Saturday, August 29, 2020

 ராஜ நாகம் --------ஆசிய அழகு






                  மனித பரிணாம வளர்ச்சி,அவன் உருவாக்கிய சமுதாய தோற்றம் அதில் இடம் பெறும் பல்வேறு நிகழ்வுகள் என பல கோணங்களில் சுவைபட ஆராய்ந்த என் மதிப்புக்குரிய ஆய்வாளர் டெஸ்மாண்ட் மாரீஸ் உயிரினங்களின் பங்கீடு அவை மனிதனுக்குள் உருவாக்கிய தாக்கம் குறித்தும் மிக நீண்ட கட்டுரை எழுதியுள்ளார் .அதில் அவர் கூறும் ஒரு தகவல் என்னை மிகவும் ஆச்சரியத்திற்கு உட்படுத்தியது .மூன்று நான்கு வயது குழந்தை யானையை பார்த்தவுடன் ஆச்சரியம் தோய விரிந்த கண்களுடன் அதன் துதிக்கையை பிடிக்க முயன்றதாம். அதே சமயம் நாகப் பாம்பை பார்த்தவுடன் ,அதை நெருங்க தயக்கம் காட்டியது. சில நிமிடங்களுக்குப்பின் தன் அருகில் இருந்த குச்சியை அதன் மீது வீசி எறிந்தது. அதாவது யானையோடு நேசத்தையும் பாம்போடு துவேசத்தையும் காட்டும் அக்குழந்தையின் பண்பு அதன் குரோமோசோம்களோடு பதிந்து வந்துள்ளது என்பதை நிரூபிக்க முயல்கிறார் மாரீஸ்.
            ஒக்கலஹாமா பல்கலைக்கழக, ஊர்வன குறித்த ஆய்வு மாணவனான டேரில் மாண்ட் ,பாம்பின் குட்டிகள் சாலைகளை கடப்பதில்லை என தீர்மானமாக எழுதிய கட்டுரையை நான் படித்தேன். சற்று யோசித்து பார்க்கும் போது ஓரிரு நிகழ்வுகள் அன்றி பெரும்பாலும் பாம்பின் குட்டிகளை சாலையில் நாம் பார்ப்பது அரிது . நகர்மயமாக்கப்பட்ட நம் சூழல் பாம்பினத்தையே அப்புறப்படுத்திவிட்டது என்பது மற்றுமொரு நிதர்சனம். பாம்பினத்திற்கு மனிதனைக் கண்டவுடன் ஒதுங்கிப் போகும் எண்ணமே பிரதானமாக தலைத் தூக்கும். கட்டாயச் சூழலில் மட்டுமே அவை தன்னை காத்துக் கொள்ளும் பொருட்டு கடிக்க முயல்கிறது.


