந்த ஜூலை மாதம் 2.30 டாலர், 3.30 டாலராக விலை ஏறியது. நிரந்தர மற்ற விலை ஏற்ற இறக்கங்கள் கொடுக்கல், வாங்கல்
பிரச்சனையானது. மத்திய அரசு நிர்ணயித்த பழைய விலைக்குதான் தர வேண்டும் என்ற அனிலின் கோரிக்கையை நிராகரித்தார் முகேஷ். புதிய
விலை நிர்ணயம் செய்யலாம் என்றார் .இது ஒப்பந்த மீறல் என்றுகண்டித்தார் அனில்.இந்த பஞ்சாயத்தை கன்னத்தில் கை வைத்தபடி பார்த்தது மத்திய அரசு. ப.சிதம்பரம், அவர்களது குடும்ப பிரச்சனை என்றார். முரளி தியோரா பிரச்சனை ஏற்படாமல் இருக்க தேசியமயமாக்கலாம் என்றார்.பின்னர் தான் அவ்வாறு கூறவில்லை என மறுத்தார். பொது நல அமைப்பும் ,இயற்கை வள நல ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்தனர். பிரச்சனை முற்றாமல் இருக்க அரசு நிறுவனமான என்.டி.பி.ஸிக்கு தினமும் 12 மில்லியன் மெட்ரிக் இயற்கை எரிவாயு தருவதாக ஒப்புக் கொண்டார் முகேஷ். தன்னால் தர இயலாத பட்சத்தில் வெளியில் இருந்தாவது வாங்கி தருவதாக கூறினார்.



