சிங்க நடை போட்டு வாடா
----------------------------------------------------
கண்ணா மணிவண்ணா
கோகுலத்தின் குல விளக்கே
ஐயிரு திங்கள்
அன்னையிவள் கருவாக்கி
காத்து நிற்கின்றேன்
அற்புதம் காட்டவே
அழைக்கின்றேன் நானுமுன்னை
வெண்ணையும் பாலும்
விருப்பமுடன் தந்திடுவேன்
தளிர் நடை போட்டாலும்
துணிந்து நீயும் வாடா
ஊழல் எனும் பூதகியின்
உயிர் பறிக்கவே
உடனே நீயும் வாடா
லஞ்சம் எனும் காளிங்கனை
வஞ்சம் தீர்க்கவே
விரைந்து நீயும் வாடா
சதங்கைகள் சலசலக்க
சடுதியில் நீயும்
சதிராடி வாடா
அன்றோ
கெளரவர்கள் நூறு தானே
இன்றோ
பல நூறாயிரம் ஆகிடுதே
அருச்சுனன் சோர்ந்திடாமல்
அறம் காக்கவே
புதிய கீதை பாடிட நீயும்
புத்தொளியாய் வாடா
அக்கினிக் குஞ்சினை
நெற்றியில் வைத்திட்ட
சுந்தரி அவள் உன்
சோதரி மணவாளன்
துணைநிற்பான்
நெஞ்சுறுதி கொண்டு நீயும்
நெடிய பயணம்
துவங்கிடவே வாடா
தரணியின் மானம் காக்கவே
தளிர் நடை போட்டது போதும்
தயங்காமல் நீயும்
சிங்க நடை போட்டு
செரும் பகை அறுக்க
வாவா கண்ணா.....!
எழுதியது----- ரஞ்சனா கிருஷ்ணன்
நாள் --------10.08.2010
No comments:
Post a Comment