              பாம்பினத்தின் மிகவும் கம்பீரமான, அழகும் ,ஆச்சரியமும் பயமும் ஒருசேர ஊட்டக் கூடிய ராஜநாகத்தை சென்ற வருடம் முட்டுக்காடு முதலைகள் சரணாலயத்தில் பிடிபட்டு கூண்டில் அடைக்கப்பட்டிருந்தை காண நேர்ந்தது. அதன் அனைத்து தன்மைகளையும் இழந்து மிகவும் சோர்வான நிலையில் பார்த்தது இன்றளவும் மிகுந்த வேதனை தருகிறது.
              உலகில் மிகவும் வீரியமான விஷமுடைய பாம்பு வகைகளில் ராஜநாகம் முதலிடம் பிடிக்கிறது. ஆப்பிரிக்காவின் பிளாக் மாம்பா வகையை விட ஒன்றரை மடங்கு அதிக வீரியம் கொண்ட இவ்வகை பாம்புகள் இன்று அழியும் நிலையில் உள்ளது. இதை ஐநாவின் உயிரின காப்பக அமைப்பு அழியும் நிலையிலுள்ள உயிரினம் என அறிவித்துள்ளது. "ஆசியாவின் அழகுப்பாம்பு " என நான் அழைக்கும் இவ்வகை கேரள கர்நாடக காடுகளில் வாழ்கின்றன. தமிழகத்தில் இவை அங்கொன்றும் இங்கொன்றுமாய் தென்பட்டாலும் கிட்டத்தட்ட முற்றிலும் அழிந்தே போய்விட்டது எனலாம். சுமார் 18 அடி நீளமும் ,6--9 கிலோ எடையும் கொண்ட இப்பாம்புகள் கடித்தால் 15 நிமிடத்தில் மரணம் நிச்சயம் என்கிறது பாம்பியல் துறை. ஒரு முறை கொத்தும் போது சுமார் 600 மி.கி விஷத்தை உமிழ்கிறது. இது 60 நன்கு வளர்ந்த மனிதனை அல்லது ஓர் முதிர்ந்த யானையை கொல்ல போதுமானது.  இதன் விஷம் பிற பாம்புகளின் விஷத்தை விட சற்றே வீரியம் கூடுதலாக இருப்பினும் ,அதிகபட்ச மிரட்சி, பயம் போன்றவை இதய படபடப்பை துரிதப்படுத்தி விஷத்தை வெகு சீக்கிரத்தில் நரம்புகளின் ஊடாக கொண்டு சென்று மூளை ,இதயத்தை செயலிழக்கச் செய்கிறது என்கிறார் கௌரி சங்கர். இவர் புகழ் பெற்ற உயிரின ஆய்வாளரான ரோமுலஸ் விட்டேகரின் மாணவராவார். தனது குருநாதரோடு இணைந்து ராஜநாகங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்பவர். அகும்பே ஆய்வு நிறுவனம் என்ற பெயரில் பாம்பினங்களை பாதுகாக்கும் அமைப்பை விட்டேகருடன் இணைந்து ,அமைத்து கர்நாடகத்தில் பரவலான விழிப்புணர்வை மாணவர்களிடம் பரப்பி வருகிறார். உண்மையில் இவை மனிதர்களை கடிப்பது அபூர்வம். கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை 4 பேர்களை மட்டுமே கடித்துள்ளது என்கிறது ஓர் ஆய்வறிக்கை.
                   காடுகள் அழிப்பினால் இவை பலமுறை வீடுகளுக்குள் நுழைந்து விடுகின்றன. பலத்த தாக்குதலுக்கு ஆளாகி பல இறந்தும் ,சில ஊனமுற்றும், எஞ்சிய சில பிடிபட்டு காடுகளில்அல்லது வேறு பகுதிகளில் கொண்டு சென்று விடப்படும் போதுமிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றன. காப்பகங்களில் உள்ளவையும் இது போன்ற மன உளைச்சலிலிருந்து தப்புவதில்லை. தங்கள் எல்லைகளை மறந்து, உணவுக்காக திக்கு திசை தெரியாமல் அலைந்து பிற பாம்பினங்களோடு சண்டையிட்டு ,மிகக் குறுகிய வயதிலேயே உயிரிழக்கின்றன என்கிறார் கௌரி சங்கர். பிடிபடும் அல்லது இடமாற்றத்திற்கு உட்படும் ராஜநாகங்கள் குறித்து ஆய்வு நடத்தியுள்ளார். அதில் அவைகளின் தலையில் ரேடியோ சிப் பதித்து அவற்றின் நடமாட்டம், எதிர் கொள்ளும் பிரச்சினை போன்றவற்றை ஆய்ந்து அறிக்கை சமர்பித்துள்ளார். அதில் அவை நிம்மதியற்று ஒரு சொட்டு தண்ணீர் அருந்த சுமார் 30 கி.மீ தொலைவு கூட ஊர்ந்த வாறே உள்ளதை பதிவு செய்துள்ளார். மிகுந்த கோபம், பசி, அயர்ச்சி அவற்றின் இறப்புக்கு வழி வகுக்கின்றன என்பது அவரது அறிக்கையின் நிறைவுப்பகுதியாக உள்ளது.
           ராஜநாகங்கள் ,தன் வாயை இயல்பை விட ஐந்து மடங்கு திறக்கும் வல்லமை கொண்டது. வாய்ப்பகுதியைச் சுற்றி அமைந்துள்ள சவ்வுகள் மிகுந்த நெகிழ்வுத்தன்மை கொண்டது .எனவே தான் இவைகளால் எவ்வளவு பெரிய இரையையும் விழுங்க முடிகிறது. பாம்பினங்களில் பாம்புகளையே தனது உணவாக கொள்ளும் ஒரே இனம் ராஜநாகம். குறிப்பாக சாரைப்பாம்புகளையே அதிகமாக உணவாக்கிக் கொள்கிறது. சாரைப்பாம்புகள் கிடைக்காத சமயத்தில் மட்டுமே இவை மற்ற பாம்புகள், சிறு உயிரனங்களான ஓணான் ,தவளை, சிறு குருவிகளை விருப்பமில்லாவிட்டாலும் இரைக்காக உட்கொள்கிறது. பொதுவாக  உணவாக மாறும் பாம்புகள் ராஜநாகத்தை கண்டவுடன் ,பதற்றத்தில் எதிர்ப்பை விட்டுவிட்டு தாமாகவே இறப்பை ஏற்றுக் கொள்வது போல் தோன்றும். ஒருமுறை நன்கு உண்ட பின் பல நாட்களுக்கு இவை உணவெடுப்பதில்லை. அதிக தண்ணீர் வளமும் ,அடர் வனப்பகுதியும் இவை வாழ வசதியாக உள்ளன. ராஜநாகம் உள்ள வனம் ,"பயோடைவர்சிட்டி" கொண்ட வனம் என்கிறார் விட்டேகர்.