தற்போதைய நிலையில் அனிலுக்கு ஒரு யூனிட் ரூ110 சப்ளை செய்யும் பட்சத்தில் உற்பத்தி விலையில் 40 சதம் குறையும் வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் வருடத்திற்கு 1லட்சம் கோடி தனது நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படும். இதனை ஒரு போதும் தன்னால் அனுமதிக்க முடியாது என
திட்ட வட்டமாக மறுக்கிறார் முகேஷ்.இந்த உடன் பாடு சரி செய்யப் பட்டால் அனிலுக்கு வருடத்திற்கு 75 ஆயிரம் கோடி லாபம் கிடைக்கும். மேலும் குறைந்த விலையில் மின்சாரம் தயாரிக்கலாம். தனது நிறுவனங்களுக்கு தங்கு தடை இல்லாமல் சப்ளை செய்யலாம் என மன கணக்குகள் குறுக்கும் நெடுக்குமாக ஓட பிரச்சனை நீதி மன்றம் சென்றது.வழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம், கையொப்பம் இட்ட படி எரிவாயு சப்ளை செய்ய
முகேஷிற்கு கட்டளை இட்டது."நாட்டாமை தீர்பை மாத்தி சொல்லு" என உச்ச நீதி மன்றம் சென்றார்.
தற்போது என்.டி.பி.ஸிக்கே 4.2 டாலர் விலையில் தன்னால் அளிக்க முடியுமா? என சந்தேகம் எழுப்பியுள்ளார். முடியுமா?முடியாதா? என்பதெல்லாம் அரசு அதிகாரிகளுக்கும் , அரசியல் வாதிகளுக்கும் தெரிந்த நிலையில் பொதுமக்களாகிய நாம் பாதிக்கப் படுகிறோம் என்ற உணர்வில்லாமல்,ஏதோ கிரைம் படம் பார்ப்பது போல அன்றாட தினசரிகளில் வரும் துண்டு செய்திகளை படித்து விட்டு ,வாய் கிழிய பேசி நம் அறிவு ஜீவி தனத்தை மற்றவர்களிடம் பறைசாற்றி விட்டு ஏமாந்து கொண்டிருக்கிறோம்.என.டி.பி.ஸிக்கு தர்ம சங்கடம், நெருக்கடிகள் அதிகரிக்க தானும் தன் பங்கிற்கு உச்ச நீதி மன்றம் சென்றது. நாமிருவரும் சமாதானம் செய்து கொள்வோம், என முகேஷ் பழம் விட்டார் .உலக வரலாற்றில் முதன் முதலாக தனியாருடன் அரசு நீதிமன்றத்தை புறக்கணித்து விட்டு சமரசம் பேச துவங்கியுள்ளது.இதற்கு அரசியல் தலை ஈடுகளே காரணம்.
அனிலும் சரி முகேஷூம் சரி அரசியல் பல மிக்கவர்கள். முகேஷ், காங்கிரஸையும் ,பி.ஜே.பி யையும் அழைத்து வந்தால் ,அனில், அமிதாப்பையும், சமாஜ்வாடியையும் அழைத்து வருகிறார். காங்கிரஸோடு தனக்குள்ள பூசலை அனில் பிரச்சனையில் ஏற்றி குளிர் காய்கிறது சமாஜ்வாடி கட்சி.அதிரடி திருப்பமாக ,அரசோடு முகேஷ் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம் செல்லாது,அதன் பின்னால் பல சதிகளும், கையூட்டும் உள்ளதாக தனது நிறுவன அதிகாரி பிரசாத் மூலம் எல்லா பத்திரிக்கைகளுக்கும் அறிக்கை மூலமாக விளம்பரப்படுத்தினார் அனில். இப்பிரச்சினை இப்போது மன் மோகன் சிங் வரை சென்றுள்ளது.கம்யூனிஸ்ட்கள் குரல் எழுப்புகின்றன.தனி மனித பிரச்சனைக்கு பிரதமரின் தலை யீடு தேவைதானா? என்ற குரல் எங்கும் ஒலிக்கிறது. படுகை பகுதியில் தனது அண்ணன் 45 ஆயிரம் கோடி செலவிட்டதாக பொய் கூறுகிறார். இதை மத்திய அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் ,என்ற அனிலின் வேண்டுகோளுக்கிணங்க பிரதமரின் ஆணைப்படி ,இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ஆய்வு மேற் கொண்டார்.அலுவலகத்தில் அனைத்து கணக்குகளும் மாயமாகிப் போனது.திடுக்கிட்ட அதிகாரி, வெறும் கையோடு வந்ததற்கு, ஒரு கப் "சாயாவும் சமோசாவும்" சாப்பிட்டுவிட்டு அலுவலகம் திரும்பினார்.
தனிமனிதரான முகேஷ் எப்படி கிருஷ்ணா-கோதாவரி படுகையில் வாயு வளம் இருப்பதாக கண்டறிந்து தெரியப்படுத்தினார்.அரசு செய்ய வேண்டிய ஆய்வை இவரால் எப்படி நடத்த அனுமதிக்கப்பட்டது? இது முதல் கேள்வி. இரண்டாவதாக, மிக குறைந்த விலையில் தயாரிக்கப்படும்
மின்சாரம் பொது மக்கள் உபயோகத்திற்கு தருவாரா? அல்லது அனில் தானே வைத்துக் கொள்வாரா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் நம் மனதில் எழுகிறது .பதில் தான் இல்லை!!
1960 களில் குஜராத்தில் எண்ணை வளம் கண்டறியப்பட்ட போது அப்போதைய பிரதமரான நேரு அங்கு நேரில் சென்று உறுதிபடுத்திக்
கொண்டு பாராளுமன்றத்தில் அறிவித்தார். அந்த நேர்மை தன்மையும், உண்மை தன்மையும் தற்போது என்னவானது? இயற்கை வளங்கள் குறித்து சரியான பாதுகாப்பு சட்டங்களோ, அறிக்கைகளோ அல்லது விழிப்புணர்வோ இல்லாமையால் ஆங்கிலேயரை நம் நாட்டிற்குள் கொண்டுவந்து சேர்த்தது. இப்போது அவர்கள் போய், நம்மவர்களே கொள்ளையடிக்கும் தொழிலில் இறங்கி விட்டனர்.புதையல் என்ற பெயரில் கடுகளவு தங்கத்தையோ கட்டைவிரல் அளவு சிலையையோ சாமானியன் எடுத்தால் அவனை தேடி போலீஸ், தணிக்கை அதிகாரி, அகழ்வாராய்ச்சி அதிகாரி என ஒரு படையே வரும். அம்பானியும், டாட்டாவும், பிர்லாவும் புதையல் கொள்ளையில் ஈடுபட்டால் மானியம் தந்து மலர் சூடுகிறது இந்த அரசு! இத்தகைய நிகழ்வுகள்
"அக்கிரமங்களை நியாயப்படுத்தும் காலமிது" என்ற ஜார்ஜ் ஆர்வலின் வரிகள்தான் என் நினைவுக்கு வருகிறது.
அன்றாடம் அம்பானிகள் வணங்கும் திருப்பதி வெங்கடேச பெருமாள் தான் அவர்களுக்கு நல்ல புத்தி தர வேண்டும்."காசு எங்களுக்கு லட்டு உங்களுக்கு "என்று பொது மக்களை ஏமாற்றி விடாதீர்கள் என்ற அறிவுரையையும் அவர் தான் வழங்க முடியும்.
kannan233@gmail.com எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
Best regards,
--
walk without feet fly without wings think without mind

No comments:

Post a Comment