              நன்கு வளர்ந்த ஓர் ஆண்பாம்பு கிட்டத்தட்ட 10 கி.மீ பரப்பளவை தனது ஆளுகைக்கு உட்படுத்திக் கொள்கிறது. குறைந்தது மூன்று பெண் பாம்புகளை தனது இணையாக்கிக் கொள்ளும். பருவ காலங்களில் அதாவது ஜனவரி முதல் ஏப்ரல் வரை , இவை உறவுக்கு தயாராகிறது. அப்போது பெண்ணும் ஆணும் தனது உடலில் புழை பாகத்திற்கு கீழ் அமைந்துள்ள சுரப்பி மூலம் ஒருவித நறுமண நீரை சுரந்த வாறே செல்லும் அதை நுகரும் எதிர் இனம் தன் இணையை நாடும். சுமார் 500 முறை பின்னிப் பிணைந்து நடனமாடும். அப்போது அவைகள் மூர்க்கமாகவே இருக்கும். எதிர் வரும் அனைத்து உயிரிகளையும் விஸ்ஸ் என்று ஒலியோடு , தனது வாயினால் வௌிவிடும் மூச்சின் மூலம் மிரளச் செய்யும். தவிர தனது உடல் பாகத்தில் முக்கால் பங்கு மேலெழும்பி நிற்கும் போது யானை போன்ற பெரிய உயிரினமே பயங்கொண்டு விலகிச் செல்லும்.
                உடலுறவுக்கு போட்டியிடும் பிற ஆண்கள், தங்கள் உயிரை பொருட்படுத்தாது நடனப்போட்டியில் பங்கேற்கும். தோற்கும் நிலையில் உள்ள பாம்புகளை வெற்றி நிலையில் உள்ளவை விஷத்தை உட்செலுத்தாது கொத்தி விரட்டும். பின் தன் சிறிய ஆண் குறியை பெண்ணின் புழைக்குள் சுமார் 50 முறை உட்செலுத்தி பின் விந்தை வெளிவிடும். தன் காதலுக்கு உட்படாத பெண்கள், பலசமயம் ஆண்களால் கொல்லப்படுகிறார்கள் என்பது தான்  வேதனையான  நிகழ்வு. ஏதோ ஒருசூழலில் பெண்கள் உட்படாத போது ஆணானது மிகுந்த கோபம் அடைகிறது. அப்போது காமமும் கோபமும் ஒன்று சேர ,அதன் இமையில்லா பெரிய விழிகள் பிதுங்கி மிரட்சியூட்டும் விதமாக வௌியில் தெரிய, பெண்ணை கடும் கோபத்துடன் கடித்து குதறி தனது அத்தனை விஷத்தையும் உட்செலுத்தும்.  பெண்ணானது நரம்பு மண்டலம் முழுதும் பாதிப்படைந்த நிலையில் அங்கேயே இறந்து விடுகிறது. அப்போதும் கோபம் தணியாத ஆண் அதை விழுங்க முற்படும். பல சமயம் முக்கால் பங்கு விழுங்கிய பிறகு  அதை கக்கி விடும். பிறகு எதிர்படும் பிற பாம்புகளையும் தாக்கி உணவாக்கிக் கொண்டு அருகிலிருக்கும் மரங்களின் உச்சியில் அமர்ந்து ஓய்வெடுத்து அமைதியடைய முயற்சி செய்கிறது. பொதுவாக எந்நேரமும் மரத்தின் உச்சியில் அமர்ந்திருப்பது இதன் சுபாவம். இவை எப்போதும் பழிவாங்கும் குணமுடையவை.  தன் இணையை கொன்றவர்களை பழிவாங்கவே இவை இவ்வாறு இருக்கின்றன என்பன போன்ற கற்பனை கதைகளும் உண்டு.
                     பாம்பினத்தில் கூடுகட்டி முட்டையிடும்  சிறப்பு குணம் இவற்றிர்க்கு மட்டுமே உண்டு. பெண் கருவுற்ற நிலையில் சதுப்பு நில பகுதியில் இலை தழைகளால் கூடுமைத்து அதில் முட்டையிடும். இதற்கு ஆணும் துணையாக இருக்கும்.  20--40 முட்டைகள் வரை இடும்.கூட்டின் அருகிலேயே இருந்து  தாய் அடைகாக்கும். சுமார்  90 நாட்களுக்கு பின் குட்டிகள் வௌி வருகின்றன. குட்டிகள் வௌிவருவதை உணர்ந்ததும் தாய் அவ்விடம் விட்டு அகன்று இரை தேட சென்றுவிடுதால் தன் குட்டிகளை இவை இரையாக்கி கொள்வதில்லை. முட்டையிலிருந்து வௌி வந்த குட்டிகள் தாயைப் போலவே அதிகபட்ச விஷத்தை கொண்டிருக்கும். சிறிய வெட்டுக்கிளிகள், பட்டாம்பூச்சிகள், போன்றவற்றை உணவாக்கிக் கொள்ளும். இயற்கை சீரழிவு, கழுகு, வல்லூறு போன்ற பறவைகளின் தாக்குதலிலிருந்து தப்பிய 10--15 குட்டிகளே வளர் நிலையை அடைகின்றன. முதிர்ந்தவை , நடுவயது பாம்பை போருக்கு அழைத்து தன் எல்லையை நிலை நிறுத்திக் கொள்ளும் .சுமார் 20 வருடங்கள் வாழும் ராஜநாகங்கள் தன் முழு வாழ்நாளையும் சுகமாக கழிக்கின்றதா? ......சந்தேகம் தான்....!
                  ஆஸ்டின் ஸ்டீவன்ஸ் , என்ற புகழ் பெற்ற பாம்பின ஆய்வாளர், ஆசியப்பகுதி உயிரினமான இவ்வகை பாம்புகள் காடு அழித்தலாலும், சுற்றுச் சூழல் மாறுபாடாலும் அழிவுக்கு உள்ளாவதை ஒவ்வொரு கட்டுரையிலும் குறிப்பிடத் தவறுவதில்லை. இவர் பர்மா, நேபாளம், தவிர வட கிழக்கு பகுதிகளான சிக்கிம், மேகாலயா, திரிபுரா ,மணிப்பூர், போன்ற இடங்களின் காடுகளில் அலைந்து திரிந்து ராஜ நாகங்களின் வாழ்வை மிகுந்த துணிச்சலுடன் பதிவு செய்துள்ளார். 65 வயது நிரம்பி, இதுவரை 1306 முறை விஷப்பாம்பு கடிக்கு ஆளாகி உள்ளார். ஓர் ஆசை இவருக்கும் உண்டு!
                 இந்திய கலாசாரத்தில் நாக பஞ்சமி, பாம்புகளை வணங்கும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இன்று முட்டையும் பாலும் வைத்து வணங்குகின்றனர். பாம்புகள் ஒருபோதும் முட்டைகளையோ பாலையோ உணவாக்கிக் கொள்வதில்லை சமுதாயத்தில் நிலவி வரும் ஒரு மூட நம்பிக்கையே . இதே போல் பர்மாவில் வயதிற்கு வந்த இளம் பெண்கள் ராஜநாகங்களை வணங்குவதோடல்லாமல் அவற்றின் தலையில் முத்தமிட்டால் தனக்கு அழகிய மணவாளன் கிடைப்பார் என்ற நம்பிக்கையும் கொண்டுள்ளனர். இதில் சுவாரசியமான விஷயம் என்னவெனில் அந்த ராஜநாகங்களை பெண் பாம்பு பிடாரர்களே கொண்டுவருவர். இந்நிகழ்ச்சியை நேரில் கண்ட ஆஸ்டின் ஸ்டீவன்சுக்கு தானும் ஒரு முறையேனும் உயர எழும்பி நிற்கும் ராஜநாகத்தின் விரிந்த தலையை முத்தமிட வேண்டும் என்றஆசை தான் அது. பர்மாவில் அதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத சூழலில் திருவனந்தபுரம் வந்தவருக்கு பிரபாகர் என்றொரு இளைஞரின் உதவியோடு ராஜநாகத்தை நேருக்கு நேர் சந்திக்கம் வாய்ப்பு கிடைத்தது. பலத்த முயற்சிக்கு பிறகு பாம்பை தன்வசப்படுத்திய ஆஸ்டின் தன் ஆசை தீர அதன் தலையில் முத்தமிட்டார். முத்தமிட்ட கையோடு அதை நேஷனல் ஜியோகிராபிக் சேனலிலும் வௌியிட்டார் வலை தளத்தில், யூ--டியூபில் நாம் காணும் போது நமக்கு சற்று மிரட்சியாகத்தான் உள்ளது!
kannan233@gmail.com                 எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா

படங்கள் உதவி----  இணையம் 

No comments:

Post a Comment